என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 30-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
- ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக இத்தகைய தகவல்களை தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இரு தெரிவித்தார்.
- போலீசார் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
சைதாப்பேட்டை:
சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை. தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. 5 மண்டலங்களாக பிரித்து மக்கள் நலப்பணி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாம்பரம் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலர் டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் விடுதியில் தங்கி படித்த கேரளா மாணவி ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். மேலும் உடன் தங்கி இருந்த மேலும் 7 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாநகராட்சி சார்பில் விடுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 16 வயது ஈசன் என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார். இதனால் 10 நாட்களில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 உயர்ந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாநகராட்சி அதிகாரிகள் சரிவர சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கவில்லை. மற்றும் கொசு அதிகம் பரவாமல் இருக்க காலை மற்றும் மாலைகளில் மருந்து அடிக்க வேண்டிய பணியை சரிவர செய்யவில்லை. ஏதோ பெயருக்காகவே பணிகள் செய்கிறார்கள். இதனாலே காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்றனர்.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் கூறும் போது, தாம்பரம் பகுதியில் காய்ச்சல்கள் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு காலிமனையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், அவற்றில் கொசுக்கள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.
- வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது.
- அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மல்லிகைபூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1500 முதல் ரூ.2ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் நேற்று தைமாத கிருத்திகை, இன்று சுப முகூர்த்த நாள் என அடுத்தடுத்து விஷேச நாள் என்பதால் வழக்கத்தை விட தேவை அதிகரித்து உள்ளதால் மல்லி பூ விலை உச்சம் அடைந்து உள்ளது. மேலும் பிப்ரவரி 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாள் அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு :-
சாமந்தி-ரூ.80 முதல் ரூ.120வரை,
முல்லை-ரூ.500,
கனகாம்பரம்-ரூ.800,
ஜாதி-ரூ.400,
பன்னீர் ரோஜா-ரூ.80,
சாக்லேட் ரோஜா-ரூ.100,
அரளி-ரூ.150,
செவ்வரளி-ரூ.200,
சம்பங்கி-ரூ.40.
- தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான நிவேத் ஆல்வா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக வந்துள்ளேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து அதனை மாற்றியது தவறு.
வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கேபினட் பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய அரசு எப்படி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செய்வது மத்திய அரசின் தவறான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
- அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அஜித் பவார், ஒரு துயரமான விபத்தில் காலமானார். இது மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற அஜித் பவாரின் அகால மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது.
அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.
- இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை!
- மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025)
4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்...
இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!
திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்! என்று கூறியுள்ளார்.
- விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய 2 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை காட்சிப்படுத்தியும், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்களை தொகுத்தும் அண்ணாமலை பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய பல்கலை கழகங்களில் தலைசிறந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகி முருகேசன் என்பவர் 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் கொண்டு விடுவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய 2 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்து வரும் தி.மு.க. பிரமுகர், தூத்துக்குடி அருகே தாய், மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் தி.மு.க. நிர்வாகி, விருத்தாசலத்தில் 5 வயது குழந்தையை பாலியல் சித்ரவதை செய்த தி.மு.க. கவுன்சிலர், கரூரில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்த தி.மு.க. பொறியாளர் அணி நிர்வாகி, கோவையில் கணவரை பிரிந்த பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி, விருதுநகரில் இளம் பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்தவர்கள், தஞ்சை ஒரத்தநாட்டில் கஞ்சா போதையில் தி.மு.க.வினர் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, ராணிப்பேட்டையில் பாலியல் தொல்லை கொடுப்பதாக 2 இளம்பெண்கள் புகார் செய்தது.
இத்தனை பாலியல் குற்றங்களில் தி.மு.க. நிர்வாகிகள் பிடிபட்ட பின்னரும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்யின்றி வேறென்ன?
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
- நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
நெல்லை:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 5 பேர் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மகாராஷ்டிர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,703 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
மேலும் 5,469 தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இன்று மட்டும் 2,480 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த லேப்டாப்பை பயன்படுத்தி உலகத் தகவல்களை தெரிந்துகொண்டு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். ஆடல், பாடல், நடிப்பு போன்றவை எல்லாம் நீர்க்குமிழி போன்றது. அதை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்ததும், சென்றதும் நல்ல முறையில் இருந்தது. ஆனால், அவர் அச்சிடப்பட்ட உரையை வாசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் வழங்கினார்.
ஆளுநர் உரையை அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அச்சிடப்பட்டது. அதை வாசிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சொந்தக் கருத்துக்களை பேசவோ, தவிர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. முதலமைச்சர் ஜனநாயக முறைப்படியே நடந்து கொண்டார்.
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி, கூட்டணி கட்சிகள் குறித்து பேசியது பற்றி கேட்கிறீர்கள். இது குறித்து தலைவர் ஏற்கனவே கண்டித்துள்ளார்.
கூட்டணி தொடர்பான விவகாரங்களை தலைமை மட்டுமே பேச வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகமும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக இணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
வேறு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓவைசி என்பவர் எப்படி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதேபோல்தான் தமிழகத்தில் விஜயை முன்னிறுத்த பா.ஜ.க. பார்க்கிறது. ஆனால் சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் தருவதாக சொல்கிறார். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று இயக்குநரும் விஜயின் தந்தையுமான S.A. சந்திரசேகர் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகன் பட பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது என்னை விட மக்களுக்கு நன்கு தெரியும். கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்.
தவெக தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.
அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்.
- தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்ததற்கு மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்தபடியே நல்ல முடிவை எடுத்துள்ளார். இதனால் கூட்டணி பலம் அதிகரிக்கும். ஓ.பன்னீர் செல்வம் எங்களுடன் தான் இருப்பார். வேறு பாதையில் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயலாற்றுவார்.
2-வது முறையாக தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது கிடையாது. இதில் கருணாநிதி பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்தார். எனவே வருகிற தேர்தலில் அதற்கு சாத்தியம் இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார். த.வெ.க.வில் இணைந்து தவறான பாதையில் சென்று விட்டார். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.






