என் மலர்
இந்தியா
- சில பிஸ்கட்களை சாப்பிட்ட குழந்தை இஹான் திடீரென மயங்கினான்.
- டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள காஞ்சிராம்குளம் பகுதியில் வசிப்பவர் ஷிஜில். இவரது மனைவி கிருஷ்ணபிரியா. இவர்களது மகன் இஹான் (வயது 1). சம்பவத்தன்று ஷிஜில் கடையில் இருந்து பிஸ்கட் வாங்கி வந்துள்ளார்.
அதனை மகனுக்கு கிருஷ்ண பிரியா கொடுத்துள்ளார். சில பிஸ்கட்களை சாப்பிட்ட குழந்தை இஹான் திடீரென மயங்கினான். உடனடியாக அவனை நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை இறந்ததாக வெளியான தகவல் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தை இறந்தது ஏன்? என்பது தொடர்பான விபரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2 விழாக்களும் திருவனந்தபுரம் கீழக்கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
கேரள மாநிலத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்று மத்திய மந்திரியாக உள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி, கேரளம் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கேரளா வந்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா வர உள்ளார். அவர் வருகிற 23-ந்தேதி கேரள மாநிலத்தில் நடைபெறும் ரெயில்வே நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் இருந்து அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, ரெயில்வே துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அப்போது அவர் 4 புதிய ரெயில்கள் மற்றும் பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2 விழாக்களும் திருவனந்தபுரம் கீழக்கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற உளளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. முதல்முறையாக கைப்பற்றியதற்காக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கான தலைநகர மேம்பாட்டு திட்டத்தை பாரதிய ஜனதா கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை முதலில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடத்த ரெயில்வே மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முடிவு செய்திருந்தன. ஆனால் 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை காரணம் காட்டி அந்த இடத்தை தர கேரள அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தான் புத்திரிக்கண்டம் மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கேரள மாநில நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் 12.40 மணிக்கு பிரதமர் மோடி சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
இந்நிலையில், குடியரசு தினவிழா 26-ம் தேதி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் வீரர்கள் பாசறை திரும்பும் விழா போன்றவை காரணமாக ஜனாதிபதி மாளிகையை பொது மக்கள் பார்வையிட வரும் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், 29-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும்.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதுடெல்லி,
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாது.
இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் இருந்து ஏராளமான இந்தியர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானங்களில், ஈரானில் இருந்து மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். இணையதளம் முடங்கியதால் செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை. ஈரானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனத்தில் ஒன்று இண்டிகோ விமான நிறுவனம்.
- கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்தால் பயணிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு இன்னல்கள் ஏற்படுத்தியது.
ஊழியர்களின் பணி நேரத்தைஅளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது, போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாதது, மேலாண்மை குறைபாடுகள் ஆகியவற்றால் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை ஆராய்ந்த வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், முறையான திட்டமிடல் இல்லாததற்காக ரூ.1.80 கோடியும், தொடர்ந்து 68 நாட்களாக விதிமுறைகளை மீறியதற்காக நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.20.40 கோடியும் என மொத்தம் ரூ. 22.20 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இப்படி ஒரு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது முதல் முறை ஆகும்.
- பிரதமர் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார்.
- அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான நிதியை நிறுத்தியது?.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது என விமர்சித்திருந்தார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021 மாநில தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அரசியல் சுற்றுலாப் பயணி நரேந்திர மோடி, வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார். அப்படியா? அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான ரூ.24,275 கோடியை வன்மத்துடன் நிறுத்தி வைத்துள்ளது?
2021 சட்டமன்றத் தேர்தலில் அவமான தோல்விக்குப் பிறகு, வங்காளத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எங்கள் பகிரங்க சவாலை மோடி அரசாங்கம் ஏன் நிராகரித்துள்ளது?.
மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதிக்கான மத்திய அரசின் நிதியை முடக்கியதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்காக தனது சொந்தக் கருவூலத்திலிருந்து ரூ. 30,000 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஏன் மம்தா பானர்ஜி தலையிட்டு, திட்டத்தின் கீழ் 12 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.14,400 கோடி செலவில் வீடுகளை வழங்க வேண்டியிருந்தது? பங்களார் பாரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 16 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க, மேற்கு வங்கத்தின் சொந்தக் கருவூலம் ஏன் கூடுதலாக ரூ.19,700 கோடியைச் சுமக்க வேண்டியிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி, "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வங்காளத்தின் அரசியல் களத்தில் ஒரு உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும். தடை ஏற்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த பாஜக அரசாங்கம் வரும்போதுதான் வங்காள மக்களுக்கு உண்மையான நலன் ஏற்படும் .
இந்த நாட்டின் முதன்மை ஊழியராக நான் வங்காள மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய முயற்சிக்கிறேன். இந்த மாநிலத்தில் உள்ள வீடற்ற மக்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிரந்தர வீடுகளைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மத்திய அரசு ஏழை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்காகத் தொடங்கியுள்ள நலத்திட்டங்களின் முழுப் பலன்களையும் நீங்கள் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவற்றுக்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.
ஆனால் அது நடக்கவில்லை. இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் கொடுமையானது மற்றும் இரக்கமற்றது. ஏழைகளுக்காக மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிதியை இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் வங்காளத்தின் ஏழை மக்களின் எதிரிகள். அவர்கள் உங்கள் கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் கஜனாவை நிரப்புவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர்" என குற்றம்சாட்டியிருந்தார்.
- பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள்.
- மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு சென்றிருந்தார். இன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்கு பெங்காலில் உள்ள மால்டாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
ஊடுருவல் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகில் பணப் பற்றாக்குறை இல்லாத, வளர்ந்த மற்றும் செழிப்பான நாடுகள் கூட ஊடுருவல்காரர்களை வெளியேற்றி வருகின்றன. மேற்கு வங்காளத்திலிருந்தும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது அதற்கு சமமாக அவசியமானது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், ஊடுருவல்காரர்களை வேரறுக்கவும் பெரிய நடவடிக்கை எடுக்கும்.
பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன. ஊடுருவல்காரர்களின் மக்கள்தொகை அதிகரித்துவருவதால், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் உள்பட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
ஊடுருவல்காரர்கள் மாநிலத்தில் குடியேறுவதை உறுதி செய்வதற்காகவே திரிணாமுல் காங்கிரஸின் "சிண்டிகேட்" அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஊடுருவல்காரர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி உள்ளது.
நீங்கள் இந்த கூட்டணியை உடைக்க வேண்டும். பாஜக அரசாங்கம் அமைந்தவுடன், ஊடுருவல் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதை மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த மதுவாக்கள் போன்ற அகதிகளுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கடந்த 2025-ல் அதிகபட்சமாக 90 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- தற்போது பிப்ரவரி 1 முதல் 5 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு.
நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோ விலையுயர்ந்த மெட்ரோவாகியுள்ளது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:-
டெல்லி, மும்பை மற்றும் சென்னை மெட்ரோவை விட பெங்களூரு மெட்ரோவில் பயணம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. கட்டணத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடு இந்த விலை உயர்வுக்கு காரணம்.
மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ரெயில் இயக்கப்படுவதால் மற்றும் பாராமரிப்பு காரணமாக அடுத்த மாசம் ஐந்து சதவீதம் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கட்டுமான வேலை தொடர்ந்து தாமதப்படுத்துதல் காரணமாக திட்டத்தின் செலவு அதிகரிப்பதுதான் இழப்பிற்கு முக்கிய காரணம். கட்டணம் உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
பத்து மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட கடைசி கட்டண உயர்வின் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே, மாநில அரசும் பிஎம்ஆர்சிஎல் நிறுவனமும் மற்றொரு 5 சதவீத கட்டண உயர்வை முன்மொழிந்துள்ளன. இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
FCC பரிந்துரையின்படி பிஎம்ஆர்சிஎல் மாற்றியமைக்கப்பட்ட ரெயில் கட்டணத்தை கடந்த 2025-ல் அறிமுகப்படுத்தியது. அப்போது டிக்கெட் விலை சில வழிகளில் 71 சதவீதம் வரை உயர்த்தப்படடது. அதிகபட்சமாக 90 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு வழங்கப்படும் இந்தத் தண்டனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
- வரும் நாட்களில், வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும்.
