என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் தலையீடு வங்கதேசத்திற்குதான் இழப்பு
    • இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

    2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.

    ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளது.  

    இந்நிலையில் வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடு தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். , இது பாகிஸ்தானின் "குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது, இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு "இரண்டுக்கு ஒன்று" (2 vs 1) என்ற போட்டியை உருவாக்கும் தேவையற்ற முயற்சி என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து "ஏற்கனவே பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுகிறது. இந்த விவகாரத்திற்கும், பாகிஸ்தானிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவையில்லாத விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதனால் வங்கதேச கிரிக்கெட் அணியும் அதன் வீரர்களும்தான் பாதிப்படைவார்கள். உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் இழப்பது மிகப்பெரியது. இந்தியாவுக்கு வரவில்லை என்று நேரடியாக மறுப்பு தெரிவிக்கும் முன், ஐசிசியுடன் கலந்துரையாடுவதற்கான வழிகளை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை இங்கிலாந்திலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ நடத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட இல்லை, ஆனால் இங்கே அவர்கள் உண்மையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம். எனவே இது யாருடைய தோல்வியும் அல்ல, வங்கதேசத்தின் தோல்வி" என தெரிவித்துள்ளார்.  

    • இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.
    • பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    SA20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இந்தாண்டு நடந்து வருகிறது.

    SA20 லீக்கின் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மோதியது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேபிடல்ஸ் வீரர் டெவால்ட் பிரேவிஸ் சதம் அடித்து அசத்தினார். 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் SA20 லீக் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை டெவால்ட் பிரேவிஸ் படைத்தார்

    • சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
    • முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

    முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 3 ஆவது டி20 போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    இதனால் காயத்தில் இருந்து மீண்டு திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டுத் துறையில் தங்கள் சாதனைகளுக்காக பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் கே. பஜனிவேல் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போதும் வெற்றி.
    • ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற 15வது பிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. இதன் மூலம் பிபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இன்று இறுதிப்போட்டியில் ஒன்பதாவது முறையாகவும், சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக ஆறாவது முறையும் களமிறங்கியது. இதற்கு முன்பு சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்கடித்து, அதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. ஸ்கார்ச்சர்ஸ் அணி, பிபிஎல் இறுதிப் போட்டியில் சிஸ்சர்ஸ் அணியிடம் இரண்டு முறை, அதாவது 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோற்றுள்ளது. 

    2011, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்களான சிஸ்சர்ஸ் அணி, பிபிஎல்-லின் இரண்டாவது மிக வெற்றிகரமான அணியாகும். இந்த ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன. 

    பிரிஸ்பேன் ஹீட் அணி 2012 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியனாக முடிசூட்டப்பட்டுள்ளது. அதே சமயம், சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன. 

    பிக் பாஷ் லீக்

    பிக் பாஷ் லீக், இந்தியாவின் ஐபிஎல் தொடர்போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடராகும். இது டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். இந்த கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவால் 2011இல் தொடங்கப்பட்டது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வங்கதேசத்தை நீக்கி ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
    • பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.

    பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்தது. இதனால் வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.

    இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது. இந்நிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

    சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

    • பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை.
    • அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.

    பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்காளதேசம் அறிவித்தது. இதனால் வங்காளதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.

    இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது.

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி கூறியதாவது:-

    இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. செயல்படுகிறது. இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வங்காள தேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்த நிலைப்பாடு அரசின் அறிவுறுத்தலின்படியே இருக்கும். பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை. அவர் திரும்பியதும் எங்களின் இறுதி முடிவு தெரிய வரும். அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஐ.சி.சி.-ன் கீழ் நாங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

    பாகிஸ்தான் விலக முடிவு செய்தால் வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

    இரு தரப்பு தொடர், ஆசிய கோப்பையில் ஒதுக்கி வைத்தல், பி.எஸ்.எல். போட்டிகளுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லை, சர்வதேச போட்டிகள் இல்லை என பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், கடுமையான வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    • வங்காள தேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப் பட்டுள்ளது.
    • 20 ஓவர் உலக கோப்பையில் 'லீக்' சுற்று வரை ரூ.3.6 முதல் ரூ.6.7 கோடி வரை கிடைக்கும்.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நிராகரித்தது.

    தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் வங்காளதேசத்தை 20 ஓவர் உலக கோப்பையில் இருந்து நீக்கி ஐ.சி.சி. அதிரடி முடிவை எடுத்தது. வங்காள தேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப் பட்டுள்ளது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட மறுத்ததால் வங்காளதேசத்துக்கு ரூ.360 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    20 ஓவர் உலக கோப்பையில் 'லீக்' சுற்று வரை ரூ.3.6 முதல் ரூ.6.7 கோடி வரை கிடைக்கும். இந்த பணத்தை வங்காளதேசம் இழக்கிறது. பாதுகாப்பு குறித்து ஐ.சி.சி. உத்தரவாதம் அளித்தும் இந்தியாவில் விளையாட மறுத்ததால் உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் கீழ் ரூ.24 கோடி வரை வங்காள தேசத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், வருவாய் பங்கீட்டில் இருந்து வங்காளதேசம் விலக்கப்பட்டால் ரூ.325 முதல் ரூ.330 கோடி வரை இழப்பு ஏற்படும். வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானத்தில் இது சுமார் 60 சதவீதம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தத்தில் ரூ.360 கோடி வரை இழப்பு ஏற்படும்.

    வங்காளதேச முன்னணி வீரர்கள் இந்திய விளையாட்டு உபகரண நிறுவனங்களான எஸ்.ஜி. மற்றும் எஸ்.எஸ். உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தத்தில் உள்ளன்ர. அவர்களும் தங்கள் வருமானத்தை இழக்க நேரிடும்.

    • முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், டி20 தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 3வது சுற்றில் திடீரென விலகினார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிசை சந்திக்க இருந்தார்.

    ஆனால் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் மேடிசன் இங்லிஸ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (U19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், U 19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சாம்சன் அதிகபட்சமாக 37 ரன் சேர்த்தார்.

    இந்தியா சார்பில் அம்ப்ரிஷ் 4 விக்கெட்டும், ஹெனில் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 13.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆயுஷ் மாத்ரே 53 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஆட்ட நாயகனாக அம்ப்ரிஷ் அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணி தான் ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது.

    ×