என் மலர்
இந்தியா
- ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
- இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதுபோன்ற செயற்கைக்கோள்களை இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவிலிருந்து தான் ஏவப்பட்டு வந்தது. தற்போது அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைப்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட 'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர்.
- வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த ஆண்டு, இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்விக்காக சென்ற நாடுகளில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றனர்.
அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 630 மாணவர்கள் சென்றனர். இங்கிலாந்துக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 202 மாணவர்களும் சென்றனர். ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர். இதற்காக இந்திய மாணவர்கள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவிட்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 614 ஆகும். பஞ்சாப், மராட்டியம் மாநில மாணவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.975 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதுபோல், வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவை சேர்ந்த 13 லட்சத்து 35 ஆயிரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கும் வயதினரை (18 முதல் 23 வயது வரை) அதிகமாக கொண்ட நாடும் இந்தியா ஆகும். இங்கு அந்த வயதில் 15 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர்.
கடந்த ஆண்டு, ஒரு வெளிநாட்டு மாணவர் உயர்கல்வி படிக்க இந்தியா வந்தார் என்றால், பதிலுக்கு 28 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு சென்றனர். எனவே, இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
கடந்த 2021-2022 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற பஞ்சாயத்துகளில் வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன.
இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்படி ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி மற்றும் புறக்காடு பஞ்சாயத்துகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது. இதில் நெடுமுடியில் கோழிகளுக்கும், பிற பஞ்சாயத்துகளில் வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் கோட்டயம் மாவட்டத்தில் குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல் மற்றும் வேலூர் வார்டுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கோழிகள் மற்றும் காடைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
- 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.
இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.
அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.
அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.
- இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு அதிகாரி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு, மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளும், எழுத்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளில் அடிக்கடி முறைகேடுகள் நடைபெறுகின்றன. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன.
ஆள்மாறாட்ட முறைகேடுகளை களைய 'பயோ மெட்ரிக்' சோதனை முறையை தேர்வு மையங்களில் அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததால், வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.
- இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
அமராவதி:
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது.
- 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநராக இருந்து வருபவர் நடாஷா பூனாவாலா.
நடாஷா பூனாவாலா கையில் போட்டுள்ள வைர மோதிரம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,
உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேளுங்கள். 126 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பற்றி நான் பேசப்போகிறேன் என்றதும் உங்கள் நினைவில் வருவது என்ன? பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது. 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
நடாஷா பூனாவாலா கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் மதிப்பு சுமார் 126 கோடி ரூபாய்.
அது பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட் குடும்பத்தைச் சேர்ந்தது.
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய இளஞ்சிவப்பு வைரம் அதில் உள்ளது.
சமீபத்தில் கிறிஸ்டிஸ் ஏலத்தில் $13.98 மில்லியன் (சுமார் 126 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கப்பட்டது.
தனது அற்புதமான மற்றும் ஆடம்பரமான நகை சேகரிப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் நடாஷா என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,49,885 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769, இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.
இதேபோல், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர், இரட்டை பதிவுகள்: 1,79,043 என தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்: 31.51 லட்சம், இறந்தவர்கள்: 8.46 லட்சம், இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ம.பி.யில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் என 3 மாநிலங்களில் சேர்த்து 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- குடியரசு தினமான ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் அமலுக்கு வருகிறது
- குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அக்கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,
இது தவிர, பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் சவுத்ரி தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதிமுறைகள் இக்கிராமத்தில் அடிக்கடி விதிக்கப்படுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். மேலும் மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த ஜோடி இதுதொடர்பாக காவல்துறையை அணுக, அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரும்பாலான பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தினர். இதுபோல பல சம்பவங்கள் அக்கிராமத்தில் அரங்கேறி உள்ளன.
- ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வழங்குவதில் மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு.
- கடன் தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு.
மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்திய அரசு அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும் இந்திய அரசை விமர்சித்து லலித் மோடி அடிக்கடி வீடியோ வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி கலந்து கொண்டுள்ளார்.
அப்போது லலித் மோடி, நாங்கள் இரண்டு தப்பி ஓடியவர்கள். இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் எனப் பேசுவது போன்ற வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இணைய தளம் ஸ்தம்பிக்கும் வகையில் மீண்டும் ஏதோ ஒன்றை செய்யப் போகிறேன். இது உங்களுக்காகத்தான். பொறாமையால் உங்களுடைய இதயம் புழுங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகள் வழங்குவது தொடர்பான மோசடி மற்றும் பண மோசடியில் லலித் மோடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 125 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லலித் மோடி தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். இவர் தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- புதிதாக போட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் மந்திரி அதிர்ச்சி.
- பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னாவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் மந்திரியான பிரதிமா பக்ரி ஆய்வுக்கான சென்றார்.
அப்போது அவர் செல்லும் போடி- மங்காரி பகுதியில் சாலை போடப்பட்டிருந்தது. அந்த சாலையில் தரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கினார்.
நேராக சாலையின் கரையோரம் சென்று தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது காலால் மிதிக்க மிதிக்க சாலையோரம் பெயர்ந்து கொண்டே சேதமானது. இதனால் கோபம் அடைந்து, இதுதான் புதிய சாலையின் லட்சணமா என திட்டினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
- விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.






