என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜாக்கள்"

    • காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    • பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    போரூர்:

    காதலர் தினம் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

    காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சிகப்பு, இளம் சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் பூக்கடைகளில் பூங்கொத்து விற்பனை களை கட்டியுள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து ஒரு பஞ்ச் (20 எண்ணிக்கை) விலை விபரம் வருமாறு:-

    சிகப்பு ரோஜா-ரூ.600, மஞ்சள் ரோஜா-ரூ.600, வெள்ளை ரோஜா-ரூ.400, ஆரஞ்சு ரோஜா-ரூ.500, பேபி பிங்க்-ரூ.400, ஜூமா லியா-ரூ.350.

    இதுகுறித்து பூங்கொத்து வியாபாரி தேவராஜ் கூறும்போது, வரத்து குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் பூங்கொத்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.

    மேலும் பஸ் நிலையம் இடமாற்றம் காரணமாக புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

    • கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின.
    • உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    ஓசூர்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூருவை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.

    ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது.

    தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன. எனினும் தாஜ்மஹால் என்று சொல்லக்கூடிய 15 முதல் 30 சென்டி மீட்டர் நீலமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு சந்தையில் தனிமதிப்பு உள்ளதால் விவசாயிகள் சிவப்பு ரோஜாக்களையே அதிகம் சாகுபடி செய்வார்கள்.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது.

    இன்று காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி ஆயின.

    இதில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய பூக்கள் சிங்கபூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில் ரோஜா மலர்களை விவசாயிகள் அனுப்பினர். மும்பை வழியாக மட்டும் இந்த ஆண்டு 158 டன் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின.

    கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். பின்பு கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் காதலர் தினத்தை குறிவைத்து விவாசயிகள் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டனர்.

    தற்போது இலக்கைவிட அதிகமாக ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் அதிக அளவில் மழை மற்றும் பனிப்பொழிவால் ரோஜா மலர் செடிகளுக்கு டவுனி நோய் தாக்கியதால், ஒரு ரோஜா செடியில் இருந்து சுமார் 30 ரோஜாக்கள் பூக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 ரோஜாக்கள் மட்டுமே பூத்தது.

    ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிக அளவு மலர் உற்பத்தி ஆகியது. கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதலே காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கியது.

    தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முகூர்த்தங்களும், சுப நிகழ்ச்சிகளும் அதிகமாக உள்ளதால் உள்ளூர் சந்தைகளிலும் மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதாக கொய்மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின. கொரோனாவுக்கு முன்பு 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கடந்த 10-ந்தேதி அன்று ஒரு கட்டு 400 வரை விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கட்டு 200-க்கு விற்பனையானது. ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.

    இதுகுறித்து ரோஜா மலர் விவசாயிகள் கூறுகையில், ''காதலர் தினத்தையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.

    உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. வியாபாரத்தையும், ஏற்றுமதியையும் அதிகரிக்க ஓசூரில் கட்டப்படுள்ள கொய்மலர்களுக்கான சர்வதேச ஏல மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்'' என்றனர்.

    ×