என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் தீவிரவாத தடுப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்த சென்றனர்.

    அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில் அந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா என்பவர் துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பது தெரியவந்தது.

    மேலும் அவரின் உறவினர் ஒருவர் அதே குடியிருப்பில் 4-வது மாடியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீட்டின் சாவியை பெற்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6. கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



    மேலும் அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சிக்கிய பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதை எண்ணுவதற்காக எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா, அவரது தந்தை மஹிந்தரஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்த சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி. சுனில் ஜோஷி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது.
    • ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.

    மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'ஆபிஸர் ஆன் டியூட்டி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    விண்வெளியில் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    வெறும் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். இந்த நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியது. இதையடுத்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாசாவின் #Crew9 பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சி! இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினர் விண்வெளியில் மனித சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளனர்.

    சுனிதா வில்லியம்ஸின் நம்பமுடியாத பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராடும் மனப்பான்மை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது பாதுகாப்பான வருகை விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகிற்கும் கொண்டாட்டத்தின் தருணம். அவரது தைரியமும் சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன.

    அவர்களை பூமிக்கு பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் ஒரு பெரிய நன்றி," என்று தெரிவித்துள்ளார்.

    • காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
    • இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் 56,000 பேர் உயிரிழந்த பின் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 உடன் முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்றுய காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹவுதிக்கள் ஏவுகணைகத் தாக்குதல் நடத்தினர்.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக ஹவிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

    அந்த ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் காசாவுக்கு ஆதாரவாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் பலமுறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதிக்களை ஒடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவின் கடுமையாக போராடி வருகிறது.

    • நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
    • ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில... 

    * சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.

    * சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.

    * மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    * 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.

    * சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    * பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.

    * 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.

    * முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.

    • நடுரோட்டில் கொலையை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடகாவில் நடுரோட்டில் ஒருவரை கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கலபுர்கி மாவட்டத்தில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தை கொட்டி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
    • அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.

    ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.

    காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

    இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
    • ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
    • ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    அடுத்த நாளில் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
    • இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காணும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருந்தார். இந்த குழுவினர் ஏற்கனவே அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.

    ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், சரண்டர் விடுப்பை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த ஆலோசித்து உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு இப்போது எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் நாளை (இன்று) எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒவ்வொரு துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் (19-ந்தேதி) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

    இது சம்பந்தமாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ள குறிப்பில், அரசு முன் வைத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்தி வேலை நிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அல்லது வேறு எந்த வகையான போராட்டங்களிலும் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். விதிகளை மீறுவதாகும்.

    எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதிகளை மீறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உங்கள் துறையின் அரசு பணியாளர்களின் வருகையை இன்று கவனமாக பதிவிட வேண்டும்.

    அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சேவை சங்கங்களால் நடத்தப்படும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதின் விளைவாக அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதப்பட வேண்டும்.

    பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் இந்த 'ஸ்டிரைக்'கில் பங்கேற்றாலும் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதியை எந்த அரசு ஊழியரும் மீறுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    விதிகள் 1973-ன்படி ஊழியர்களால் அங்கீகரிக்கப்படாமல், பணியில் இல்லாமல் இருந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.

    எனவே இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பணிபுரியும் ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் எடுத்து இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.
    • செங்கற்களை அடுக்கி ஸ்டம்புகளாகப் பயன்படுத்தினர்.

    இந்தியா- நியூசிலாந்து இடையே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்ததுடன் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.

    இப்படி சந்திப்பு, கூட்டம் என டெல்லியில் நேரத்தை கழித்த நியூசிலாந்து பிரதமர் இந்திய குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட்டி விளையாடியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    STAIRS தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி ஒரு பிரகாசமான தருணமாக இருந்தது. இதில் பிரதமர் குழந்தைகளுடன் மோதினார். செங்கற்களை அடுக்கி ஸ்டம்புகளாகப் பயன்படுத்தினர்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நியூசிலாந்து தூதுக்குழுவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரோஸ் டெய்லர் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8290-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    14-03-2025- ஒரு கிராம் ரூ.112

    ×