என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.

    8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

    இந்த தொடர் வரும் 8-ம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெறவில்லை.

    இந்நிலையில் தொடை எலும்பு காயம் காரணமாக கோட்ஸி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.

    முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.

    • நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர்.
    • தென் ஆப்பிரிக்காவில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

    பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர். இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றனர். இந்த ஆட்டத்திற்குப் பிறகு அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் தென் ஆப்பிரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி:-

    டெம்பா பாவுமா, ஜெரால்ட் கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்டர், மிஹ்லாலி மபோங்வானா*, செனுரன் முத்துசாமி*, கிடியோன் பீட்டர்ஸ்*, மீகா-ஈல் பிரின்ஸ்*, ஈதன் போஷ்*, மேத்யூ ப்ரீட்ஸ்கே*, ஜேசன் ஸ்மித், மற்றும் கைல் வெர்ரைன்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
    • அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது.

    8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நின்ற ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் கிறிஸ் கஃபானி, குமார் தர்மசேனா, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்,

     

    போட்டி நடுவர்கள் குழுவிற்கு டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே மற்றும் ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். பூன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்தார். அதே நேரத்தில் மதுகல்லே 2013 இறுதிப் போட்டிக்கு பிறகு மீண்டும் வருகிறார். மேலும் பைக்ராஃப்ட் 2017 போட்டியிலும் இடம்பெற்றார்.

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவில் இருந்து எந்த நடுவர்களையும் ஐ.சி.சி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நடுவர்கள் விவரம்:-

    குமார் தர்மசேனா

    கிறிஸ் கஃபானி

    மைக்கேல் கோ

    அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    ரிச்சர்ட் கெட்லெபரோ

    அஹ்சன் ராசா

    பால் ரீஃபெல்

    ஷர்புத்தோலா இப்னே ஷாஹித்

    ரோட்னி டக்கர்

    அலெக்ஸ் வார்ஃப்

    ஜோயல் வில்சன்

    போட்டி நடுவர்கள் விவரம்:-

    டேவிட் பூன்

    ரஞ்சன் மதுகல்லே

    ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்

    • டி20 பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் ரவி பிஷ்னாய், 9-வது இடத்தில் அர்ஷ்தீப் உள்ளனர்.

    அதன்படி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10-ல் மற்ற இந்திய வீரர்களாக 3-வது இடத்தில் திலக் வர்மாவும் 5-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் உள்ளர். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.

    • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
    • போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.

    இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கான திட்டத்திற்கு பிசிசிஐ தயார் ஆகி வருகிறது.
    • ரோகிர் சர்மா ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் இருப்பதால் 2027 வரை கேப்டனாக நீடிக்க சந்தேகம்.

    இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். 37 வயதாகும் ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டியில் 12 சதங்களுடன் 4,301 ரன்கள் அடித்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களுடன் 10,866 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலிக்குப் பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற கையுடன் டி20 அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்தியா கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களையும் (நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) இழந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாயப்பை இழந்தது. இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து விலகினார். ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார்.

    வருகிற 19-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் இந்தியா டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை (2027) ஆகியவற்றிற்கான அணியை தயார் செய்ய உள்ளது.

    தற்போது ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்னும் இரண்டு வருடம் செல்ல பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் உங்களுடைய எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை என்ன? என்று பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோகித் சர்மா தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

    இந்திய அணியின் நீண்ட கால திட்டம் என்பதால், ரோகித் சர்மாவை கேப்டனாக நீட்டிக்க பிசிசிஐ விரும்பாது. இதனால் கேப்டன் பதவியை வேண்டாம், ஒரு வீரரான விளையாடுகிறேன் எனக் கூறினால் தற்போதுள்ள ஃபார்மில் அதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

    இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த கேப்டனுக்கான வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் நீண்ட காலமாக தொடர்ந்து கேப்டனாக பணியாற்ற அவருடைய உடற்தகுதி ஒத்துழைக்குமா? என்ற கவலை உள்ளது.

    இதனால் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக்கி கேப்டன் பதவியை வழங்க பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில்லும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமிக்கலாமா? என்றும் பிசிசிஐ யோசித்து வருகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்த மூன்று பேருக்கும் கேப்டனாகவும் வாய்ப்புள்ளது.

    அதேவேளையில் விராட் கோலி குறித்து பிசிசிஐ தற்போது வரை எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை. இதனால் விராட் கோலி தற்போது தனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை.

    • டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, துருவ் ஜூரல், சிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை.

    மாறாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர் .

    ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகிய 7 வீரர்கள் மட்டுமே இரண்டு அணியிலும் உள்ளனர்.

    டி20 தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி இழந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.



    • கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம்.
    • ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

    காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட மூன்று வீரர்கள் பங்கேற்பது கிட்டத்தட்ட சந்தேகத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகும் நிலையில், ஸ்டீவன் ஸமித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருடன் அணியை வழிநடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம். முதல் டெஸ்ட் (இலங்கை அணிக்கு எதிராக) போட்டியில் ஸ்டீவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்."

    "சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் தனது கரியரில் சிறந்து விளங்கியுள்ளார். அந்த வகையில், இவர்கள் இருவரில் ஒருவர். தற்போதைய சூழ்நிலையில், பேட் கம்மின்ஸ் இடம்பெறுவது கடினம் தான். ஹேசில்வுட் தற்போது நலமுடன் இருக்கிறார். எனினும், அவரின் மருத்துவ அறிக்கையை பொருத்து தான் அவர் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகுவது பற்றிய தகவல்கள் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்று புதிய வீரர்களுடன் விளையாடும் என்று தெரிகிறது. தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்கள் விவரங்களை பிப்ரவரி 12-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

    • ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

    காயத்தால் அவதியுற்ற நிலையில், இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் சமீபத்தில் விலகியிருந்தார். இதுதவிர பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது காயமுற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகினார்.

    • எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • டுவேன் பிராவோவை முந்தியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரான எஸ்.ஏ.20 தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்டுகளை எட்டினார். இது டி20 கிரிக்கெட்டில் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாக மாறியது. முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தி டுவேன் பிராவோ அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக இருந்து வந்தார்.

    26 வயதான ரஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், உள்ளூர் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் 472 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பிரான்சைஸ் கிரிக்கெட்டை பொருத்தவரை ரஷித் கான் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்கஸ், சசெக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

    461 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ரஷித் கானின் சராசரி 18.08 ஆகும். டுவைன் பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 24.40 ஆகும். ரஷித் கான், டுவைன் பிராவோ வரிசையில் சுனில் நரைன் (574 விக்கெட்டுகள்), இம்ரான் தாஹிர் (531 விக்கெட்டுகள்) மற்றும் ஷகிப் அல் ஹாசன் (492 விக்கெட்டுகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாலையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து நின்று கொண்டிருந்த ராகுல் டிராவிட் பயணித்த கார் மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய டிராவிட் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண் மற்றும் ஆட்டோ எண்ணை டிராவிட் பதிவு செய்துக்கொண்டார். சிறிது நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு டிராவிட் அங்கிருந்து புறப்பட்டார். இதனை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. டிராவிட் தனது காரை ஓட்டிச் சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    பொறுமையின் சிகரமாக அறியப்படும் ராகுல் டிராவிட் சாலையில் வாக்குவாதம் செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



    ×