என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
    • பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

    கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

     

    காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.

    இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.

    ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.

     

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

     

    • மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை.

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அதுவும், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    ரூ.4,000 டிக்கெட் பிளாக்கில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிளாக்கில் டிக்கெட்டை விற்பனை செய்த நபரின் வீடியோ வெளியானதால் ரிசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே.
    • தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    விஜய்யுடன் 'ஜனநாயகன்', சூர்யாவுடன் 'ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    சல்மான்கான், பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன் போன்ற இந்திய திரை உலகில் பிரபல கதாநாயகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே தனக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கும், டிரோல்களுக்கும் பதில் அளித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறும்போது, பல முறை என்னை பற்றி டிரோல்கள் வந்துள்ளன. எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காலத்தில் மீம்ஸ்களிலும், சமூக வலைதளங்களிலும் நான் தொடர்ந்து எதிர்மறையாக பேசுகிறார்களே என்று நினைத்திருக்கிறேன். பின்னர் நம்மை டார்கெட் செய்கிறார்கள் என தோன்றியது. அது மட்டுமின்றி ஒருவரை சினிமாவில் இருந்து கீழே தள்ள சிலர் நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என புரிந்தது.

    எனக்கெதிரான டிரோல்களால் நானும் என் குடும்பத்தினரும் கடும் வேதனை அடைந்தோம். ஒரு கட்டத்தில் அதை ஒரு பாராட்டாகவும் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் யாராவது உங்களை கீழே பிடித்து தள்ள முயற்சிப்பதை உணர்ந்தால் நீங்கள் அவர்களுக்கு மேலே இருக்கிறீர்கள் என அர்த்தம்.

    என்னை பற்றி தவறாக டிரோல் செய்வதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். இந்த தகவலை அந்த சமூக வலைதளபக்க நிர்வாகியே டிரோல்கள் பரப்ப சிலர் பணம் தருகிறார்கள் என என்னிடம் தெரிவித்தார்.

    மேலும் உங்கள் மீதான டிரோல்களை நிறுத்த வேண்டும் என்றால், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். நான் ஏன் டிரோல் செய்யப்படுகிறேன் என்பது எனக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகிறது.

    மும்பை அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    • கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
    • பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

    மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையிலான போராட்டங்களை நடத்தின.

    அப்போது இஸ்லாமிய புனித எழுத்துக்கள் கொண்ட 'சதர்' துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், மத்திய நாக்பூர் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு வன்முறை வெடித்தது.

    குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறையைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் நாக்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் நேற்று முன்தினமும் சில பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

    இந்நிலையில் கலவரத்தின்பின் 6 நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீதமுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. எங்கும் பதற்றம் இல்லை. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாகப்பூர் தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அகம்குவான் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக சுரபி ராஜ் (வயது 33) இருந்தார். நேற்று அவர் மருத்துவமனையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.

    அப்போது நோயாளியின் உறவினர்கள் போல வந்த ஒரு கும்பல் திடீரென சுரபி ராஜ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுரபி ராஜ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் சுரபி ராஜின் அறைக்கு சென்றபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது கைகள், முகம் மற்றும் மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து 6 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அதே போல துப்பாக்கி சூடு நடந்த போதும் பெரிய அளவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமெரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரபி ராஜ் பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.
    • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகச்சிறந்த தலைவர்.

    ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பிரத்யேக பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக கட்சி சிறப்பாக இருக்க வேண்டும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அதிமுக, எனவே மீண்டும் பொருந்தலாமே.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகச்சிறந்த தலைவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது.

    பல திமுக எம்பிக்கள் இந்தியில் பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் முன் வந்து இந்தியை எதிர்க்கிறார்கள்.

    கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. காலம் மாறிவிட்டது. தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்கவில்லை. ஆனால் திணித்தால் நானே எதிர்ப்பேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
    • அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள "யோலோ" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

    அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான " ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை" பாடலும் வெளியிடப்பட்டது.

    இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

    Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸை தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல், திரை ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.

    நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்வில் நடந்தால் எனும் ஃபேண்டஸி தான் இந்தப் படத்தின் மையம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக, இப்படம் உருவாகியுள்ளது.

    இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

    இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

    படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.  

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்களை மட்டுமே எடுத்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.

    4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.

    6வது விக்கெட்டுக்கு ஹெட்மயர்-ஷ்உபம் துபே ஜோடி 80 ரன்களை சேர்த்துப் போராடியது. ஹெட்மயர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • டெஸ்ட் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு வரும் மார்ச்25 தேதி வெளியிடவுள்ளது

    • சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார்.
    • தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.

    கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.

    38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.

    ×