என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
    • புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9-வது இடங்களில் இந்த இரண்டு அணிகளும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த இரு அணிகளில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் (மும்பை), பத்திரனா (சென்னை) ஆகியோர் பந்து வீச்சில் அரிதான ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    அந்த வகையில் அவர்கள் இருவரும் 4 ஓவர்கள் பந்து வீசி 50-க்கும் கூடுதலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர். போல்ட் ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    அதேபோல சென்னை வீரர் பத்திரனா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இந்த இரு பந்துவீச்சாளர்களும் இப்படி ரன்களை வாரி வழங்குவது அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. 

    • நடப்பு ஐ.பி.எல். போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வழக்கத்திற்கு மாறாக தகிடுதத்தம் போடுகின்றன.
    • இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    நடப்பு ஐ.பி.எல். போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வழக்கத்திற்கு மாறாக தடுமாறி வருகின்றனர். 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் தலா 4 தோல்விகளுடன் கடைசி 3 இடங்களில் பரிதாபகரமாக உள்ளன.

    இந்த அணிகள் எஞ்சிய தங்களது 9 லீக்கில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். 3 முறை சாம்பியனான கொல்கத்தாவும் பின்தங்கியே இருக்கிறது.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

    இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து காணலாம்.

    டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் (3 வெற்றிகள்) பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி (+1.257) முதலிடத்திலும், குஜராத் (+1.031) 2-வது இடத்திலும், பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் (+0.289) 4-வது இடத்திலும், லக்னோ (+0.078) 5-வது இடத்திலும் உள்ளனர்.

    கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் 2 வெற்றியுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா (-0.056) 6-வது இடத்திலும், ராஜஸ்தான் (-0.185) 7-வது இடத்திலும் உள்ளன.

    கடைசி 3 இடங்களில் முறையே முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (-0.010) 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.889) 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (-1.629) 10-வது இடத்திலும் உள்ளன.

    ஆரஞ்சு நிற தொப்பி:

    அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (288 ரன்கள்) தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்

    1. நிக்கோலஸ் பூரன் - 288 ரன்கள்

    2. மிட்செல் மார்ஷ் - 265 ரன்கள்

    3. சூர்யகுமார் யாதவ் - 199 ரன்கள்

    4. சாய் சுதர்சன் - 191 ரன்கள்

    5. ரகானே - 184 ரன்கள்

    ஊதா நிற தொப்பி:

    அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை சென்னை அணியின் நூர் அகமது (11 விக்கெட்டுகள்) தன்வசம் வைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்:

    1. நூர் அகமது - 11 விக்கெட்டுகள்

    2. கலீல் அகமது - 10 விக்கெட்டுகள்

    3. ஹர்திக் பாண்ட்யா - 10 விக்கெட்டுகள்

    4. முகமது சிராஜ் - 9 விக்கெட்டுகள்

    5. மிட்செல் ஸ்டார்க் - 9 விக்கெட்டுகள்

    • கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம்.
    • நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஹிட்களில் தான் தோல்வியைத் தழுவினோம்.

    பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தோம். மேலும் பவர்பிளேவில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. இது நாங்கள் எங்களுடைய சிறந்த மற்ற மேம்பட்ட செயல்திறனாகும். மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் எங்கள் சில நேர்மறையான அம்சங்களும் கிடைத்துள்ளன.

    என ருதுராஜ் கூறினார்.

    • முதல் 2 போட்டிகளில் திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கொல்கத்தா:

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் திக்வேஷ் ரதி. இவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    25 வயதான திக்வேஷ் ரதி இந்த ஐ.பி.எல்.லில் அறிமுகமாகி 5 ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரன்களை விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசி வருகிறார்.

    அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும்போது வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்தபோது திக்வேஷ் ரதி அருகே வந்து கையில் நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் கொண்டாடினார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து மும்பைக்கு எதிராகவும் இதே மாதிரியான நோட்புக் கொண்டாட்டத்துக்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளை பெற்றார்.

    இந்த நிலையில் அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நேற்றைய ஆட்டத்தில் அவர் கொல்கத்தா தொடக்க வீரர் நரைனை அவுட் செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடினார். ஆடுகளத்தில் கையெழுத்திடுவது போல சைகை செய்தார்.

    கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
    • மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.

    மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.

    • தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
    • கேரி ஸ்டீட்டின் வழிகாட்டுதலில் 2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து மகுடம் சூடியது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.

    டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.

    53 வயதான கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

    2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது அவரது வழிகாட்டுதலில் முத்தாய்ப்பான வெற்றிகளாக அமைந்தன.

    • பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
    • இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

    பியூனஸ் அயர்ஸ்:

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை 18 வயதான சுருச்சி இந்தர்சிங் முதல் முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

    8 பேர் இடையிலான இறுதி சுற்றில் சுருச்சி 244.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். நடப்பு தொடரில் இந்தியாவின் 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீனாவின் கியான் வெய் 241.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜியாங் ரேன்சிங் 221 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். அவர் தகுதி சுற்றோடு (13-வது இடம்) வெளியேற்றப்பட்டார்.

    இதற்கிடையில், ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டலில், விஜய்வீர் சித்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

    பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்திலும் (3 தங்கம் உள்பட 7 பதக்கம்), இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    • குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல பார்மில் உள்ளனர்.
    • ‘சுழல் மன்னன்’ ரஷித் கானின் பந்து வீச்சு இதுவரை எடுபடவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து எளிதில் வீழ்த்தியது. குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல பார்மில் உள்ளனர்.

    இவர்களின் நிலையான ஆட்டம் தான் குஜராத்தை வீறுநடை போட வைக்கிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் கலக்குகிறார்கள். 'சுழல் மன்னன்' ரஷித் கானின் பந்து வீச்சு இதுவரை எடுபடவில்லை. அவரும் மிரட்டினால் பந்து வீச்சு மேலும் வலுவடையும்.

    ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் உதை வாங்கியது. அடுத்து தொடர்ச்சியாக சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா, ஹசரங்காவும் பலம் சேர்க்கிறார்கள்.

    ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ராஜஸ்தானுக்கு எதிரான தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையில் உள்ள குஜராத் அணிக்கு உள்ளூர் சூழல் சற்று அனுகூலமாக இருக்கும்.

    • பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
    • சென்னை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

    இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்களும், துபே 42 ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 27 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி  ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய போது 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
    • கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

    கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தனது கைகளில் எழுதியதால் தான அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுறேன் என்ன பண்றாங்கனு பார்க்கலாம் என்பது போல இருந்துச்சு அவரது செயல் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் மெட்டியோ பெரேட்டினி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 ஸ்வரேவும், 2வது செட்டை 6- 3 என பெரேட்டினியும் வென்றனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெரேட்டினி 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    ×