என் மலர்
இந்தியா
- தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
- சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர்கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும்.
சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
- மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
- விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவி, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த 2 மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளைவாக அவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் ஏஐ ஏற்றுக்கொள்வது இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவீதம் அதிகரிக்கும்.

இது டிவி மற்றும் தொலைபேசி நிறுவனங்களை விலைகளை அதிகரிக்க கட்டாயப்படுத்தும். இந்த விளைவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.
தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன
- முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர்.
புதுடெல்லி:
ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கிளை மூலம் 13 போலி கணக்குகளை உருவாக்கி அவற்றின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்திருக்கின்றனர். சைபர் குற்றங்கள் மூலம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை எடுப்பதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் நடப்பு கணக்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சைபர் குற்றவாளிகளின் இந்த மோசடிக்கு குறிப்பிட்ட அந்த வங்கியின் மேலாளர் விகாஸ் வத்வா மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளின் உடந்தையுடனும், குற்றவியல் சதித்திட்டத்துடனும் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், இதற்காக கே.ஒய்.சி. விதிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்த கணக்குகள் மூலம் ரூ.1,084 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மேற்படி முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து விகாஸ் வத்வா உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் மோடி இரு நாள் பயணமாக இன்று அசாம் மாநிலம் செல்கிறார்.
- கவுகாத்தி-கொல்கத்தா இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கவுகாத்தியில் இன்று மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, நாளை காலை ரூ.6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீள கஜிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
- பாராளுமன்றத்தில் ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டது.
- ஆன்லைன் மசோதா அமலானபின் 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு கூறுகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மசோதா அமலானபின், 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
- மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
- இதில் ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேட்சையாக நின்று வென்றார்.
மும்பை:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஸ்ரீகாந்த் அப்போதைய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
- எங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற என்.டி.ஏ-வின் திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக 30 வருடத்திற்கு பிறகு மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. புனே உள்ளிட்ட மாநகராட்சியிலும் வெற்றி வாகை சூடுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "தேங்க் யூ மகாராஷ்டிரா. எங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாநிலத்தின் ஆற்றல்மிக்க மக்கள், மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற என்.டி.ஏ-வின் திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மக்களுக்கு எனது நன்றிகள்.
இது முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும், இந்த மாநிலத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும் ஆன ஒரு வாக்கெடுப்பு ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "மகாராஷ்டிரா முழுவதும் மக்களிடையே அயராது உழைத்த ஒவ்வொரு என்.டி.ஏ. தொண்டரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் நமது கூட்டணியின் சாதனைகளைப் பற்றிப் பேசினார்கள், வரும் காலங்களுக்கான நமது தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்கள், மேலும் எதிர்க்கட்சிகளின் பொய்களையும் திறம்பட முறியடித்தார்கள். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது.
- வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, எளிதாக அழிக்கப்படும் வகையில் இருந்தது என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி "தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்," என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா பதில் கொடுத்துள்ளார். அதில், சாக்குப்போக்கு சொல்லும் படை திரும்பியது! எண்ணிக்கை முடிவதற்குள் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?
ராகுல் தான் சிறப்பாக செய்வதை செய்யத் திரும்புகிறார். இழிவுப்படுத்துதல், திரித்தல் மற்றும் தவறான தகவல். பரம்பரை திருடன் (Khandani chor) இப்போது தாக்கரேக்களின் கூற்றுகளை மீண்டும் எழுப்புகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவதற்காக சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வடக்கு பெங்காலில் நிர்வாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026 மேங்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் உள்ள டெல்டங்கா இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மைனாரிட்டி சமூகத்தின் இந்த கோபம் நியாமானது.
மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுடைய குடும்பத்துடன் நிற்கிறோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
வெளிமாநிலத்தில் பெங்கால் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- ஜனவரி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
- தேவைப்பட்டால் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு.
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவர் இரண்டு முறை தேசிய தலைவராக பதவி வகித்துவிட்டார். அவருடைய பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. மேலும், தேசிய தலைவர் பதவியுடன், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதனால் பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக கட்சி காலதாமதம் செய்து வந்தது. பல மாதங்களாக தேர்வு செய்யப்படாமல் இருப்பதால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனம் செய்தது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி புதிய தேசிய தலைவர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என பாஜக கட்சி தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
அதில் "ஜனவரி 19-ந்தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால் ஜனவரி 20-ந்தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய செயல் தலைவராக உள்ளார். இவர் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமித் ஷாவுக்குப் பிறகு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜே.பி. நட்டா தேசிய தலைவரானார்.
- காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
- அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.
மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இங்கியுள்ளது.
இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி பா.ஜ.க. 58 இடங்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தாக்கரே சிவசேனா 45 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது. பா.ஜ.க. 22 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கிலேயே உள்ளன.
நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. 73 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
122 வார்டுகளை கொண்ட நாசிக்கில் பா.ஜ.க. 10 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 3 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளன.
புனேவில் பா.ஜ.க. 48 இடங்கள், அஜித் பவார் என்.சி.பி. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 4 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தானேவிலும் பா.ஜ.க. கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 இடங்கள், சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.






