என் மலர்
விளையாட்டு
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார்.
- அவருக்கு பதிலாக புதிய கோல் கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்.8-ந்தேதி சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.
இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடருகிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதை அடுத்து எதிர்பார்த்தபடியே பிரதான கோல்கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார். மாற்று கோல் கீப்பராக சுரஜ் கர்கெரா அங்கம் வகிக்கிறார்.
நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடிய ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், ஷம்ஷெர்சிங், குர்ஜந்த் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றிருந்த 10 வீரர்கள் நீடிக்கின்றனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதாக், சுரஜ் கர்கெரா, பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது, ரஹீல் முசீன், முன்களம்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன்-பாட்ரிக் தாக் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்க ஜோடியை வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
- தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
சியோல்:
தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை லைன் கிறிஸ்டோபெர்சன் உடன் மோதினார். இதில் காஷ்யப் 15-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மால்விகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை லைன் ஜேயர்ஸ்பீல்டிடம் 21-18, 15-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சோசு வாங்கிடம் 8-21, 13-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெளியேறியுள்ளது.
- இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
- 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
துபாய்:
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 7-வது இடத்திலும், விராட் கோலி 8-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
- கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
- 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளார்.
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
- ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்தது.
- இந்தப் பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.
துபாய்:
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸ் அணியை வென்றதன் மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
மேலும், மலேசியா மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர்.
- ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் ஒரு இந்திய வீரரை நமது அணியில் தேர்வு செய்ய விரும்பினால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சச்சின், விராட் கோலி, பும்ரா ஆகியோரை தேர்வு செய்தனர்.
ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர். அதே நேரத்தில் நாதன் லயன், அலெக்ஸ் கேரி ஆகியோர் விராட் கோலியை தேர்வு செய்தனர். மேலும் ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் டோனியை தேர்வு செய்யாதது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- மாணவனின் படிப்புக்கு ரிஷப் பண்ட் 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.
- ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் தம்முடைய படிப்புக்கு பண உதவி செய்யுமாறு ஒரு மாணவர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
குறிப்பாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தமது இன்ஜினியரிங் படிப்பை முடிக்க பண உதவி செய்யுமாறு சான்றிதழ்களை காண்பித்து அவர் கோரிக்கை வைத்தார்.
இது பற்றி அந்த நபர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. "ஹலோ ரிஷப் பண்ட் சார். நான் பொறியியல் கல்விக்கு நிதி இல்லாமல் போராடும் மாணவன். உங்கள் ஆதரவு என் வாழ்க்கையை மாற்றும். எனது பிரச்சாரத்திற்கு உதவ அல்லது பகிர்வதை கருத்தில் கொள்ளவும். உங்கள் கருணை எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்" என்று பதிவிட்டார்.
அதைப் பார்த்த ரிஷப் பண்ட் அந்த மாணவனின் படிப்புக்கு 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.
அத்துடன் அந்த நபருக்கு "உங்களுடைய கனவுகளை தொடர்ந்து துரத்துங்கள். கடவுள் எப்போதும் சிறந்த திட்டங்களை வைத்திருப்பார்" என்று ரிஷப் பண்ட் பதிலளித்தார். அவருக்கு அந்த நபர் "உங்கள் ஆதரவு எல்லாவற்றையும் குறிக்கிறது. கல்விக்கு தேவையான நிதி சேகரிக்கப்படவில்லை. இதை பரப்புவதில் எந்த உதவியும் ஒரு ஆசிர்வாதமாக இருக்கும். இன்னும் என் கனவுகளை துரத்துகிறேன்" என்று பதிலளித்தார். அத்துடன் ரிஷப் பண்ட் பணத்தை அனுப்பிய விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த நபர் "நன்றி ரிஷப் பையா" என்று பதிவிட்டார். இதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. ஆனால் அதைப் பார்த்த இதர இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட் ஏமாற்றப்பட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடித்தனர்.
