என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார்.
- ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"'எல்லாருக்கும் எல்லாம்' எனும் சமத்துவச் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்களின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, உரையாற்றுவதை, எனக்குக் கிடைத்த பெருமையாக எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கம்யூனிசம் என்பது, ஒரு உணர்வு! மனிதர்கள் அனைவருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு! அந்த உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, செங்கொடியை ஏந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை. இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களும் நூற்றாண்டைக் கடந்திருக்கிறார். இது எந்த இயக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சாதனை.
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும், தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாக நான் மனதார வாழ்த்துகிறேன்.
திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு. அதனால்தான், திராவிட இயக்கக் கொடிகளில் சிவப்பு இருக்கிறது; திராவிட முன்னேற்றக் கழக கொடியிலும் சரிபாதியாக சிவப்பு இருக்கிறது. நம்முடைய கொள்கைகளில், அரசியல் வழிமுறைகளில், சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், நம்முடைய பொது இலக்கு சமத்துவச் சமுதாயம்தான்.
அதனால்தான், இந்த மேடையில், தோழமைக் கட்சியினர் அத்தனை பேரும், இந்த நூற்றாண்டு ஆலமரத்தை வாழ்த்த ஒன்று கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமைதான், இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கு நிலைபெற வேண்டும்; அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள நட்பு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இது நூறாண்டு காலமாகத் தொடரும் நட்பு. தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார். அனைத்திற்கும் மேல், எனக்கு ஸ்டாலின் என்று பெயரும் வைத்தார். எனக்குள்ளும் அந்த உணர்வு ஓடுவதால்தான், உங்களில் ஒருவனாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிராவயலில், உத்தமர் காந்தி - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்திருக்கும் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். அதேபோன்று, தொடர்ந்து, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, வரும் 6-ஆம் நாள் திறந்து வைக்க இருக்கிறேன். இவ்வாறு, உங்களில் ஒருவனாக நானும் - என்னில் பாதியாக நீங்களும் இருப்பதால்தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.
நமக்குள் இருக்கும் நட்பு என்பது, தேர்தல் அரசியலை கடந்த நட்பு. சாதியவாதம் - வகுப்புவாதம் - பெரும்பான்மை வாதம் – எதேச்சாதிகார வாதம் என்று, மக்களை ஒடுக்கும் அத்தனைக்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமை, நம்முடைய தோழமை. நான் உறுதியாக சொல்கிறேன்... இந்தத் தோழமைதான், பாசிசத்தை ஒழிக்கும் - வீழ்த்தும். இந்தத் தோழமைதான், எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், மதவாதத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், சர்வாதிகாரத்தை வீழ்த்தும்!" எனப் பேசினார்.
- கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை.
- கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எரியும் பொருளாதார பிரச்சனைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகள், அனைவருக்குமான பயன் என்பதை மூன்று குறிக்கோள்கள் என நிதிநிலை அறிக்கை உரையை நிதியமைச்சர் துவங்கினாலும் அது உண்மையில் கார்ப்பரேட் வளர்ச்சி, செல்வந்தர்களின் எதிர்பார்ப்புகள், பெரும்பான்மை மக்களிடமிருந்து பறிப்பு என்பதாகவே அமைந்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, செல்வக்குவிப்பிற்கு வழிவகுக்கிற இன்னொரு நிதிநிலை அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.
நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதியாக திகழும் வருமான வரி திரட்டல் வர்க்க பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் 10 சதவிகித மேல் தட்டு மக்கள் 65 சதவிகித செல்வத்தை வைத்துள்ள நிலையிலும் செல்வ வரி போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை. மறுபுறம் மத்தியதர ஊழியர்களின் எதிர்பார்ப்பான கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிகளின் பங்கு கார்ப்பரேட் வரிகளை விட மொத்த வரி வசூலில் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் அறிவித்ததாக இந்த அரசு பறைசாற்றி கொண்டாலும் வருவாய் திரட்டலில் பெருமளவு மறைமுக வரிகள் வாயிலாகவே வசூலிக்கப்படுவது சாதாரண மக்கள் மீதே சுமைகளை ஏற்றுவதாக உள்ளது.
