என் மலர்
இந்தியா

30 ஆண்டு வரலாறு மாறுகிறது- மும்பை மாநகராட்சியை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது
- காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
- அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.
மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இங்கியுள்ளது.
இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி பா.ஜ.க. 58 இடங்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தாக்கரே சிவசேனா 45 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது. பா.ஜ.க. 22 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கிலேயே உள்ளன.
நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. 73 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
122 வார்டுகளை கொண்ட நாசிக்கில் பா.ஜ.க. 10 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 3 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளன.
புனேவில் பா.ஜ.க. 48 இடங்கள், அஜித் பவார் என்.சி.பி. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 4 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தானேவிலும் பா.ஜ.க. கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 இடங்கள், சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.






