என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
ராஜ்கோட்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
- நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேபாளம் இடம்பெற்றுள்ள 'சி' பிரிவில் , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார்.
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.
3 ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்மித் 129 ரன்களுடனும் வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகல்.
- எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று இமாசலபிரதேசத்தையும், நாளை மறுநாள் பஞ்சாப்பையும் சந்திக்கிறது.
இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகி இருப்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.
கடந்த அக்டோபர் 25-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை, விஜய் ஹசாரே போட்டியில் ஆடி உடல் தகுதியை நிரூபிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் உறுதியாகும்.
- சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
- தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது.
தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்தார். கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
அதற்கு முன்பாக அவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்திய போது டிரோஸ்டானோலான் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. 27 வயதான தனலட்சுமி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.
- கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
- பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமோரிம் இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,
"ரூபன் நவம்பர் 2024-இல் நியமிக்கப்பட்டார், மேலும் மே மாதம் பில்பாவோவில் நடந்த யுஇஎஃப்ஏ (UEFA) யூரோப்பா லீக் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்திச் சென்றார்.
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆறாவது இடத்தில் இருக்கும்நிலையில், இந்த மாற்றம் தேவை என அணியின் தலைமை முடிவு செய்துள்ளது. இது அணி பிரீமியர் லீக் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும்.
கிளப்பிற்கு ரூபன் ஆற்றிய பங்களிப்பிற்கு கிளப் நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறது. புதன்கிழமை (ஜன.7) பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபன் அமோரிம் ஒரு போர்ச்சுகீசிய கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். முன்னதாக ஸ்போர்டிங் சிபி அணியின் பயிற்சியாளராக இவர் இருந்தபோது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்கு லீக் பட்டத்தை வென்று கொடுத்தார். அதற்கு முன்பு பிராகா (Braga) அணியிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். நவம்பர் 2024-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இவரது தலைமையின் கீழ் அந்த அணி 2025-ஆம் ஆண்டு யுஇஎஃப்ஏ யூரோப்பா லீக்கில் (UEFA Europa League) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- 2025-ல் 21 போட்டிகளில் 19 இன்னிங்சில் வெறும் 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அவரது ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் சமீப காலமாக ரன்கள் குவிக்க திணறி வருகிறார். 2025-ல் 21 போட்டிகளில் 19 இன்னிங்சில் வெறும் 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 13.62 ஆகும்.
டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அவரது ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் "சூர்யகுமார் யாதவ் ரன்கள் குவிப்பது பற்றிதான் நினைக்க வேண்டும். அவுட்டாவது குறித்து சிந்திக்கக் கூடாது. அவருடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஒரு நிலையான மற்றும் நம்பகமான பங்களிப்பாளராக இருந்து வருகிறார், ஆனால் சமீப காலமாக அவரால் அந்தச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
அவர் ஒரு சுவாரஸ்யமான வீரர். ஏனென்றால் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஆட்டத்தைத் தொடங்க ஆறு, எட்டு அல்லது பத்து பந்துகளை எடுத்துக்கொண்டு, பின்னர் அதன்பிறகு தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்.
அவர் தனது அனைத்து ஷாட்களையும் ஆடுகிறார். தன்னை நம்புகிறார். டிராவிஸ் ஹெட்டைப் போலவே, ஆட்டமிழப்பதைப் பற்றி ஒருபோதும் பயப்படுவதில்லை என்பதுபோல் தெரிகிறது.
ரன்கள் எடுப்பதைப் பற்றி யோசி, ஆட்டமிழப்பதைப் பற்றி யோசிக்காதே. உன்னை நீயே நம்பு, உன் மீது நம்பிக்கை வை. டி20 வடிவத்தில் உலகின் சிறந்தவன் என்பதை நிரூபித்திருக்கிறாய், இப்போது மீண்டும் ஒருமுறை அதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டு. அவரிடம் நான் இதைத்தான் சொல்வேன்" என்றார்.
- வங்கதேசத்தில் நடந்த எதுவாக இருந்தாலும், அவை தவறானவை.
- அவர்களின் வேண்டுகோள் மீது ஐசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முஸ்தாபிசுர் ரகுமானை ஏலம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகள் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கானை துரோகி என விமர்சித்தன. இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என கொல்கத்தா அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கொல்கத்தா அணி அவரை விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் போர்டு ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் வங்கதேசம் முடிவு குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் "கடந்த சில நாட்களாக நடைபெற்ற பல்வேறு விசயங்கள் காரணமாக வங்கதேச அணி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க விரும்பவில்லை.
வங்கதேசத்தில் நடந்த எதுவாக இருந்தாலும், அவை தவறானவை. அவர்களின் வேண்டுகோள் மீது ஐசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம். நாங்கள் எல்லோரையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். ஆனால், ஆனால் வருவது அல்லது வராதது அவர்களை தேர்வு" என்றார்.
- லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன்.
- 4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். 10 சீசனில் 154 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
இவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனிக்கும் இடையில் சிறந்த தொடர்பு உள்ளது. எம்.எஸ். டோனியை சகோதரர் என்றே அழைத்து வருகிறார்.
இந்த நிலையில் Beard Before Wicket போட்காஸ்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2018-ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2018-ல் களம் இறங்கினோம். லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன். உண்மையிலேயே எனக்கு அப்போது 34 வயதிற்கு மேல் இருக்கும். அந்த ஓவர் முடிந்தபின்னர், அவர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், என்னுடைய கிரிக்கெட் மைதானத்தில் இனிமேல் ஒருபோதும் டைவ் அடிக்கக் கூடாது எனக் கூறினார். 4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார். அவர் என்னிடம் சொன்னபோது, ஆஹா என்பது போல் உணர்ந்தேன்.
இவ்வாறு பிராவோ தெரிவித்துள்ளார்.
- பென் ஸ்டோக்ஸை இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
- நாதன் லயன் 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 160 ரன்களும், ஹாரி ப்ரூக் 84 ரன்கள் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் சொதப்பினர்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது ஸ்டார்க் 14 முறை ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
நாதன் லயன் 10 முறையும், ஜடேஜா 8 முறையும் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
- முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது
- இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்கதேச அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மார்ச் 26, 2026 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்காளதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ஒரு உத்தரவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இம்முடிவு வங்கதேச மக்களைப் புண்படுத்தி, துயரப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும்சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த 20-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை. அதை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மாற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் டி.வில்லியர்ஸ் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஹர்திக் பாண்ட்யாவால் எந்த சூழ்நிலையிலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களம் இறங்கி அதிரடியாக ஆடக் கூடியவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவர் மிகவும் முக்கிய வீரராக இருப்பார். ஹர்திக் பாண்ட்யா 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்கள் பேட்டிங் செய்தால் எதிரணிக்கு தோல்விதான் ஏற்படும். இதனால் அவரை வெளி யேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் எதிர் அணி வீரர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.






