என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் புகழ்பெற்ற சீக்கிய மத வழிபாட்டுத் தலமான தேரா சச்கண்ட் பல்லானிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

    இந்தச் சூழலில், இன்று (சனிக்கிழமை) தேரா சச்கண்ட் பல்லானிற்கு மற்றும் ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

    இன்று விடுமுறை என்பதால் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை. ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் தேரா பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

    • மேல்சபை எம்.பி.யாக சுனேத்ரா பவார் உள்ளார்.
    • அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.

    மராட்டிய மாநில துணை முதல்வராக இருந்த வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜ.க-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுக் கொண்டார்.

    மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெறுகிறார்.

    62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார்.

    இதை தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.

    சுனேத்ரா பவார் துணை முதல்வராக நீடிக்கவேண்டும் என்றால் தற்போது அவர் வகித்து வரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும். அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார். 

    • பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    

    • கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாட்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர்.
    • உடலில் காயம் அடைந்த வாலிபர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.

    ஆந்திரா-ஒடிசா எல்லையில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோத திருவிழாவை நடத்தி வருகிறார்கள். வாலிபர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாட்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர். நேற்று மலை கிராமத்தில் திருவிழா நடந்தது. சாணத்தில் ஊற வைத்த கட்டையை எடுத்து வந்து வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சிரித்தபடியே அடித்தனர்.

    இந்த சம்பவத்தை ஊர் மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். உடலில் காயம் அடைந்த வாலிபர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.

    காயம் அடைந்த வாலிபரை அவரை தாக்கிய வாலிபர் கட்டிப்பிடித்து கை குலுக்கினர். இதனால் வாலிபர்கள் இடையே சகோதரத்துவம் அதிகரிக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர். 

    • உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு இளம்பெண்ணை வஜித் என்பவர் கடந்த 2020-ம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே 3 மகன்கள் இருந்தனர்.

    மகன்கள் உடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்த்து விடுமாறு மனைவியிடம் விஜித் தகராறு செய்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் 7-ம் வகுப்பு படிக்கும் 2-வது மகனான அல்தமாஷ் (12) நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் வஜித், அல்தமாசின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து அல்தமாசை கொலை செய்து விட்டதாகவும் அவனது உடலை காட்டுப் பகுதியில் சென்று எடுத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

    உடனே குடும்பத்தினர் பதறி அடித்து அங்கு சென்று பார்த்த போது சாலையோர புதரில் சிறுவன் அல்தமாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

    மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த வஜித் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

    இது குறித்து கொலையுண்ட மகனின் தாய் கூறும்போது, தனது கணவர் மீது ஏற்கனவே குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், ஆனால் தன்னையும் தனது 3 மகன்களையும் துன்புறுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் 2 நாட்களுக்கு முன்பு, எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது நான் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். இதனால் கோபமடைந்த அவர் எனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
    • சரத் பவார் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

    அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சரத் பவாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் அளித்த பதில் பின்வருமாறு:-

    சுனேத்ரா துணை முதல்வரா பதவி ஏற்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செய்திகள் மூலமாக அதை தெரிந்து கொண்டோம். எனக்கும் எந்த தகவலும் தெரியாது.

    பிரபுல் பட்டேல், சுனித் தட்காரே போன்றோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறிதது இவர்கள் முடிவு செய்வார்கள்.

    தற்போது அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அஜித் பவார், ஷஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரண்டு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். இணைப்பு தேதி கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12-ந்தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்கு முன்னதாக அஜித் பவார் காலமாகிவிட்டார்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித் பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ரஷியாவிடம் இருந்து இந்தியா தினசரி 10 லட்சம் பேரலுக்கு மேல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
    • மார்ச் மாதத்திற்குள் அளவை பெரிய அளவில் இந்தியா குறைக்க இருப்பதாக தெரிகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    ஆனால், இந்தியாவுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதனால் அமெரிக்காவின் வலியுறுத்தலை இந்தியா நிராகரித்தது. இதன் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக வரி விதித்தார். என்றபோதிலும் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வந்தது.

    இதற்கிடையே வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப். ஒரு கட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவானது.

    இதற்கிடையே வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்து, தனது நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. அங்குகள் எண்ணெய் வளங்களை கையாள அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    அத்துடன், ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொண்டால் வெனிசுலாவை கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முடியும் என்று அமெரிக்கா சொல்லிக் கொண்டு வந்தது.

