என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
    • மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

    புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.

    இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

    தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே..

    உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.

    அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!

    கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

    அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

    மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.

    மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.

    இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.

    1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?

    தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.

    ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.

    ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.

    எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

    கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.

    ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.

    மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.

    இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது!
    • இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.

    அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)

    தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடியார்.

    இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!

    இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அ.தி.மு.க. தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"!

    தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!

    தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!

    இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!

    கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 



    • கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
    • பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

    "சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    • பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது.
    • ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது

    இழப்பீடு

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டநெரிசலுக்கு ரெயில்வே துறையின் தோல்வியே காரணம் என மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    'உயர்மட்ட' விசாரணை

    இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகளின் திடீர் அதிகரிப்பு பீதியை ஏற்படுத்தியது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட ரெயில் நிலையத்தில் நிலவிய பல்வேறு குளறுபடிகளே காரணம் என சம்பவத்தை நெரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

     தாமதமான ரெயில்கள்

    மகா கும்பமேளாவிற்குச் செல்ல, ரெயில்களில் ஏற கூட்டம் கூடியிருந்தது. பிரயாக்ராஜ் செல்லும்  ரெயில்கள் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமடைந்து கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.

    பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி தாமதமாக வந்தன. ரெயில்களில் ஏறுவதற்காக பயணிகள், 12,13, 14வது நடைமேடையில் கூடியிருந்தனர்.

    ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் போர்ட்டர் (கூலி) ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 12வது பிளாட்பார்மில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் 16வது பிளாட்பார்மிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    எனவே பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது. மக்கள் ஒருவரை ஒருவர் மோதத் தொடங்கி எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் விழுந்தனர். நான் 1981 முதல் கூலியாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற கூட்டத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.

     

    தடுக்கப்பட்ட படிக்கட்டுகள்:

    கூட்டத்தை நிர்வகிக்க 14 மற்றும் 15வது பிளாட்பார்ம்களில் ஒரு படிக்கட்டு அடைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் தாமதம் தொடர்ந்ததால், படிக்கட்டுகளில் அதிகமான பயணிகள் கூடத் தொடங்கினர்.

    நெரிசல் அதிகமாகி, மக்கள் ரெயிலில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை நோக்கி முன்னே இருப்பவர்களை தள்ளினர். அந்தத் தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நடைமேடையில் கூட்டம் அதிகரித்ததால் மற்றவர்கள் மூச்சுத் திணறினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு மணி நேரத்துக்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை:

    ரெயில்வே தலைமை வணிக மேலாளர் கூற்றுப்படி, ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது. இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் காணப்பட்டது. நடைமேடை எண். 14 மற்றும் நடைமேடை எண். 16 அருகே உள்ள எஸ்கலேட்டர் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு.
    • நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.

    சென்னை :

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.

    நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?

    தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

    மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.

    தமிழ்நாடு பொறுக்காது! என்று தெரிவித்துள்ளார். 



    • கடந்த 2020 முதல் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காணாமல்போயினர்.
    • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர்.

    இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    மனுத்தார் தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் 'கோயா-பயா' போர்ட்டலைத் தவிர, பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்தும் நான்கு மாதங்களாக கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிந்தார்.

    மாவட்டந்தோறும் மனித கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    மத்திய அரசு கூற்றுப்படி, பீகாரில், 2020 முதல் 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    பீகாரைப் போலவே, ஒடிசாவிலும் 2020 முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 4,852 பேரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 2020 முதல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர். அதில் 45,585 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருப்பினும், 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.  

    • கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார்.
    • இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா' திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார். குறிப்பாக இவர் கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' படத்திலும், உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்திலும், இளையதளபதி விஜயுடன் 'மாஸ்டர்' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். அஜித்துடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில், அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு என்று நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

    கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், அஜித்துடன் படம் எப்போ பண்ணுவீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி கூறுகையில்,

    போற இடத்தில் எல்லாம் இந்த கேள்விய கேட்கிறார்கள். இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை. ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நடக்கறதா இருந்தது.. நடக்கவில்லை. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    இதையடுத்து எந்த படத்தில் நடிக்கிறதா இருந்தது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, படம் பெயர் சொல்ல வேண்டாம்... என தெரிவித்து படத்தின் பெயரை கூற மறுத்துவிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
    • அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழ் நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

    ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

    மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

    ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். கும்பமேளாவுக்கு செல்ல மக்கள் திரண்டு இருந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்தனர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் இருக்கிறது.


    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசின் உணர்வின்மையை வெளிப்படுத்துகிறது.

    பிரக்யராஜால் நடை பெற்று வரும் கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ரெயில்வேயின் அலட்சியமே இதற்கு காரணம்.

    தவறான நிர்வாகம், மற்றும் அலட்சியத்தில் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதை அரசும், நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    • சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
    • இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.

    அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மகனை தாய் கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் ஆதிராவில் நிகழ்ந்துள்ளது.

    ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரசாத்தை (35). துப்புரவு பணியாளராக இவர் பணி செய்து வந்தார். இவரின் தாயார் லட்சுமி தேவி (57). ஐதராபாத்,நரசராவ்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனது அத்தைகள், சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.

    ஐதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது அத்தைகள் இருவரை பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தனது மகனை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் பிரசாத் உயிரிழந்தார். உறவினர்களின் உதவியுடன் மகனின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார்.

    இதுதொடர்பாக தற்போது தகவலறிந்த போலீசார் பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயில் இருந்து மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஐபிசி சட்டம் 103 மற்றும் 238 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

    • மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
    • தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.

    திருப்பூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.

    மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.

    மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.

    மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.

    கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.

    ×