என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் கானபெரென்ஸ் காலில் தொலைபேசியில் உரையாடினார்.

    இதன்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    பேச்சுவார்த்தையில், பரஸ்பர வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்புத் தலைவர்களும் வரவேற்றனர்.

    இது தவிர, உக்ரைனில் நீண்டகாலமாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

    மோதலுக்கு அமைதியான தீர்வு கண்டு ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.

    மேலும், அடுத்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை பிரதமர் மோடி அழைத்தார். 

    • ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாகின. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அதே பகுதியில் கடந்த செய்வ்வாய்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

    ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன. அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை 

    • 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
    • டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    புதன்கிழமை இரவு காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    இந்தத் தடை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையில், டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேபாள அரசாங்கத்தின் முடிவுக்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.   

    • இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
    • தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது

    இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக வாங்கும் புதிய BMW காருக்கு வரிகளில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ரூ.3.66 கோடி மதிப்புள்ள இந்த குண்டு துளைக்காத வாகனத்தின் மீது IGST மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை தள்ளுபடி செய்ய GST கவுன்சில் முடிவெடுத்தது.

    வழக்கமாக, இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.

    இருப்பினும், இந்த வாகனம் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று கருதிய GST கவுன்சில், ஜனாதிபதியின் வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான  சிறப்பு காரணத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது.

    இதன் மூலம், ஜனாதிபதியின் செயலகம் இந்த வாகனத்தை எந்த வரி சுமையும் இல்லாமல் வாங்கும்.

    தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது. இப்போது அந்த இடத்தை BMW செடான் நிரப்ப உள்ளது. 

    • கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன்.
    • கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள்.

    எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது.

    இதற்கிடையே அக்கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். முன்னதாக ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவரகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன்.

    பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி மேலிடம் மீது எனக்கு அதிருப்தி இல்லை. கூட்டணியில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன் " என்றார்.

    • நயினார் மகன், நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமித்து உத்தரவு.

    தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நயினார் மகன், நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு.

     

    • ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
    • சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

    இவர், கடந்த 1996- 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தபோது, தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது, அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2007ல் அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது.

    மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஆனால், துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது.
    • சூப்பர் 4 சுற்றில் மலேசியாவை இந்திய அணி 4-1 என வீழ்த்தியது.

    பாட்னா:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றை எட்டியது.

    நேற்று நடந்த போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் லோகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் நஸ்லேன் பேசுகையில்," ஆச்சரியமா இருக்கு. வாழ்க்கைல என்னென்னமோ நடக்குது. எங்கேயோ போயிட்டு இருக்கு. காலையில சூர்யா சார்- ஜோதிகா மேம் வீடியோ கால் பண்ணி படம் சூப்பரா இருந்ததுன்னு சொன்னாங்க" என்றார்.

    லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை, பாராட்டுகளை குவித்த 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

    புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.

    ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம் துரைராஜ், நிர்வாக தயாரிப்பு அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு தினேஷ், சண்டை காட்சிகள் மேத்யூ மகேஷ் உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக லெஜெண்ட் சரவணன் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே, லெஜெண்ட் சரவணன் தனது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்தும் லெஜெண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்," மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்" என்று குறிப்பிட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறமைசாளிகள் என்று குறிப்பிட்ட லெஜெண்ட் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 31-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்படும்.
    • இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலை குறையும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

    உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது.

    ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் உரையாற்றும்போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.

    தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறைக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.

    மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.

    8 ஆண்டுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர் என தெரிவித்தார்.

    ×