என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
    • இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித்சர்மா கேப்டனாக பணியாற்றினார்.

    அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு அவர் கேப்டனாக நீடித்து வருகிறார். 20 ஓவர் அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாக உள்ளார்.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய பயணத்திலும் டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார்.

    தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுகிறார். சாம்பியன்ஸ் டிராபியோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

    ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டமிட்டது. ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடாத போது அவர் கேப்டனாக பணியாற்றினார். இதனால் எதிர்காலத்தில் பும்ராவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    இதற்கிடையே பி.சி.சி.ஐ.யின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பும்ராவின் உடல் தகுதி குறித்து அடிக்கடி கேள்வி எழுகிறது. கேப்டன் பதவியில் அவரது பந்து வீச்சுத் திறன் பாதிக்கப்படலாம் என்று கருதுகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு ரிஷப் பண்ட் அல்லது ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சுப்மன் கில்லும் இதற்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக உள்ளார். இங்கிலாந்து தொடருக்கு அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ரோகித் சர்மா ஓய்வு பெறும்போது சுப்மன் கில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:

    நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).

    போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).

    • டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
    • சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன் நடக்கும் ஒருநாள் தொடர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

    • இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை கொங்கடி திரிஷா பெற்றார்.
    • அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்னும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்னும் எடுத்தார்.

    ஐதராபாத்:

    இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கொங்கடி திரிஷா தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

    மேலும், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியா பெலுசி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி வீரர் 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் நம்பர் 2 வீரரான மெத்வதேவை தொடரில் இருந்து வெளியேற்றினார்.

    • முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 184 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்கள் எடுத்து தோற்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றனது.

    இதில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிரம் 40 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.20 தொடரில் இருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஆட்ட நாயகன் விருது மார்கிரமுக்கு வழங்கப்பட்டது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

    ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், நெதர்லாந்து வீரர் போடிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலகாரஸ் 7-6 (7-3), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.

    இதில் ரூனே 7-6 (7-4), 6-4 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
    • நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.

    இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.

    அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.

    எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    என்று பட்லர் கூறினார். 

    • டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
    • நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார்.

    இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.

    தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    என்று ரோகித் கூறினார்.

    இதனால் இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அறிமுகமானார்.
    • பண்ட் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல வெற்றிகளை பரிசாக வழங்கியுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பெற்றுள்ளார். அதற்காக தீவிரமாக பயிற்சியில் ரிஷப் பண்ட் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை அடுத்து மற்றொரு துறையில் பண்ட் கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் தனது வணிக வருவாயில் 10%-ஐ அறக்கட்டளையின் மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.

    2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மொத்தம் 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார்.

    • கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு குஜராத் அணி தள்ளப்பட்டிருந்தது.
    • கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார்.

    இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் பெத் மூனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆஷ்லே கார்ட்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×