என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை.
    • இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை. இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளதால் விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அப்படி ரோகித் கேப்டனாக செயல்பட்டால், கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி.
    • நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம்- கிரிக்கெட் சங்கம்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டி தொடங்க இன்னும் ஐந்து மணி நேரமே இருக்கும் நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது எனத் தெரிய வந்துள்ளது.

    2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்காலிகமாக மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பாக்ஸ் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் (floodlights) ஜெனரேட்டர் மூலம்தான் இயக்க முடியும்.

    ராய்ப்பூர் கிராமப்புற வட்ட பொறுப்பாளர் அசோக் கந்தெல்வால், "கிரிக்கெட் சங்க செயலாளர் தற்காலிகமாக செயல்திறனை அதிகரித்துக் கொடுக்க விண்ணப்பம் செய்திருந்தார். ஆயிரம் கிலோவாட் கேட்ட நிலையில் 200 கிலோவாட் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வேலை இன்னும் தொடங்கப்படவில்லை" என்றார்.

    2018-ம் ஆண்டு மாரத்தான் போட்டியின்போது, மைதானத்தில் மின்சாரம் வசதி இல்லை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அப்போதுதான் 2009-ம் ஆண்டில் இருந்து மின்சார கட்டணம் கட்டவில்லை. 3.16 கோடி ரூபாய் பாக்கி உள்ளது எனத் தெரியவந்தது.

    இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு பொதுப் பணித்துறையிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செல்லவை விளையாட்டுத்துறை ஏற்கவேண்டும். மின்கட்டணம் விவகாரத்தில் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

    மின்சாரத்துறையில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிய போதிலும் இரு துறைகள் சார்பில் நிலுவைத் தொகையை கட்டவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட மூன்று சர்வதேச போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருனேஷ் சிங் பரிஹார் கூறுகையில் "பெரிய போட்டிகள் என்பதால் மின்சாரம் குறித்து கவலை கொள்கிறார்கள். நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம். இருந்தபோதிலும், மைதான விளக்குகள் விவகாரம் கவலை அளிக்கிறது. எவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்று எனக்குத் தெரியாது. மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் தற்காலிக இணைப்பு வாங்கப்பட்டுள்ளது" என்றார்.

    சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்படும் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள விசயம் ஆச்சர்யமாக உள்ளது. மேலும், இரு துறைகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையால் மின்சாரத்தை பெற முடியாத இல்லையில் மைதானம் அமைந்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
    • டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை ரோகித் வழிநடத்த உள்ளார். 

    இந்நிலையில் விராட் கோலி 1 ஆண்டுகளாக டி20 போட்டியில் விளையாடாமல் உள்ளதால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20-யில் விராட் கோலி இந்திய அணிக்காக 105 போட்டிகளில் விளையாடி 4008 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதம் உள்பட 37 அரை சதங்கள் அடங்கும்.

    • வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    சில்ஹெட்:

    நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ம் தேதி தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்களாதேசம் முதலில் களமிறங்கியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் 86 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டும், அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் சதம் அடித்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், மோமினுல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சதமடித்து அசத்தினார்.


    இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாண்டோ 105 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 67 ரன்னும், மெஹிதி ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், இஷ் சோதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர்.
    • தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையிலான இந்திய அணி அறிமுக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    ஐ.சி.சி. போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான அணி கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறாதது ஏமாற்றத்தை அளித்தது.

    தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை அணுகியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் டி20 போட்டியில் ஆடவில்லை. தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஓய்வு கேட்டுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக யார் ஆடுவார்கள்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகிய 5 பேர் தொடக்க வரிசைக்கான போட்டியில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக வருகிறார்கள். அவர்கள் ஆட்டம் அதிரடியாகவே இருக்கிறது.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடக் கூடியவர்கள். இதற்கிடையே அவ்வப்போது இஷான் கிஷனும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    • முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.

    இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.

    23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    • டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம்.
    • உலகக் கோப்பை தொடரில் விளையாட அனைத்து வாய்ப்புகளும் உண்டு.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டிசம்பர் 10-ம் தேதி டி20 தொடர் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் டிசம்பர் 17-ம் தேதியம், டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதியம் துவங்குகிறது.

    இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

     

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை 2024 டி20 தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தகுதி உடையவர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள், அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். ரோகித் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட அனைத்து வாய்ப்புகளும் உண்டு."

    "எனினும், அவர்கள் ஐ.பி.எல். தொடரில் எப்படி செயல்படுகின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்களது ஃபார்மை பார்த்து வாய்ப்பு கொடுக்கலாமா இல்லையா என்பதை அவர்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் மகத்தான கிரிக்கெட்டர்கள்," என்று தெரிவித்தார். 

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ருத்ராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா

    ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

    டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

    • ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்து இருந்தது.
    • எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல் இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்து இருந்தது.

     

    எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • வங்காளதேசம் அணியில் 2 வீரர்கள் ரன் அவுட் செய்யப்பட்டார்கள்.
    • நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஷ் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. முதலில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 26 ரன்கள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

    40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஷ் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். வங்காளதேசம் அணியில் 2 வீரர்கள் ரன் அவுட் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.

    இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.


    இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

    ×