என் மலர்
இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.927 கோடி மட்டுமே தர வேண்டும்- மத்திய அரசு
- மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
- 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.
இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.
அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.
அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.






