என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
    • மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மதுரை:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.

    மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?

    ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.

    இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது வழக்கமான ஒன்று.
    • பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்க தேசத்தை வருகிற 20-ந் தேதி சந்திக்கிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தேசியக்கொடி இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது.

    எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி, பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்.

    ஏற்கனவே பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • என் பெற்றோர் 2 ஏக்கர் நிலங்களை விற்று, உறவினர்களிடமிருந்து பணம் கடன் வாங்கினார்கள்.
    • ஏஜெண்டுகளால் முதலில் நான் மலேசியாவுக்குச் அழைத்துச்செல்லப்பட்டேன்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் நேற்று முன் தினமும் அமெரிக்க போர் விமானம் மூலம் நாடு கடத்தபட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.

     

    அவர்களில் பஞ்சாபை சேர்ந்த சவுரவ் என்ற இளைஞர் தனது நிலை குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது, "ஜனவரி 27 அன்று நான் அமெரிக்காவிற்குள் நுழைந்தேன். அமெரிக்காவிற்குள் நுழைந்த 2-3 மணி நேரத்திற்குள் நானும் என்னுடன் இருதந்வர்களும் போலீசாரால் பிடிக்கப்பட்டோம்.

    அவர்கள் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், 2-3 மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாங்கள் 15-18 நாட்கள் முகாமில் வைக்கப்பட்டோம். 

    எங்கள் பேச்சைக் யாரும் பொருட்படுதவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களை வேறு முகாமுக்கு மாற்றுவதாகக் கூறப்பட்டது. நாங்கள் விமானத்தில் ஏறியதும், எங்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறப்பட்டது.

    அங்கு செல்ல கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் செலவிட்டேன். இதற்காக என் பெற்றோர் 2 ஏக்கர் நிலங்களை விற்று, உறவினர்களிடமிருந்து பணம் கடன் வாங்கினார்கள். ஆனால் அதெல்லாம் சில மணி நேரங்களில் வீணானது. அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் தனது பயணம் குறித்து விவரித்த சவுரப், நான் டிசம்பர் 17 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினேன். ஏஜெண்டுகளால் முதலில் நான் மலேசியாவுக்குச் அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு நான் ஒரு வாரம் தங்கினேன்.

    பின்னர் அடுத்த விமானத்தில் மீண்டும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டேன். அங்கு நான் 10 நாட்கள் தங்கினேன். மும்பையிலிருந்து, நான் ஆம்ஸ்டர்டாமுக்கும், பின்னர் பனாமாவிலிருந்து தபச்சுலாவுக்கும்(Tapachula) அங்கிருந்து பின்னர் மெக்சிகோ நகரத்திற்கும் அழைத்துச்செல்லப்பட்டேன்.

    மெக்சிகோ நகரத்திலிருந்து எல்லையைக் கடக்க எங்களுக்கு 3-4 நாட்கள் ஆனது.. பிடிபட்ட பின் நாங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்தோம்.

    ஆனால் எங்கள் முறையீடுகளை யாரும் கேட்கவில்லை. எங்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் முகாமில் இருந்தபோது எங்கள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எங்களது குடும்பத்தை தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.   

    • பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டது.
    • சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டது.

    ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டது.

    பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் "தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்." என கூறியுள்ளார்.

    சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
    • பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, சமதளத்தை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை தான் பொது தளம்.

    * நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்.

    * தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

    * பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

    * நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?

    * அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியும் திணிக்கப்படவில்லை.

    * மும்மொழிக்கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

    * யார் அரசியல் செய்தாலும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

    • யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
    • கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது.

    அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இதுதவிர மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது. இது குறித்த சமீபத்திய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.

    இவரது கருத்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமே இல்லை என ஒருமித்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், புதிய யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறவும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசார் மற்றும் மாணவர் அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    • கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
    • இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியையும், கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.

    கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

    ஒரு திட்டத்தை கூட ஒதுக்கவில்லை. ஆனால் வாய்க்கூசாமல் வரி கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாநிலமும் திருப்பி கேட்பது அநியாயம் என்று சொல்லி இருக்கிறார். இது கண்டிக் கத்தக்கது. முதலமைச்சர் இதை கண்டித்துள்ளார்.

    எப்போதுமே தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். பேரறிஞர் அண்ணா சொன்னது. நாங்கள் எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை குறுக்கு வழியில் திணிக்க முயன்றாலும், அதை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

    நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக கூறினாலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

    இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா. ஆகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. புரிதல் இருக்கிறது.

    இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு. இங்கு இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து தமிழில் பல விஞ்ஞானிகள், டாக்டர்கள் உலக சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே அேதாடு இதை ஒப்பிட்டு கூறக் கூடாது. நிச்சயமாக மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    எனவே தமிழகத்திற்கு இருமொழி கொள்கையை பின்பற்றுவதற்கு தேவை யான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது
    • இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது

    ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனதிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது நடிகரின் பெயர் சூட்டப்பட்டது

    புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.

    இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகனும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.

    சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை'யை நிறுவினார்.

    ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

    'ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    • துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார்.
    • வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் வெங்கி அட்லூரி. சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.

    இதை தொடர்ந்து வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தனுஷ் நடிப்பில் ஹானஸ்ட் ராஜ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் தயாரிக்க படப்பிடிப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு ஆட்டோ மொபைல் இஞ்சினை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சூர்யா தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் . திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல்வரோடு எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும், டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியேற்பு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

    • இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது.
    • சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.

    புதுடெல்லி:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும், இந்த ஆட்டம் ஒரு தலைபட்சமாக இருக்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்தியா மிகவும் பலமான அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி தழுவி 3 நாடுகள் போட்டி தொடரை இழந்தது.

    மேலும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதில் தெளிவாக இந்திய அணியே மேலோங்கி இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிய பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மை தான். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை. கேப்டன் பதவியில் ரிஸ்வான் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்.

    எனவே எல்லா வகையிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட போட்டியாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    • தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.
    • முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில்,

    சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

    தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தி.மு.க. அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளார்.

    ×