கிராமப்புற மக்களுக்கு இந்தநிதிநிலை அறிக்கை வஞ்சனை இழைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை ஒழித்து, 100 வேலை நாட்களாக இருந்ததை 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக படாடோபமாக அறிவித்தாலும், அதற்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 125 வேலை நாட்களை சராசரி நாட்கூலி ரூ 355 என்பதை கொண்டு கணக்கிட்டால் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ 95692 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு பங்கு கூட இல்லை எனும் போது அரசின் பொய்மைகள் அம்பலம் ஆகியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ 8000 கோடி அதாவது 4 சதவிகிதம் மட்டுமே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது அதிகரிப்பல்ல, உண்மை மதிப்பில் வெட்டே ஆகும். கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை விட கிராம சாலைகள் மேம்பாடு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான திருத்திய மதிப்பீடுகள் குறைவாக உள்ளன. நிதிநிலை அறிக்கையில் குறைவாக ஒதுக்கப்படும் தொகைகள் கூட இன்னும் குறைவாகவே மக்களுக்கு போய்ச் செல்கின்றன.
அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரிகளும், அச்சுறுத்தப்படும் 500 சதவிகித உத்தேச வரிகளும் இந்திய நாட்டின் சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அவற்றின் மீட்சிக்கான நம்பிக்கையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதியத்திற்கு 10000 கோடி, சுயசார்பு இந்தியா நிதியத்திற்கு ரூ 2000 கோடி என்ற அறிவிப்புகள் எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரி போன்றதே ஆகும்.
இந்திய நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ள வேலையின்மைக்கு நிதிநிலை அறிக்கை உரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 14 சதவிகித வேலையின்மை நிலவுகிற சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், வேலை வாய்ப்பு ஊக்கத்தொகை திட்டமும் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளித்துள்ளனவே தவிர, வேலை வாய்ப்புகளில் பிரதிபலிக்கவில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான பொது முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிற சூத்திரமும் நடைமுறையில் பொய்த்து போய் உள்ளது. கல்வி, சுகாதார ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க உயர்வும் இல்லை.
பொதுத்துறை பங்கு விற்பனைக்கு 80000 கோடி ரூபாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே 26 சதவிகிதம் வரை கூட குறைக்கலாம் என்பதும் அபாயகரமான முன்மொழிவு. அரசு உடமை என்பதிலிருந்து அரசின் கட்டுப்பாடு என்பதாக தரம் இறக்குவது எதிர்காலத்தில் முழுமையாக தனியார்கள் வசம் ஒப்படைப்பதற்கான திட்டமே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய முன்மொழிவு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஏற்பாடுகள் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களில் வஞ்சனை தொடர்ந்து உள்ளது. அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு கார்ப்பரேட் சுரண்டலுக்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கீழடிக்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பிட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை
- இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு வகைகளில் விலைவாசி உயர்வை தூண்டி வருகிறது
மத்திய பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொறி போல் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் பிரேமலதாஇணைவார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சரக்கு எயில் பாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. புதிதாக அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் திட்டமும் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியமான படியாகும். சென்னை -பெங்களூர் மற்றும் ஐதராபாத் சென்னை இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். செமி மின்னணுவியல் வளர்ச்சி திட்டம் பல லட்சம் இலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் கொண்டது.
நகரங்களை ஒட்டி உற்பத்தி மையங்களை உருவாக்க ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடணடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாகும். பால் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்பு, தேங்காய் உற்பத்தி தொடர்பான திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். மாற்றுத் திறணயிகளுக்கு உதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது வரவேற்கதக்கது. அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப் பாதைகள் அமைக்கப்படும் திட்டமும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு பயனளிக்கும் முக்கியமான முயற்சியாகும்.
வாரணாசி பாட்னா நதி போக்குவரத்து இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. தென் மாநிலங்களின் நீர்வல தேவைகள் மற்றும் வேளாண் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்படாதது கவலைக்குரியது. இளைஞர்களுக்கான தொழில் சார்ந்த, நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பெரிய அளவிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வேலை இழப்பு பிரச்சினையை சமாளிக்க கூடிய தொழிற்துறை முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய தெளிவான அறிவிப்புகள் இல்லாதது இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான கடல்சார் மாநிலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், கடல் வழி போக்குவரத்து, வணிகம், மீன்வள வளர்ச்சி மற்றும் துறைமுக சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறதாது ஏமாற்றமளிக்கின்றது. அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் அறிவிக்கப்படாதது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சுமையாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு வகைகளில் விலைவாசி உயர்வை தூண்டி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தினந்தோலும் குறைந்து கொண்டே இருக்கும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசிய முதலீட்டு உலோங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு இல்லை. இந்நிலை நாட்டின் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற வரிகளை குறைத்து, மக்களுக்கு சுமையில்லாத, வலி இல்லாத ஒரு பட்ஜெட்டாக இருந்திருக்கலாம். மொத்ததில்
இந்த பட்ஜெட் 'யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது
- கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 - 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே!
இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். இதுவரை பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
புவிசார் பதற்றங்கள், வர்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டு 2027 ஏப்ரல் மாதம் தான் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமெரிக்க வரி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதற்கான விடை இல்லை.
வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும் 6 துறைகள் என கூறப்பட்டிருப்பது புதிது அல்ல. முந்தைய நிதிநிலை அறிக்கைகளிலும் இடம்பெற்றவையே. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7 இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்?
பாஜக அரசின் 12 ஆண்டு காலத்தில் பணவீக்க விகிதம் நிலையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
மாநிலங்களுக்கு 16 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பகிர்வு 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறை தொடர்கிறது.
உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தொழில்துறை சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வாகன உற்பத்தி தொழில் துறைக்கான வரி உயர்வு என்பது வாகன உற்பத்தி கேந்திரமான தமிழ்நாட்டிற்கு இழப்பாகும்.
நாட்டின் ஜவுளித் துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் ,கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை. வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. மேலும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 10 ஆயிரம் கோடி என்பது சொற்ப தொகையே.
சென்னை - பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை.
கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
- வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
- 16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
2026-2027ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் விரோத பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"2026-27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். தனது 83 நிமிட உரையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது. சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து நாட்டில் உள்ள தொழில்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்பதற்கான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதையும் பட்ஜெட் அறிவிப்பில் காண முடியவில்லை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 4.2 லட்சம் கோடி. இதில் 30 சதவீதம் சிறு குறு நடுத்தர தொழில்களில் இருந்து வருகிறது. இதை நம்பி 22 கோடி பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது. அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ. 10 ஆயிரம் கோடி. இது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் அமைகிறது. கடந்த பட்ஜெட்டில் இதே துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ. 7 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. சிறு, குறு தொழில்கள் கடன் பெறுவது தற்போது உள்ள கடினமான நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களை சந்தை படுத்த அந்நிய நிறுவனங்களை தான் நம்பி இருக்கிறது.
அதற்கு மாற்றாக உள்ளூார் சந்தைகள் உருவாக்கப்படவில்லை. இந்த பின்னணியில் கார்ப்பரேட்டுகளின் தயவில் தான் பொருள்களை சந்தைப்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருக்கிற தரவு மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க வேண்டிய அவசியம்? இதனால் பயனடையப்போகிற கார்ப்பரேட் தொழிலதிபர்கள் யார்? இந்த மையம் உற்பத்தி சார்ந்ததோ, வேலை வாய்ப்பு வழங்குவதோ அல்ல, இது ஒரு தொழில் நுட்ப அமைப்பு.
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருக்கிறார். ஆனால் நம்பகத்தகுந்த சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட வறுமை குறியீடு தாவரிசை பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் நிர்மலா சீதாராமன் அறிக்கை என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ல நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கிற மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வுகள் மோடி ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பெரும்பாலான கிராமங்களில் வாழுகின்ற மக்கள் இதனால் நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 64.9 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இதில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யதற்காக நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் படி ஒவ்யொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 15 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். இத்தகைய வறுமை ஒழிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்கிற அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதில் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு உற்பத்தித்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கு12.9 சதவீதமாக தான் இருக்கிறது. இத்தகைய குறைவான உற்பத்தியினால் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
எனவே 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக்குவது போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில்தான் 2019, 2024 ஆகிய தேர்தல்களில் மக்களிடையே வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை மக்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லுகிற உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒரு மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
- அரிய கனிமவழித்தடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும், மக்களில் வாழ்வாதாரமும், வழித்தடங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் குறித்து பாஜகவினர் வரவேற்பு அளித்துவரும் நிலையில், எதிர்க்கட்சியினர் வெற்று பட்ஜெட் என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்க்கு வரவேற்பு அளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026&27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10% உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
2026&27ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக தொடர்வண்டிப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும், ஒடிஷா மாநிலம் தால்ச்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை அமைக்கப்படும்;
பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும், முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும், பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடியவை ஆகும். அதேநேரத்தில் அரிய கனிமவழித்தடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும், மக்களில் வாழ்வாதாரமும், வழித்தடங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்கது மூலதனச் செலவுகளுக்காக ரூ.12.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தான். கடந்த ஆண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது முழுமையாக செலவழிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அது 10% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதனால் வேலைவாய்ப்புகளும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பதால் இவையும் வரவேற்கத்தக்கவை.
