என் மலர்
உலகம்

நாங்கள் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்: விஜய் மல்லையா உடன் வீடியோ வெளியிட்ட லலித் மோடி
- ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வழங்குவதில் மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு.
- கடன் தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு.
மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்திய அரசு அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும் இந்திய அரசை விமர்சித்து லலித் மோடி அடிக்கடி வீடியோ வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி கலந்து கொண்டுள்ளார்.
அப்போது லலித் மோடி, நாங்கள் இரண்டு தப்பி ஓடியவர்கள். இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் எனப் பேசுவது போன்ற வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இணைய தளம் ஸ்தம்பிக்கும் வகையில் மீண்டும் ஏதோ ஒன்றை செய்யப் போகிறேன். இது உங்களுக்காகத்தான். பொறாமையால் உங்களுடைய இதயம் புழுங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகள் வழங்குவது தொடர்பான மோசடி மற்றும் பண மோசடியில் லலித் மோடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 125 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லலித் மோடி தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். இவர் தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.






