என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர்: TI Cycle 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள் வரை.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை: மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரெயில் நிலைய சாலை 5வது, 6வது, 7வது தெருக்கள்.

    • தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
    • ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?.

    மீனம்பாக்கம்:

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெறுவது என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.

    அப்போது நிருபர்கள், "ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?. தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவாரா?" என கேட்டதற்கு அவர், "எந்த ஓ.பி.எஸ்.?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

    • தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
    • விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.

    அதன்படி, இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது.

    விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

    • விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும்.
    • அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரும் இணைந்து திறந்துவைப்பர்.

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

    "கட்டிட பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 2500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு விரைவாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும். விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும். விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.



    மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த எய்ம்ஸ். 2028க்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிதிக்கு முதலில் தாமதம் ஆனது. முழுமையாகத் தயாராக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமரும், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திறந்துவைப்பர். " என தெரிவித்தார். 

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது. 

    பிப்ரவரி 28, அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளைத் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    • புதிய ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்குகிறது
    • வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர்களை தேர்ச்சி பெறச் செய்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தமிழக அளவில் அசாத்திய சாதனையைப் படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2026ம் ஆண்டுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமின் இயக்குநர் ச.வீரபாபு கூறியதாவது:-

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து, இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.


    கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரி வினாத்தாள்கள் பெற்று பயிற்சி செய்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, கடந்த மாதம் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் 500க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமியில் படித்தவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஆன்லைன் வகுப்புகள்

    இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    முன்பதிவு செய்க

    இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர, 'TNTET ONLINE COACHING-2026' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 7550151584, 7550151589, 7550053400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

    • 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி ஆலை
    • வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.6) தொழில், முதலீடு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மீச்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    "கும்மிடிப்பூண்டியில் MitsubishiElectric உற்பத்தி ஆலை. 2023-இல் MoU கையெழுத்தானது. இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல்! எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    • இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
    • இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது.

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனது டீக்கடை முன்பு இடையூறு அளிக்கும் வகையில் மது போதையில் இருந்தவர்களைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காலை முழுவதும் தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மதுரை போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    இன்று 06.02.2026-ம் தேதி தனசேகரபாண்டியன் என்ற செந்தில் 35, த/பெ முத்து சேர்வை, சாமநத்தம் கிராமம், மதுரை என்பவர் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சாமநத்தம் நெடுங்குளம் மெயின் ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி அருகே செல்வராஜ் என்பவருடைய காம்பளக்ஸில் உள்ள மேற்படி இறந்த தனசேகரபாண்டியன் செந்தில் என்பவரது டீ கடையின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்.

    மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக இன்று 06.02.2026 தொலைக்காட்சிகளில் அவரது டீ கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் கொலை செய்யபட்டதாக செய்திகள் ஒளிபரப்பபட்டு வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் இறந்த நபரின் குடும்ப பிரச்சனையினால் அடையாள தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டடுள்ளார் என்பது தெரியவருகிறது.

    இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது. இச்சம்பவம் அவரது குடும்ப பிரச்சனையின் காரணமாக நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் சட்டப்படி உடனடி மற்றும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரம் தெரிவித்து கொள்ளபடுகின்றது." என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு
    • தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமி நியமனம்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க குழு அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026-ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.

    இக்குழுவிற்கு தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமியும், துணைத்தலைவராக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

    • கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
    • கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். கமல்ஹாசன் உரை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பலரும், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உரை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ஆக்கப்பூர்வமான யோசனைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நான் நல்ல எண்ணத்துடன் பேசினேன், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும்," என்று கூறினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்," என்றார்.

    • நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்தது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையாகிறது.

    இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

    02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

    01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    03-02-2026- ஒரு கிராம் ரூ.300

    02-02-2026- ஒரு கிராம் ரூ.300

    01-02-2026- ஒரு கிராம் ரூ.320

    • கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி, அழகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில், தேர் இழுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். இந்த காலகட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வர்.

    இந்த நிலையில் இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டி.எஸ்.பி. குருசாமி தலைமையில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    8-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    9 மற்றும் 10-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    11-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    12-ந்தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 10-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ×