என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
    • சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    • டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    • ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையைில் இந்தியா கூட்டணி, NDA-வை எதிர்கொள்கிறது.
    • தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாருக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் முன்னணி வகிக்கும் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) களம் இறங்கும். இதனால் பீகாரில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்பது ஏற்கனவே உறுதியான விசயம். அதேவேளையில் மாகா கூட்டணியில் (தற்போது இந்தியா கூட்டணி) யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே.டி. தொண்டர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜியிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதித் ராஜ் கூறியதாவது:-

    ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வேண்டுமென்றால் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் முகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கூட்டாக முடிவு செய்யப்படும். எந்தவொரு கட்சியின் ஆதரவாளர்களும், அவர்களுடைய கட்சித் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைமையகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்றார்.

    முதலமைச்சர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் நாங்கள் போட்டியிடமாட்டோம் என சில வாரங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்த நிலையில், உதித் ராஜ் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு உடனடியான ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது தேஜஸ்வி யாதவ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இதையடுத்து இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது காரில் வீடு திரும்பினார். இதனிடையே அவரிடம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எனக்கு ஓய்வே கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.

    • பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

    பப்புவா நியூ கினியா:

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    • இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.

    ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

    இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது.

    இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.

    • அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து கமல் பேசியதற்கு எதிர்ப்பு.
    • யூடியூப் சேனில் பேட்டியளிக்கும்போது கழுத்தை அறுத்துவிடுவேன் என பேசியதால் புகார்.

    சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதனம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூடிப் வலைத்தளத்தில் கமல்ஹாசன் கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்ந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சார்பில் சென்ன மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கபப்ட்டது.

    இதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எந்தவித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை, தற்செயலாக அவ்வாறு பேசியதாக கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.
    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது/Key decision expected in upcoming board meeting

    புதுடெல்லி:

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம்

    வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது.

    தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

    • ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார்.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

    இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ரேஸர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
    • உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

    அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.

    அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.

    புதுடெல்லி:

    சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூன் மாதம் 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
    • தற்போது 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

    உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

    வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.

    ×