என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
    • ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.

    அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

    • ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
    • போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.

    சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.

    இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.

    மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் இன்று முதல் 29-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும்/ ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன்.
    • என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது.

    அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம்- அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக கடைசி வரை அசுதோஷ் சர்மா வெற்றிக்காக போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அசுதோஷ் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்சர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

    எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது என கூறினார்.

    • மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    • சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி ரத்த காயத்துடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் புகார் கூறியுள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த SFI மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கடுமையான கண்டிக்கத்தக்கவை.

    ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



    • பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
    • ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.

    இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.

    இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 -25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் ரயான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.

    பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, டென்ட் கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் கண்டுகளிக்க முடியும்.

    இந்தப் படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார். 

    • லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    • திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம்

    கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது.

    37 வயதான லோக்நாத் சிங் பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் லோக்நாத் சிங்கின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.
    • மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

    ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது.

    கூட்டுக் குழுவின் தலைவர் பிபி சவுத்ரி, ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024), யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஆகிட்டவற்றின் மீதான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்தது. இதற்கிடையே இன்று மதியம் 3 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×