அதாவது அதே நம்பர் கடந்த 3/4/2024 ம் தேதியன்று கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த 90000 ரூபாயை ஆன்லைனில் ஆர்சிபி அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்ததாக ட்விட்டரில் பதிவிட்டார். எனவே தம்முடைய கல்லூரி படிப்புக்காக உதவி செய்யுங்கள் என்று அந்த நபர் இதே போன்ற கோரிக்கையை வைத்திருந்தார். அந்த ஆதாரத்தை எடுத்த ரசிகர்கள் "இவருக்கு ஏன் பணம் அனுப்பினீர்கள்? இவர் ஏமாற்றுபவர்" என்று ரிஷப் பண்ட்டுக்கு தெரிவித்தனர்.
இருப்பினும் ரிஷப் பண்ட் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மற்ற ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து நம் நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட்டரை இப்படியா ஏமாற்றுவீர்கள்? என்று அந்த குறிப்பிட்ட நபரை ட்விட்டரில் ஆதாரத்துடன் விமர்சித்து திட்டி தீர்த்தார்கள். அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த ரசிகர் தற்போது 90,000 ரூபாய் பணத்தை மீண்டும் ரிஷப் பண்ட்க்கு அனுப்பிவிட்டதாகவும் தம்மை அனைவரும் மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
- கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
- 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
டேவிட் மலான் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக டேவிட் மலான் கடைசியாக 2023-ம் ஆண்டு விளையாடினார்.
36 வயதாகும் இவர் இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
- பெகுலா, வோஸ்னியாக்கி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 3-ம் நிலை வீரரும், 4 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) தொடக்க சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லி டி யூவை எதிர் கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் ஒரு செட்டை இழந்து இருந்தார். அல்காரஸ் 2-வது சுற்றில் போடிக்வான்டே சேன்ட் குல்ப்புடன் (நெதர்லாந்து) மோதுகிறார்.
உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மெக்டொனால்டை 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக் கில் வென்றார். மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள மெட்வ தேவ் (ரஷியா), அர்தர் பைல்ஸ் (பிரான்ஸ்) உள் ளிட்ட வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
உலகின் 11-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோகினாகிஸ் 7-6 (7-5), 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-6 (8-6) என்ற கணக்கில் ரஷிய வீராங்கனை காமிலா ராக்சி மோவாவை தோற்கடித்தார். 4-ம் நிலை வீரார்களான ரைபகினா (கஜகஸ்தான்) 6-வது வரிசையில் இருக்கும் பெகுலா (அமெரிக்கா) வோஸ்னியாக்கி (டென் மார்க்) உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
- பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.
ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.
- வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும்.
- நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை.
லாகூர்:
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.இந்த தோல்விக்கு பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களை அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் தற்போது நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை. அதுதான் முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணம். அவர்களின் வேகம் அதிகமாக குறைந்து விட்டது. ஒருவேளை காயம் இருந்தால் அதை அவர்கள் வெளியே சொல்ல வேண்டும். ஷாஹீன், நசீம், குர்ராம் ஆகியோர் 145 கி.மீ வேகத்தில் தங்களது கெரியரை தொடங்கினர். ஆனால் தற்போது அவர்களுடைய வேகம் 130க்கு கீழே வந்து விட்டது. நம்முடைய பயிற்சியாளர்களை குறை சொல்ல வேண்டும்.
ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தை சந்தித்து 2 வருடங்கள் கழித்து வந்தார். அப்போதும் அவர் தனது வேகத்தை இழக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பின்பும் அதே வேகத்தில் வீசுகிறார். காயத்தால் நீண்ட காலம் விளையாடாத பேட் கம்மின்ஸ் மீண்டும் விளையாடியபோது வேகம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் நமது பவுலர்களின் வேகம் ஏன் குறைந்து விட்டது? இத்தனைக்கும் நமது பயிற்சியாளர்கள் தேவையான வேலையை செய்கின்றனர். இருப்பினும் வேகம் 144 கிலோமீட்டரில் இருந்து 128ஆக குறைந்து விட்டது.
என்று அவர் கூறினார்.






