என் மலர்
விளையாட்டு
- பிவி சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையை 21-12, 22-20 என வீழ்த்தினார்.
- 2-வது சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 22-20 என நேர் கேமில் டென்மார்க் வீராங்கனை லின் ஜோஜ்மார்க்கை வீழ்த்தினார்.
2-வது சுற்றில் பிவி சிந்துவுக்கு கடும் சவால் நிறைந்துள்ளது. தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் இவரிடம் தோல்வியடைந்துதான் தங்கம் பதக்கத்தை தவறிவிட்டார். கரோலினா மரினுக்கு எதிராக பிவி சிந்துவின் சாதனை 5-11 என்ற அளவில்தான் உள்ளது.
கடைசியாக இருவரும் டென்மார்க் ஓபனில் மோதிக் கொண்டனர். அப்போது கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால் இருவருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. பிவி சிந்து கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் 2-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி29 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு.
- விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்தியா பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியில் யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து விவாதம் கிளம்பியது.
அதிலும் தொடக்க ஜோடி யார்? என்பதுதான் மிகப்பெரிய விவாதம். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினார்.
இதனால் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறக்கப்பட வேண்டும் என விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாசிம் ஜாபர் "விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரம் நாம் பெறும் தொடக்கத்தை பொறுத்து 3-வது மற்றும் 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். ஆகவே, 4-வது இடத்தில் களம் இறங்குவது கவலை அளிக்கும் விதமாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடக்க சுற்றில் அயர்லாந்து (ஜூன் 5), பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
- பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அந்த அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஷ்ரேயஸ் அய்யர், ஷாருக் கான் படத்தின் "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மற்ற கொல்கத்தா வீரர்களும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
- வெஸ்ட் இண்டீஸ்க்கு 15 பேரில் 9 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
- கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்றோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் இன்னும் அணியுடன் இணையவில்லை.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் (இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன) அங்கு சென்றுள்ளன. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நமீபியா அணிகள் மோதின. நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் பீல்டிங் செய்ய களம் இறங்கினர். இது போட்டியை பார்க்க வந்திருந்த அனைவரும் இது ஆச்சர்யமாக இருந்தது.
இது தொடர்பாக விசாரிக்கும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர்களில் தற்சமயம் 9 பேர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.
டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் சற்று ஓய்வு எடுத்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல திட்டமிட்டுள்ளதால் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சப்ஸ்டிடியூட் பீல்டர்களாக தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலில் களம் இறங்கிய நமீபியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க திணறிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
டிம் டேவிட் 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். மேத்யூ வடே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் முன்னேறின.
- இதில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் ரன்ரேட் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
முதல் பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற கொல்கத்தாவும், இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதற்கிடையே, ஐ.பி.எல். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை 3-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
ஐ.பி.எல். என்பது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி ஸ்போர்ட்மேன்ஷிப்பையும், பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் மேடையாக திகழ்கிறது.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய படிப்பினைகளை தெரிந்து கொள்வோம்.
அமைதியாக இருக்கும் சூழ்நிலையே உங்களிடம் சிறந்ததைக் கொண்டுவரும்
ஐ.பி.எல். தொடரின் ஆரம்பம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. சில ஆட்டங்களில் தோல்வி அடைந்தாலும் சோர்ந்து போகாத அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. இதனால் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஐதராபாத்தை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி வென்றதுடன், கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கிரிக்கெட் ஒரு மிக கொடூரமான விளையாட்டு

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த பாட் கம்மின்சை 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஹைதராபாத் அணி. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அணி உரிமையாளரான காவ்யா மாறன் அணி வீரர்களுக்கு உற்சாகம் தந்து பாராட்டியது பேசு பொருளானது.
வெற்றி பெறுவதற்காக 1 % முயற்சி எடுத்தால் அது 100%-க்கு கொண்டு செல்லும்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக பெங்களூருவை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடிந்தது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சிறப்பான ஆட்டமே காரணம் என்றால் மிகையாகாது.
அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்கான அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். முதலில் நடந்த போட்டிகளில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், சில போட்டிகளில் தோல்வி கண்டது. அதீத நம்பிக்கை காரணமாக முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைய நேரிட்டது.
வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே

ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி 5 முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் எம்.எஸ்.டோனி. நடப்பு தொடரே இவருக்கு கடைசி தொடராக இருக்கும் என கூறப்பட்டதால் இவர் களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு அளவில்லை. இவரைப் பொறுத்தவரை வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என கருதுவது வழக்கம். எப்பொழுது இறங்கினாலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். அதனையும் டோனி நிரூபிக்கத் தவறவில்லை.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதை ஏற்றுக் கொள்ளாத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதை கவனத்தில் கொள்ளாது வரும் காலங்களில் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே ஹர்திக் பாண்ட்யா யோசித்தால் அவருக்கு நல்லது.
யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்

இதுவரை நடந்த 17 ஐ.பி.எல். சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா. அணியின் கேப்டனாக இல்லாதபோதும், இவர் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடியிருக்க வேண்டும். தனது அணியின் மீதான அதீத நம்பிக்கையால் அதிரடி தொடக்கத்தை கொடுக்க எண்ணி, விரைவில் பெவிலியன் திரும்புவது இவரது பலவீனம்.
விளையாட்டில் விசித்திரக் கதை முடிவு இல்லை
சென்னை அணியின் எம்.எஸ்.டோனி மற்றும் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் ஆகியோரது ஆட்டம் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்தது. இருவரது ஆட்டமும் ரசிகர்களை எப்பொழுதும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடும்.
மோசமான நேரத்தில் சொந்த மக்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 7ல் வென்று ரன்ரேட் அடிப்படையில் தொடரிலிருந்து வெளியேறியது. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ மோசமாக தோற்றதால், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாம் மோசமாக விளையாடினால் ரசிகர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள். வெற்றி பெறுவதற்காக ஓரளவு போராட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐ.பி.எல். - மேலும் சில பாடங்கள் :
ஐ.பி.எல். போட்டிகளில் தனிப்பட்ட நபரின் சாதனைக்கு மதிப்பில்லை. குழுவாக இயங்குவதால் மட்டுமே பலன் கிடைக்கும்.
தோல்வி மற்றும் சரிவிலிருந்து ஒரு வீரர் எப்படி மீண்டெழுந்து வெற்றி பெறுகிறார் என்பதை கவனிக்கவேண்டும்.
போட்டியில் வெல்ல வேண்டுமெனில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.
எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் ஒரு வீரர் கவனத்தை சிதறவிடாமல் வெற்றிமீது மட்டுமே கவனம் வைக்க வேண்டும்.
போட்டியில் இருக்கும் அழுத்தங்களை சிறப்பாக கையாளும் வீரரே வெற்றி பெறுவார்.
போட்டியில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோல்வியை நினைத்து துவண்டு போகாமல் அடுத்தகட்ட முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஐ.பி.எல். கற்றுத் தருகிறது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.
- தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி நெதர்லாந்தை சந்தித்தது.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன் எடுத்தார்.
இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நெதர்லாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வனிந்து ஹசரங்கா 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நெதர்லாந்து 20 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.
- 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.
கார்டிப்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் அப்போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.
- டி20 உலகக் கோப்பை 'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.
- பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
நியூயார்க்:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ம் தேதியும், அமெரிக்காவுடன் 12-ம் தேதியும், கனடாவுடன் 15-ம் தேதியும் மோதுகிறது.
உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தது. இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
? New York
— BCCI (@BCCI) May 29, 2024
Bright weather ☀️, good vibes ? and some foot volley ⚽️
Soham Desai, Strength & Conditioning Coach gives a glimpse of #TeamIndia's light running session ??#T20WorldCup pic.twitter.com/QXWldwL3qu
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார்.
- அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி குணமடைந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான அவர் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார். அவர் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துள்ளேன். அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங் ஆற்றல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பொடோ ரோஸ்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் இன்று களமிறங்குகின்றனர்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' ஜோடியான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 20-22, 18-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இரண்டாவது நாளான இன்று இந்தியா சார்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்
மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