    வெனிசுலா எண்ணெய்க்கும் வரி, ரஷியா எண்ணெய்க்கும் வரி என்பதை தவிர்க்க, இந்தியா படிப்படியாக ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை வருங்காலத்தில் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதனால், வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெனிசுலாவில் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான வரியை அமெரிக்கா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், வெனிசுலா கச்சா எண்ணெய் அந்நாட்டின் PDVSA நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுமா அல்லது Vitol or Trafigura போன்ற வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுமா என்பது குறித்து விபரங்கள் வழங்கப்படவில்லை.

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து வருவதால், இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தி வருகிறது என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என நேரடியாக தெரிவிக்கவில்லை.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவை 10 லட்சம் பேரலுக்கு கீழ் கொண்டு வர தயாராகி வருகிறது. ஜனவரில் 1.2 மில்லியன் பேரலாக இருக்கும். இது பிப்ரவரியில் 1 மில்லியனாக இருக்கும். மார்ச் மாதம் 8 லட்சம் பேரலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
    • அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என்றார்.

    • தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
    • முதல் கணவர் வீரேகவுடா சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவர் அனந்தமூர்த்தி. இவர், ஆன்லைன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். அனந்தமூர்த்திக்கும், தொட்டபள்ளாப்புரா அருகே அனபே கிராமத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதாகவும் அனந்தமூர்த்தியிடம் சுதாராணி கூறியிருந்தார்.

    இதையடுத்து, தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அவர்களை சமாதானப்படுத்தி சுதாராணியை ஒரு கோவிலில் வைத்து அனந்தமூர்த்தி திருமணம் செய்திருந்தார். இதற்கிடையில், கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் ஐதராபாத்துக்கு வேலை விஷயமாக செல்வதாக அனந்தமூர்த்தியிடம் கூறிவிட்டு சென்ற சுதாராணி திரும்பி வரவில்லை.

    இதற்கிடையே சுதாராணி பற்றி விசாரித்தபோது அனந்தமூர்த்திக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது அவரது முதல் கணவர் உயிருடன் இருப்பதும், தற்போது ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த சிவகவுடா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதும் அனந்தமூர்த்திக்கு தெரியவந்தது. இதுபற்றி தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

    அதில், முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறி சுதாராணி என்னை 2-வது திருமணம் செய்தார். தற்போது அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.20 லட்சத்துக்கு மேல் வாங்கி மோசடி செய்ததுடன், 3-வதாக சிவகவுடாவை திருமணம் செய்துள்ளார்.

    என்னை போன்று பலரை திருமணம் செய்து, பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்வதுதான் கல்யாண ராணியான சுதாராணியின் வேலை என்று அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த முதல் கணவர் வீரேகவுடாவும் சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனக்கு மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட தெரியவில்லை எனக்கூறி பிரிந்து சென்று விட்டார். என்னிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வீரேகவுடாவும் புகார் அளித்து உள்ளார்.

    இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
    • தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    இதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பதை பொறுத்தமட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது.

    அதேபோன்று மருந்து பொருட்களில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுகாதாரத்தில் நவீனத்துவம் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிகிறது. கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.

    வருமான வரி விதிப்பு வரம்பை பொறுத்தமட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பழைய வரி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, புதிய வரி முறையை நோக்கி அரசாங்கம் செல்லக்கூடும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் விலை குறைந்தது.

    இதனால், பட்ஜெட்டில் இந்த பொருட்கள் மீதான விலைத்தாக்கம் பெரிய அளவில் ஏற்றமாகவோ, இறக்கமாகவோ இருக்காது என கூறப்படுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எழுச்சி பெறும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம்.
    • மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
    • மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் கான்ஃபிடன்ட் குழுமத் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

    வருமான வரி மற்றும் அமலாக்க துறைகளின் தொடர்ச்சியான சோதனைகளுக்கு மத்தியில் இந்த முடிவை அவர் எடுத்தாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

    ராய் சோதனை அதிகாரிகள் கோரிய ஆவணங்களை தனது அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து எடுக்க சென்றபோது, தனது சொந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

    57 வயதான சி.ஜே. ராய் ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார். ராய் சிரியாங்கந்தத் ஜோசப்பின் இந்த சோக முடிவு வணிக மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ×