என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.
    • தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    * மன நிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

    * இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.

    * 1.31 கோடி மகளிருக்கு சிறப்புத்தொகுப்பாக ரூ.5000 வழங்கி விட்டு வந்திருக்கிறேன்.

    * வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக உள்ளேன்.

    * தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

    * உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்துடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

    * மகிழ்ச்சியுடன் பொறுப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
    • தன்னம்பிக்கை கொண்ட பெண்களாக மாற்றியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாக கூறி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அறிவித்து இருப்பதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த X தளப் பதிவில் அவர், "மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும். தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.

    90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.

    மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது.

    பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.

    தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது.
    • முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது.

    பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதில் கூட்ட நேரங்களில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், உடன் வந்தவர்களை பத்திரமாக அழைத்து செல்வது மற்றும் பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்படும். இதற்காக அடிவாரம், கோவில் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிபெருக்கி கட்டப்பட்டுள்ளது.

    கடந்த 1-ந்தேதி தைப்பூச திருவிழா நடந்ததையொட்டி கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிப்பெருக்கி கட்டி மைக் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவில் யானைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தரிசனம் செய்ய வந்த வாலிபர், மைக்செட்டில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பாடலை ஒலிக்க செய்தார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்பான அந்த வீடியோவில், யானைப்பாதையில் நிற்கும் வாலிபர், மைக்செட் அமைத்த இடத்தில் ஆள் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த விஜய் பிரசார பாடலை மைக் மூலம் ஒலிபரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,"யானைப் பாதையில் போலீசார் சார்பில் அறிவிப்பு செய்ய மைக்செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் விஜய் கட்சியின் பிரசார பாடலை ஒலிக்க செய்துள்ளார்.

    முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

    • தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக அரசு முந்திக் கொண்டு இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் எல்லாம் களைந்து விட்ட நிலையில், தமது நாடகங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில் தான் முதலமைச்சர் வசனம் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது.

    தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா? என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார். என்ன செய்தாலும் மக்களின் கோபம் குறையாது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டு மக்களின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் அக்கறை என்னவென்பதையும், அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவில்லை. அதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,'' வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால், எப்போதிலிருந்து வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்று தேதியை சொன்னோமா?'' என அதிகாரத் திமிரில் திமுக அமைச்சர்கள் வினா எழுப்பியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

    அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தையும் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இன்னும் மறக்கவில்லை.

    பொங்கல் பரிசு வழங்குவதிலும் திமுகவின் அணுகுமுறை மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும், தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள். இந்த நாடகங்கள் இனியும் தமிழகத்தில் எடுபடாது.

    தமிழ்நாட்டில் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், கிட்டத்தட்ட 150% அளவுக்கு சொத்து வரியும், குடிநீர் வரியும் உயர்த்தப்பட்ட போதும், ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்திய போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது திமுகவுக்கு வராத அக்கறை இப்போது வந்திருப்பது விந்தை தான். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இவை தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பதையும், இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தை பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள். மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்தி.
    • மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தி இருக்கும் திட்டத்தை காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதி மணி வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூ. 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.

    பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களுக்கு அனைத்து வகைகளிலும் நல்லது மட்டுமே செய்வோம்.
    • உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?

    வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?

    இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.

    இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.

    அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

    எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

    நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.

    தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி," என தெரிவித்துள்ளார்.

    • கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல.
    • ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பதைப் போல, இன்னும் இரு வாரங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், கிடைத்தவற்றை எல்லாம் சுருட்டும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்கப்படும்; அவர்கள் கொள்ளையடித்த கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.75 வீதம் தண்டம் வசூலிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்காலத்தின் கடைசி நேரத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் கனிமவளக் கொள்ளை தான் தடையின்றி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1845 கருங்கல் குவாரிகள் உரிமம் பெற்று இயங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2000-க்கும் மேற்பட்ட குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கனிமக் கொள்ளைகளுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் காட்பாதர்களாக செயல்பட்டு வருகின்றனர். கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்காத திமுக அரசு, கனிமக் கொள்ளையர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு முறை மன்னிப்பு திட்டத்தை ரகசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    தமிழக அரசின் இயற்கைவளத்துறை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 03-இன் மூலம் இந்த ஒருமுறை மன்னிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி எந்த ஊடகத்திலும் வெளிவராமல் திமுக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒழுங்குபடுத்தும் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொள்ளையடித்த கனிமத்திற்கு ஒருமுறை தண்டம் செலுத்தி விட்டு புனிதமானவர்களாகி விடலாம்.

