என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • பிரேமலதா தாயார் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

    வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    பிரேமலதா தாயார் மறைவுக்கு முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக பொதுச்செயலாளர் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அம்சவேணி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

     

    • கடந்த 28ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
    • பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளன.

    குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகின. உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும்,

    முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறித்து அதற்கான தேர்வு நடைபெற்றது.

    • அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    • அப்போது, இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது புதினின் 73-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

    அப்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன், புதினின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புதினை அழைத்தார்.

    கடந்த வாரம் அதிபர் புதின் தனது இந்திய வருகையை உறுதிசெய்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெறும் வீரர்களுக்க 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு.

    2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது "முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என அறிவித்தார்.

    • முன்பதிவு செய்த பின், தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
    • டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தொகை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    ரெயில்களில் பயணம் செய்ய இந்திய மக்கள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லை என்றால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இவர்கள் டிக்கெட் ரத்து செய்துதான், மாற்று தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரியில் இருந்து, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. இதை இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    எனினும், மாற்று தேதிக்கான டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • காயம் காரணமாக பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ராவின் முடிவை ஆதரித்துள்ளார்.

    காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா முடிவு செய்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டி20 தொடரில் மட்டும் விளையாடுகிறார்.

    பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-

    வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து பும்ரா கவலைப்படுவதில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீசி, காயம் ஏற்பட்டிருந்தால் அதன்பிறகு அவரால் பந்து வீச முடியுமா அல்லது முடியாதா? என்பதை சொல்ல முடியாது. இது மோசமானது.

    அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். ஆசிய கோப்பை தற்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்த வரும் டி20 உலகக் கோப்பை வருகிறது. 2027-ல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பு. அணிக்கு விளையாட தயாராக இருக்கும்போதெல்லாம், நாட்டிற்கான சிறப்பாக செயல்பட விரும்புவார். அவர் காயம் அடைந்தால், எப்படி செயல்பட முடியும்?.

    இது நுட்பமான சூழ்நிலை. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அதில் இருந்து அவரால் குணம் அடைய முடியும். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஏனென்றால், ரன்-அப், பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது. அதனால், பும்ரா சரியான முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.

    • இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பள்ளி இடிந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்றபோது பாஜக எம்.பி. மீது கொடூர தாக்கு.
    • மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

    மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

    இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் எம்.பி.யை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை சென்று பாஜக எம்.பி.யை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.

    தற்போது துர்கா பூஜை காலம். பேரழிவு காரணமாக இந்த விழைவை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால், துர்கா பூஜை உரிய நேரத்தில் நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
    • இந்த உத்தரவு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.

    இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், நீதிபதி செம்மல் உட்பட 6 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது.
    • ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசின் சமூக நீதி ஆணையம் தலைமையில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.

    பல மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முழுமையாக நிறைவேறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் தொடர்ந்து பணி புரிந்து முழுமையான கணக்கெடுப்பு தரவுகளைப் பதிவு செய்யும் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த கணக்கெடுப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

    மாணவர்களுக்கு தசரா விடுமுறை காலத்துடன் இணைந்த சாதி கணக்கெடுப்பு விடுமுறை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
    • சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    • டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    ×