என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்த நிறுவனத்தால், சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு ஆறே மாதங்களில், இத்திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்?
- தமிழக மக்களிடத்தில் கூறுவதற்கு தற்போது நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை:
மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்கச் செய்யுங்கள் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்?
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்திய நீங்கள், இன்று ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு தமிழ் மொழிக்காக ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யாமல் ஏன் இன்னும் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தங்களிடத்தில் வைத்து வந்த கோரிக்கையை வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அவர்களது தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ் மொழியில் நமது மாணவர்களை படிக்க வைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை, தமிழக மக்களிடத்தில் கூறுவதற்கு தற்போது நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பினராயி விஜயன், சித்தராமையா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பகவந்த் மான் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
- பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். மேயர் ஆர்.பிரியா புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், அதிகரித்து வரும் போக்குவரத்து, நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது.
- கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.
- தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.
சென்னை:
சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு உள்ள பஜார் சாலையிலும், ஜீனிஸ் சாலையிலும் ரூபாய் 2.39 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால் கட்டும் பணியினைச் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சைதை மேற்கு பகுதி தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 முதல் 5-ந்தேதி வரை பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார்.
இதில் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இதற்கு முன்பு எல்லாம் 4, 5 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாரக்கணக்கில் மழைநீர் தேக்கம் என்பது இருக்கும்.
ஆனால் கடந்த ஆண்டு மிகப்பெரிய மழை ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தும்கூட 24 மணி நேரத்தில் மழை பெய்த சுவடு தெரியாத அளவிற்கு சென்னை மாநகரம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது.
சைதாப்பேட்டையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட சுப்பிரமணிய தெரு, ஜோதி ராம் நகர், சாரதி நகரில் பெரிய அளவில் மழை பாதிப்புகள் இருந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் எந்த பகுதியிலும் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் நடத்தி இருப்பதற்கு ஆதரவு பெருகி இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு எங்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள், ஏற்கனவே ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற பொழுது ஒரு கோடி பேர் சேர்ந்தனர் என்று கூறினார்கள் ஆனால் எவ்வளவு வாக்கு வந்தது ஒரு கோடி உறுப்பினர்கள் வாக்களித்தார்களா?
தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
- தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சனையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். 3-வதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியை தந்தார். ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தற்போது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர், அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது? என்று பார்க்க வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்று தான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை தி.மு.க. அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலை தான் தற்பொழுது உள்ளது. குழந்தைகளின் கல்வியில் விளையாடக் கூடாது.
மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். வேறு திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவரிடம் கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒரு அமைச்சர் இப்படி கூறக்கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
துணை முதலமைச்சர் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு அதிக இடத்தை முதல்வர் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் புகைப்படங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதலமைச்சர் புகைப்படங்களும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் 2 படங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் மோடியின் படம் தான் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும். மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. கொடுப்பவர் படம் இல்லை. விநியோகம் செய்பவரின் படம் மட்டும் ரேஷன் கடைகளில் உள்ளது. தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக்கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?
* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.
* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.
* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?
* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.
* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?
* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.
- ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் தொடங்குகிறது.
- ஐ.பி.எல். தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும் ரபோது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்.
- அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து 20-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்
சென்னை:
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரியில், தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.
ஆனால், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க கூறி 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
அந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ள நிலையில், அரசு தேவையில்லாமல் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
இந்த தொகையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எதிர்மனுதாரர் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கும், மீதத்தொகையை சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் 15 நாட்களில் செலுத்த வேண்டும்.
தனி தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்.
அபராதத்தொகை செலுத்தப்பட்டது குறித்து வருகிற 20-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
- சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூஆர் குறியீடுகளை வழங்கினார். ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் பொதுமக்கள் காவல்துறையை எளிதாக அணுக இந்த க்யூஆர் குறியீடு உதவி புரியும்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல்துறை எஸ்ஓஎஸ் செயலியில் தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து அருகே உள்ள ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும்.
வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநர் உள்ளிட்ட தகவல்களை எளிதில் காவல்துறையினர் அறிய இந்த க்யூஆர் குறியீடு உதவிகரமாக அமையும்.
சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
க்யூஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ரோந்தின்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
- 5 மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். மேலும் 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வெயில் கொளுத்தும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூடத்துடன் இருக்கும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதனிடையே, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
- முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்.
உலகிலேயே முகத்தில் அதிக முடி கொண்டவராக இந்தியாவை சேர்ந்த 18 வயது இளைஞர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். லலித் படிதார் என்ற இளைஞர் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார்.
ஹைப்பர் டிரிகோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக லலித் படிதார் முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது. கின்னஸ் உலக சாதனை தரவுகளின் படி, உலகளவில் பதிவான சுமார் 50 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
முகம் முழுக்க அதிக முடி கொண்ட படிதார் தனது ஆரம்ப பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார். அப்போது, "முதலில் சில நாட்கள் நன்றாக இல்லை. எனது வகுப்பை சேர்ந்த சக தோழர்கள் என் தோற்றத்தைக் கண்டு பயந்தனர். காலப்போக்கில், அவர்கள் அவரது முகத்தில் உள்ள முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்," என்று கூறினார்.
"அவர்கள் என்னை பற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது, என்னுடன் பேசிய பிறகு, நான் அவர்களை விட வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வெளிப்புற தோற்றத்தில் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன், ஆனால் நான் உள்ளே எந்த வித்தியாசமும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
சிலர் தன்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை தான் என்று படிதர் கூறினார். பெரும்பாலானவர்கள் தன்னிடம் கருணை காட்டுகிறார்கள். ஆனால் அது நபருக்கு நபர் வேறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.






