என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு.
- மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்!
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ்.
சாலை வரி பிரச்சனை தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெற்றுள்ளதாக ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
- இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை.
- பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான்.
இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. தீவிரவாதம் வந்துவிடாதா என்று விரும்புகிறார் ஆளுநர் என்று கூறினார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. அரசின் கீழ் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி "தீவிரவாதி" என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.
2022-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த கொடூரமான தற்கொலை குண்டுவெடிப்பை அப்பாவு மறந்துவிட்டாரா?
பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய தீவிரவாத அமைப்புகளின் மீதான ஒடுக்குமுறை குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) வெளியிட்ட செய்திகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா?
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யத் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு வரும் வேளையில், 1998 கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அதிர்ச்சியூட்டும் வகையில் தியாகியைப் போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
- இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்க சந்தையை அதிகம் நம்பி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத அதிகப்படியான வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆடை அனுப்புவதில் தேக்கம் நிலவி வர்த்தக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
அமெரிக்காவுடன் மத்திய அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை ஒருபுறம் தொடர்ந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 4-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் ஐரோப்பிய நாட்டுக்கு இந்தியாவில் இருந்து ரூ.37 ஆயிரத்து 600 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருவதால், இதை சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பா சந்தையை கைப்பற்றும் முனைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவிடுமாறு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
* டிட்வா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
* டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
* தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவிட வேண்டும்.
* டிட்வா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
* பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
- செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர்.
சென்னை:
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என செங்கேட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என்று ஜெயக்குமார் கூறினார்.
- டிட்வா’ புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
மேலும், தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து 34 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் குழுவினர் 60 பேர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 127 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 'டிட்வா' புயல் காரணமாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
- பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தினமும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழக் கூடிய கேள்வி ஒன்றுதான்,
பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
எங்கே இருக்கிறது சட்டம் - ஒழுங்கு?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 134½ அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 137½ அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107½ அடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் மணிமுத்தாறு அணையில் 80 அடியும், பாபநாசத்தில் 88½ அடியும், சேர்வலாறு அணையில் 88 அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே கனமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டிடும் நிலையில் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார எஸ்டேட்டுகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துவிட்ட நிலையிலும் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.
இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது. இதனால் கேரளாவில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், சூரன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
- சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
- தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று விமான நிலைய இயக்குனர் ராஜ கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்ட சேர்மன் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் உட்பட விமான நிலைய அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை விமான நிலையத்திற்குள் தற்பொழுது பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் விமான பயணம் செய்யும் பயணிகள் மிக எளிதாக விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் இயக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது உறுதி.
விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய முனையம் வருவதற்கு ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆகிறது என்று பல பயணிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதித்தோம். அந்த நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் உள்ள பகுதியைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற இடங்களை கையகப்படுத்தும் பணி இல்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது.
அதற்காக சுமார் 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 2000 ஏக்கர் அரசு நிலம். 3700 ஏக்கர் தனியார் நிலம். தனியார் இடமிருந்து சுமார் 1300 ஏக்கர் தற்பொழுது வாங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது குறித்து கேட்டறிந்தோம். இனிவரும் காலங்களில் தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
- சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
- வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