    இந்தத் திட்டத்தின்படி, உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

    கனிமக் கொள்ளையர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10 கோடிக்கும் குறைவாக இருந்தால், அதில் முதல் கட்டமாக 20% செலுத்தி விட்டு, மீதமுள்ள தொகையை இரு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் 6 சம தவணைகளில் செலுத்தினால் போதுமானது. அபராதம் ரூ.10 கோடிக்கும் கூடுதலாக இருந்தால் முதல் தவணை 20% தவிர மீதமுள்ள தொகையை இரு ஆண்டுகளில் 12 தவணைகளாக செலுத்தினால் போதுமானது. இதில் கொடுமை என்னவென்றால் கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களை அரசிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்பதும், அவற்றை வெளிச்சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்று விட்டு அதில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான தொகையை தண்டமாக செலுத்தினால் போதும் என்பதும் தான். இந்த அநீதியை கேட்பதற்கே சகிக்கவில்லை.

    கட்டுமானப் பணிகளுக்காக தேவைப்படும் கருங்கல் ஜல்லியை, ஒன்றரை டன் எடை கொண்ட ஒரு யூனிட் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதாவது வெளிச்சந்தையில் ஒரு டன் கருங்கல் விலை ரூ.6,666 வரை. அதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய தண்டம் வெறும் ரூ.75 மட்டுமே. அதாவது கொள்ளையடித்த கனிமத்தின் மதிப்பில் சுமார் 1% மட்டும் தான். ஒரு டன்னுக்கு தண்டமாக வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு 5 செங்கற்களைக் கூட வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருமுறை மன்னிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு, அபராதத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. மேலும் எந்த அளவுக்கு கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என அரசே கூறியிருப்பதால், உத்தேசமாக தண்டம் செலுத்தினால் போதுமானது. உண்மையாக கொள்ளை அடிக்கப்ப்பட்ட அளவு திமுக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால், அவர்கள் கனிமக் கொள்ளையர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்க வேண்டிய விதத்தில் வசூலித்துக் கொள்வார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    தாங்கள் செய்த கனிமக் கொள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், தங்களின் தொழில் பாதிக்கப் படுவதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கனிமக் கொள்ளையர்கள் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரை அறிக்கை அடிப்படையில் இந்த மன்னிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் திட்டத்தின் பின்னணியில் பெரும் கூட்டுச் சதி நடந்திருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

    வசிக்க இடம் இல்லாத ஏழை மக்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டால், இரவோடு, இரவாகச் சென்று கொடூரமாக அகற்றும் கொடுங்கோல் அரசு, கனிமக் கொள்ளையர்களிடம் மட்டும் இந்த அளவுக்கு இரக்கமும், கருணையும் காட்டுவது வியக்க வைக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கனிமக் கொள்ளையர்கள் வாரி வழங்கும் வெகுமதிகள் தான் இரக்கத்தை சுரக்க வைக்கின்றன என்ற புகாரை புறந்தள்ளிவிட முடியாது.

    கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, திமுக காட்பதரின் ஆசியில் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு பகுதி கனிமக் கொள்ளை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்காக 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியாளர்களின் கருணைப் பார்வை பட்டவுடன் அது ரூ.13.80 கோடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் மற்றும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருமுறை தண்டமாக ரூ.321 கோடியை விதித்த திமுக அரசு, கனிமக் கொள்ளையர் அனைவரையும் மன்னித்து விட்டது. தண்டத் தொகையிலும் இதுவரை ரூ.20 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ''பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' என்று மகாகவி பாரதியார் பாடியதைப் போல, ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும். ஆட்சிக் காலத்தின் கடைசியில் திமுகவினர் நடத்தும் கொள்ளைகளையும், ஊழல்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். கனிமக் கொள்ளையர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் இந்த ஊழல் திட்டத்தின் பின்னணி பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    • பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    போரூர்:

    காதலர் தினம் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

    காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சிகப்பு, இளம் சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் பூக்கடைகளில் பூங்கொத்து விற்பனை களை கட்டியுள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து ஒரு பஞ்ச் (20 எண்ணிக்கை) விலை விபரம் வருமாறு:-

    சிகப்பு ரோஜா-ரூ.600, மஞ்சள் ரோஜா-ரூ.600, வெள்ளை ரோஜா-ரூ.400, ஆரஞ்சு ரோஜா-ரூ.500, பேபி பிங்க்-ரூ.400, ஜூமா லியா-ரூ.350.

    இதுகுறித்து பூங்கொத்து வியாபாரி தேவராஜ் கூறும்போது, வரத்து குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் பூங்கொத்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.

    மேலும் பஸ் நிலையம் இடமாற்றம் காரணமாக புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
    • கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு!

    சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை' தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

    தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள்-ஆக நடைபோட என்றும் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான சூழலில் தங்கம் விலை பயணிக்கிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது

    தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், மளமளவென இடையில் சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான சூழலில் தங்கம் விலை பயணிக்கிறது.

    நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

    11-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,320

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-02-2026- ஒரு கிராம் ரூ.300

    11-02-2026- ஒரு கிராம் ரூ.300

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    • தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தியுள்ளார்.
    • கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    இந்நிலையில், தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை.

    கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை" என்றார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×