என் மலர்
விளையாட்டு
- டிமிட்ரோவ் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
- அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் சினெர்-பிரான்சின் மவுடெட் மோதினர். இதில் சினெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா-7-6 (7-5), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே போல அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து)-வோன்ட்கோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா)-ஜபீர் (துனிசியா) ஆகியோர் தகுதி பெற்றனர்.
- டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
- ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.
இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஓமன் திணறியது.
- ஆட்ட நாயகன் விருது டேவிட் வைசுக்கு வழங்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுன்:
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நடந்த ஆட்டங்களில் கனடாவை அமெரிக்காவும், பப்புவா நியூகினியா வை வெஸ்ட் இண்டீசும் வீழ்த்தின.
இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் திணறியது.
ஆட்டத்தின் முதல் 2 பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தது. ரூபன் டிரம்பெல்மேன் வீசிய அந்த ஓவரில் பிரஜாபதி, அகில் இல்யாஸ் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.
அதன்பின் 3-வது ஓவரில் டிரம்பெல்மேன் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது பந்தில் நசீன் குஷி (6 ரன்) அவுட் ஆனார்.
அடுத்து மக்சூத் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓமன் 37 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. பின்னர் காலித் கைல்-அயன்கான் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது.
இந்த ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார்.
நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நமீபியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் மைக்கேல் வான்லிங்கன் ரன் எதுவும் எடுக்காமல் ஆவுட் ஆனார்.
அதன்பின் நிகோலாஸ் டேவின்-பிரைலின்க் ஜோடி பொறுமையாக விளையாடியது. டேவின் 24 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் எராஸ்மஸ் 13 ரன்னிலும் சுமிட் 8 ரன்னி லும் அவுட் ஆனார்கள்.
அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. மெக்ரான்கான் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பிரைலின்க் (45 ரன்) அவுட் ஆனார். 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை.
3-வது பந்தில் கிரீன் அவுட் ஆனார். 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப் பட்டது. 5-வது பந்தில் டேவிட் வைஸ் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது.
நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.
டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது டேவிட் வைசுக்கு வழங்கப்பட்டது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி.
- அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. லீக் சுற்று போட்டிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிரிஸ் கெயில் டி20 உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டு விளையாடியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
- டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
- பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
துவக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை 136 ரன்களில் கட்டுப்படுத்தியது. பப்புவா நியூ கினியா சார்பில் சேசே பான் அரை சதம் கடந்தார், டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளையும், ஜான் கரிகோ, சாட் சோபர் மற்றும் அலெய் நவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வென்றது.
பாரீஸ்:
கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- பிரேசிலின் மார்செலோ-ஓர்லாண்டோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
- அதன்படி முதலில் ஆடிய பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது.
கயானா:
டி20 உலகக் கோப்பை தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசியது. இதனால் பப்புவா நியூ கினியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் சேசே பான் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அவுட்டானார். டோர்ஜியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பப்புவா நியூ கினியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயினின் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 3 சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்,
கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 3-6 என இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-2, 6-2 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
- அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
- அப்போது அவரிடம் இந்திய அணி பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார்.
அபுதாபி:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார். அப்போது கம்பீர் சிரித்தபடி பதில் கூறியதாவது:
நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.
உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட பெரியதாக எப்படி இருக்க முடியும்?
இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல, 140 கோடி இந்தியர்கள்தான். அவர்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள்.
எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவை ஜூன் 6-ம் தேதி சந்திக்கிறது.
- கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.
கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Babar Azam interacts with cricketing icon Sunil Gavaskar ??#T20WorldCup pic.twitter.com/YZMRkDBXWV
— Pakistan Cricket (@TheRealPCB) June 1, 2024
- ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021-ம் ஆண்டில் இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வானார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐ.பி.எல். மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 50 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 1,326 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கு, சுருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. மூன்று சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அனஸ்டாசியாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொண்டார். இதில் கோகோ காப் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.






