என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
    • விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் வரை பயணம் செய்தனர்.

    அந்த பஸ் கூடங்குளம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதியில் வந்தபோது எதிரே அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது சமீப காலமாக பெய்த மழையினால் சாலையோரம் இருந்த மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் பஸ் டயர் கீழே இறங்கவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 27 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்கள் அதிகமாக இருந்த பயணிகள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
    • வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நலையில், தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
    • அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் போக்குவரத்து நெரிசல்களை தானே கண்டறிந்து செயல்படும் ஏ.ஐ.சிக்னல்கள் சென்னை மாநகர சந்திப்புகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஈ.வே.ரா. பெரியார் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் 50 சிக்னல்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலும் வடசென்னையில் சில இடங்களிலும் இந்த சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஏ.ஐ.மூலமாக செயல்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் வாகன நெரிசலுக்கு ஏற்ப தாமாகவே சிக்னல்களை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டதாகும்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த வாகனங்கள் எல்லாம் முதலில் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் நீண்ட நேரம் இயங்கும்.

    இப்படி குறிப்பிட்ட சாலையில் வாகன நெரிசல் சரியானவுடன் அருகில் உள்ள சாலைகளில் எங்கு வாகனங்கள் அதிகமாக நிற்கிறதோ அந்த சாலையில் உள்ள வாகனங்கள் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் விழும். இப்படி போக்குவரத்து சிக்னல்களை போலீசார் இல்லாமலேயே செயல்படும் வகையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் ஏற்கனவே 50 இடங்களில் சிக்னல்கள் செயல்படும் நிலையில் மீதமுள்ள 115 இடங்களிலும் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் அதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜ.டி.எஸ் சிக்னல்கள் என்று அழைக்கப்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பழைய சிக்னல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    • தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது.

    பீகார் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி இமாலய வெற்றியை ருசித்து உள்ளது.

    அதே நேரம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது தவறு என்ற குரல் அங்கும் ஒலிக்கிறது.

    அடுத்ததாக தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் கூட்டணி வியூகம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும். கடைசியில் சமாதானமாகி விடுவார்கள்.

    கடந்த காலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

    ஆனால் வருகிற தேர்தலில் 25 தொகுதிகளை ஏற்கமாட்டோம். கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம் என்று காங்கிரசார் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.

    பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தமிழகத்தில் காங்கிரஸ் எந்த மாதிரி முடிவுகளை மேற்கொள்ளும் என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

    பீகாரில் எஸ்.ஐ.ஆரால் பா.ஜ.க வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள்.

    இதை தேர்தல் ஆணையம் சிஸ்டமேடிக்காக செய்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    பல மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்தது பா.ஜ.க. அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காக 2021-ல் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

    கூட்டணி முடிவு, கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற முடிவுகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடநத அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட், வழக்கை முடித்து வைத்திருந்தது.

    இந்த சூழ்நிலையில், புகார் அளித்து 5 ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தனது புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்.

    மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளது.

    சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியை திரும்ப பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடக்கிறது.
    • த.வெ.க. மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ்சிடம் கைப்பற்றப்பட்ட காரும் ஒப்படைக்கப்பட்டது.

    திருச்சி:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் 1316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். 306 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடக்கிறது.

    நேற்று 9 பேர் ஆஜராகினர். இன்றும் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஆஜர் ஆகி விவரம் தெரிவித்தனர்.

    இதனிடையே இந்த வழக்கு திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சி.பி.ஐ. சம்பந்தமான வழக்குகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதால் இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் த.வெ.க. மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ்சிடம் கைப்பற்றப்பட்ட காரும் ஒப்படைக்கப்பட்டது. அதனை சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. தொடர்ந்து கரூர் விசாரணை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது உள்ளிட்ட உத்தரவுகளுக்கு இனிமேல் திருச்சி நீதிமன்றத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் சி.பி.ஐ. விசாரணை முடிந்து இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அந்த குற்றப்பத்திரிகையை பொறுத்து இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது.
    • சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ந் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகிற 17-ந்தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    மேலும் வருகிற 19-ந் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
    • தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.

    தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.

    பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

    ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    • இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி. பி.எஸ். இடங்களை நிரப்ப 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன.

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 58 நிரப்பப்படாமல் உள்ளன. நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லுரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால் சிறப்பு கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இடங்கள் ஒதுக்கீட்டு நடைமுறை நாளை (16-ந்தேதி) இறுதி செய்யப்பட்டு 17-ந்தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கட்டண குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி கோவை வருகிறார். கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு நடக்கிறது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக அவர் வருகிற 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வர உள்ளார். பின்னர் கொடிசியா செல்லும் அவர் இயற்கை விவசாய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரம் இயற்கை விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்

    கோவைக்கு வரும் பிரதமருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி கோவைக்கு வர உள்ளார். அன்றைய தினம் அவர் கோவை மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார்.

    கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

    ஒருவார கால இடைவெளியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    அதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க கூடிய நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா பகுதி முழுவதையும் போலீசார் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த உள்ளனர். மேலும் பிரதமர் மோடி வந்து செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

    ஆஷ்லே மேடிசன் யூகோவ் உடன் இணைந்து நடத்திய புதிய சர்வதேச ஆய்வில், பத்து பேரில் நான்கு பேர் இந்தியர்கள் ஒரு சக ஊழியருடன் டேட்டிங் செய்திருக்கிறார்கள் அல்லது தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 13,581 வயதானவர்களையும் உள்ளடக்கியது. மேலும் பணியிடத்தில் காதலை ஒப்புக்கொள்ளும் நபர்களை பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. ஆய்வில் 43 சதவீத பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா 40 சதவீத பேர் நெருக்கமாக உள்ளனர். தொழில்முறை எல்லைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

    பெண்களை விட (36%) ஆண்கள் (51%) சக ஊழியரை டேட்டிங் செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை விளைவுகளுக்கு பயந்து அலுவலக உறவுகளைத் தவிர்ப்பதாக 29% பெண்கள் கூறியுள்ளனர். ஆண்கள் 27% தனிப்பட்ட விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 26% பெண்கள் கவலைப்படுகின்றனர்.

    இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் தொழில்முறை உணர்வு மற்றும் எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.

    இந்தியாவின் உயர் தரவரிசை, சமூக மதிப்புகள் மாறி வருவதாலும், பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கிய வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    திருமணமானவர்களுக்கான டேட்டிங் செயலியான க்ளீடனின் மற்றொரு ஆய்வில், 35% இந்தியர்கள் தற்போது வெளிப்படையான உறவுகளில் இருப்பதாகவும், 41% பேர் தங்கள் துணை பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் போக்கு பெருநகரங்களுக்கு அப்பாலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    பணியிட காதல்கள் சாதாரணமாகி வரும் நிலையில், அவை ஆர்வ மோதல்கள் முதல் தொழில்முறை அபாயங்கள் வரை இன்னும் சவால்களைக் கொண்டுள்ளன.

    இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையிலான கோட்டை எவ்வாறு தொடர்ந்து மங்கலாக்குகிறது, வேலையில் காதலை பொதுவானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

    • சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
    • சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.

    சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.

    அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    ×