சேவைத்துறையின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில், செமிகண்டக்டர் இயக்கம் 2.0 செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 500 அணைகளை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் கைத்தறித்துறையை மேம்படுத்துவதற்கான மகாத்மா காந்தி கைத்தறித் திட்டமும் வரவேற்கத்தக்கதாகும்.
வரிகளைப் பொறுத்தவரை புதிய வருமானவரிச் சட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டதால் வருமானவரி குறித்து புதிதாக அறிவிக்க எதுவும் இல்லை. ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்களிக்கக் கூடிய புதிய வருமானவரி சட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான 17 வகை மருந்துகளுக்கும், பிற அரிய நோய்களுக்கான 7 வகையான மருத்துகளுக்கும் அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டிருப்பதும் பயனளிக்கக் கூடியது.
மருத்துவத் துறை கட்டமைப்புகளைப் பொறுத்தவரை மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 5 மண்டல மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்; இந்த மையங்களில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், நோய் பரிசோதனை மையங்கள், மருத்துவச் சிகிச்சைக்கு பிந்தைய சேவை அளிக்கும் நிலையங்கள் ஆகிய வசதிகள் இருக்கும். இவை தவிர 3 இடங்களில் ஆயுர்வேத மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும், பெங்களூரில் இருப்பதைப் போன்ற தேசிய மனநல மருத்துவ அறிவியல் மையம் (நிம்ஹன்ஸ்) வட இந்தியாவில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளும் இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு வகை செய்யும் என்பதில் ஐயமில்லை.
நாட்டின் வளர்ச்சிக்கு வகை செய்யக்கூடிய இன்னொரு முதன்மைத் துறையான தொடர்வண்டித் துறைக்கான நிதி ஒதுக்கீடும் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026&27ஆம் ஆண்டில் தொடர்வண்டித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட ரூ.25 ஆயிரம் கோடி, அதாவது 10% அதிகம் ஆகும். கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.1.51 லட்சம் கோடியை விட 7% அதிகமாக ரூ.1.62 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் 16ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல இதை 50% ஆக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.
- தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது
- மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும்
பெரிதும் எதிர்பார்த்திருந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் – அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள் – பெண்கள் – விவசாயிகள் - விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்ட போதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு நிதிப்பகிர்வு சதவீதம் இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரியவருகிறது. இதன் மூலம் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி இதர ஒப்பிடத்தக்க மாநிலங்களைக் காட்டிலும் ஆண்டிற்குச் சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை, இன்று 16-ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சீரமைப்பில் மாநிலங்களுக்கான நிதி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டிக்கத்தக்கது.
ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு கோரியிருந்த 3,112 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்த வேளையில், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தையே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சி என்றே தோன்றுகிறது.
அதேபோன்று, பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். அதேபோல், ஊரகப் பகுதிகளுக்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 35,832 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்து, தற்போது 32,500 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.
இதைவிட மிகப்பெரிய ஏமாற்றம் என்னவெனில், மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட PM Internship Scheme திட்டத்திற்கென 10,831 கோடி ரூபாயைச் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, ஆனால் தற்போது 2025-2026-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில், வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம், இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாகச் செயல்படுத்திய போதிலும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காத நிதி 3,112 கோடி ரூபாய் நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு எனப் புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை.
மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!" என்று தெரிவித்துள்ளார்.
- எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
- தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை.
- இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது
2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில், "2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது
மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே" என்று தெரிவித்தார்.
- கவிதை மூலம் மத்திய பட்ஜெட்டை சாடியுள்ளார்.
- எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் வரவேற்பும், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், எம்.பி. கமல் ஹாசன் தனது பானியில் கவிதை மூலம் மத்திய பட்ஜெட்டை சாடியுள்ளார். இது குறித்த X தள பதிவில் அவர், "எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.
'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…
பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!'
நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.
'கள்ளிச் செடி பசுவாகிப்
பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள்
வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்
எங்கும் ஓங்கும்'
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
- வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது
- வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
வள்ளலார் வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில்
?வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
?ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
?வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
- மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
- இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.