- இந்தியா போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்குவது மட்டுமல்லாமல், தற்சார்பு நிலையை நோக்கியும் செல்கிறது.
பிரதமர் மோடி இன்று மேங்கு வங்க மாநிலம் மால்டாவில் ரெயில் சேவை மற்றும பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் உள்பட 6 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* புதிய அம்ரித் பாரத் ரெயில்கள், வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கான வங்காளத்தின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும்
* வரும் நாட்களில், வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும்.
* ஐரோப்பா அல்லது அமெரிக்காவை விட இந்தியா அதிக ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது. இது நமது பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது
* இந்தியா போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்குவது மட்டுமல்லாமல், தற்சார்பு நிலையை நோக்கியும் செல்கிறது.
* ஹவுரா மற்றும் கவுஹாத்தி இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில், மா காளி மற்றும் மா கமாக்யாவின் புனிதத் தலங்களை இணைக்கும்
* வெளியிடப்பட்ட திட்டங்கள், குறிப்பாக புதிய ரெயில்கள், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
- அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.
- ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் தொடக்கம்.
வந்தே பாரத் அதிவேக சொகுசு ரெயில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரெயில் முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதால் கட்டணம் அதிக அளவில் உள்ளது.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அம்ரித் பாரத் ரெயில் சேவை தமிழகம், மேற்கு வங்காளம் மாநிலங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா டவுன் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 3 ரெயில் சேவைகளும், மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலத்தில் 3 ரெயில் சேவைகளும் இதில் அடங்கும்.
நாகர்கோவில்-நியூ ஜல் பைகுரி, திருச்சி-நியூ ஜல் பைகுரி, தாம்பரம்-சந்திர காசி ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவை தமிழகம்- மேற்குவங்க மாநிலம் இடையே இயக்கப்படுகிறது.
இதேபோல அலிபு துவார்-பெங்களூரு, பாலூர் காட்- பெங்களூரு, ராதிகாபூர்-பெங்களூரு ஆகிய 3 அம்ரித் ரெயில் சேவையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது தவிர ஹவுரா- கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயில் சேவையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்- நியூ ஜல் பைகுரி அம்ரித் ரெயில் இன்று மேற்கு வங்காளம் ரங்கபாணி நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
இந்த ரெயில் முற்றிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி கொண்டதாகும். இதில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது.
இந்த ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, பழனி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது.
நியூ ஜல்பைகுரியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் அம்ரித் ரெயில் ஆந்திரா வழியாக எழும்பூர் நிலையம் வருகிறது. பின்னர் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம் , மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடைகிறது.
சந்திரகாசியில் இருந்து நாளை 18-ந் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் சூலூர்பேட்டை வழியாக எழும்பூர் வந்து பின்னர் தாம்பரம் சென்ற டைகிறது.
அம்ரித் பாரத் ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் 11 பொது இருக்கை பெட்டி களும், 2-இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமர் மோடி பாலூர்காட்-ஹிலி இடையே புதிய ரெயில் பாதை, துப்குரி-பலகட்டா பிரிவில் 4 வழிச்சாலை, சிலி குரியில் லோகோ ஷெட் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
- சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர்கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும்.
சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
- மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
- விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவி, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அடுத்த 2 மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறை, அதன் விளைவாக அவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் ஏஐ ஏற்றுக்கொள்வது இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
மைக்ரோசிப்களின் பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையாக உள்ளது.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவீதம் அதிகரிக்கும்.

இது டிவி மற்றும் தொலைபேசி நிறுவனங்களை விலைகளை அதிகரிக்க கட்டாயப்படுத்தும். இந்த விளைவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.






