என் மலர்
உண்மை எது
விமான நிலையம் ஒன்றில் பலர் ஒன்றிணைந்து விமானத்தை தள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், பலர் ஒன்றிணைந்து விமானம் ஒன்றை தள்ளுவதை காட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தள்ளுகின்றனர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இது 2007 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங்கில் உள்ள யாண்டை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது ஷாங்டாங் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆவர்.

இந்த புகைப்படம் 2007, ஆகஸ்ட் 14 ஆம் தேதி எடுக்கப்பட்டது ஆகும். இதே தகவலை உறுதிப்படுத்தும் செய்தி குறிப்பு இணையத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து ஷாங்டாங் பாம்பர்டியர் சி.ஆர்.ஜெ.200 விமானத்தை ஊழியர்கள் தள்ளினர். அதே தினத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படம் டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இது சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்றும் உறுதியாகிவிட்டது.
உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த தகவலுடன் ஒவைசி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச மாநில தேர்தலில் போட்டியிட போவதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்த பின் அம்மாநில அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. தேர்தலில் இவர் களமிறங்கினால் மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதம் பெருமளவு குறையும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் துவங்கியுள்ளன. அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், ஒவைசி மற்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் சேர்ந்து உத்திர பிரதேச தேர்தல் வியூகம் குறித்து பேசியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் பவர்லூம் துறையினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படத்தை ஒவைசியும் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் வைரல் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமானம் வெடித்து சிதறியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்று தீப்பிடித்து எரியும் புகைப்படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீப்பிடித்து எரியும் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கிய அமெரிக்க ராணுவ விமானம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் காயமுற்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விபத்தில் சிக்கியது அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான சி 130 போர் விமானம் என்றும், இது காபூல் விமான நிலையத்தில் இருந்து கத்தார் செல்ல தயாரானது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இதுபோன்ற சம்பவம் பற்றி எந்த செய்தியும் இணையத்தில் வெளியாகவில்லை. மேலும் இந்த புகைப்படம் 13 ஆண்டுகளுக்கு முன் ஈராக் விமான தளத்தில் எடுக்கப்பட்டது. இதே புகைப்படம் அலாமி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இது ஜூலை 7, 2008 அன்று எடுக்கப்பட்டது ஆகும்.
வைரல் புகைப்படம் ஈராக் விமான தளத்தில் அமெரிக்க போர் விமானம் செயலிழக்க செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். இதுபற்றிய செய்தி தொகுப்புகளும் வெளியாகி உள்ளன.
சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறும் தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. போலி செய்திகளுடன், நிதி சலுகைகள் பெயரில் மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி திட்டங்கள் பற்றிய பதிவுகளும் வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் முதலீடு திட்டம் மக்களுக்கு பலமடங்கு லாபம் ஈட்டி தரும் என கூறும் பதிவு வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், ரிசர்வ் வங்கியின் புதிய முதலீடு திட்டத்தில் ரூ. 12,500 முதலீடு செய்தால், ரூ. 4 கோடி 62 லட்சமாக திரும்ப பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் வங்கி மேலாளர் தொகையை 30 நிமிடங்களில் பரிமாற்றம் செய்வார் என்றும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முதலீட்டு திட்டம் பற்றிய வைரலாகும் தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் ரிசர்வ் வங்கி முதலீட்டு திட்டம் என வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
தலிபான் மற்றும் பஞ்ச்ஷிர் மாகாண தேசிய கிளர்ச்சி குழு இடையே கடும் மோதல் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டன. ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த நிலையில், மலைப்பகுதி ஒன்றில் கடும் துப்பாக்கி சூடு நடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, தலிபான் மற்றும் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தேசிய கிளர்ச்சி குழு இடையே நடைபெற்ற மோதலின் போது எடுக்கப்பட்டது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த வீடியோ தலிபான் மற்றும் பஞ்ச்ஷிர் தேசிய கிளர்ச்சி குழு இடையே நடைபெற்ற மோதலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
வீடியோ குறித்த தேடல்களில், அது 2014 டிசம்பர் வாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரியவந்தது. மேலும் இந்த வீடியோ ஈரான் ராணுவ வீரர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலின் போது எடுக்கப்பட்டது என வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் தலிபான் அட்டூழியம் செய்வதாக கூறி பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் போது அமெரிக்க ராணுவம் பல கோடி டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்களை அங்கேயே விட்டுசென்றது. இவற்றில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களும் அடங்கும்.
ஆப்கானில் உள்ள அமெரிக்க ஆயுதங்களின் விவரங்கள் வெளியான நிலையில், தற்போது தலிபான்கள் காபூல் விமான நிலையத்தை கைப்பற்றுவது, அமெரிக்க ஹெலிகாப்டர்களை இயக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் ஹெலிகாப்டர் தடுமாற்றத்துடன் சாலையில் ஊர்ந்து செல்லும் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. "ஸ்பெஷல் பிளாக் ஹாக் டாக்சி சர்வீஸ் ஆப்கானிஸ்தான் டாக்சி ஆப்ரேட்டர்" எனும் தலைப்புடன் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ லிபியாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. உண்மையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். இணைய தேடல்களில் வியட்நாம் செய்தி வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோ ஆப்கானில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
குடிசை பகுதியில் உள்ள வீடுகள் அந்த சம்பவத்தை தொடர்ந்து இடிக்கப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், குடிசை பகுதியில் வீடுகள் இடிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. குடிசை பகுதியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதால், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடுகளை இடிக்க உத்தரவிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வீடியோவை ஆய்வு செய்ததில், அது உஜ்ஜைன் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் என்றும் அங்கிருப்பவர்கள் பாகிஸ்தான் கோசம் எழுப்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதே தகவலை அப்பகுதி காவல் துறை அதிகாரி ஒருவரும் தனியார் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதால், குடிசை பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
இந்திய ராணுவ வீரர்கள் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று துவங்கியது முதல், உலகம் முழுக்க அதுபற்றிய போலி செய்திகள் பரவலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் மயக்கமுற்றதாக கூறி வீடியோ ஒன்று வைரலானது.
வைரல் வீடியோ அடங்கிய பதிவுகளில், 'தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராணுவ வீரர்கள் ஓட்ட பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். இவ்வாறு செய்த போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றிய இணைய தேடல்களில், மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை பதிவு காணக்கிடைத்தது. அந்த பதிவில், வைரல் வீடியோவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அதீத வெப்பம் காரணமாக மயக்கமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் வீரர்கள் மயக்கமுற்றனர் என கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
கெமரூன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான பிரான்சிஸ் நிகானு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் இவர், மிக எளிமையாக காட்சியளிக்கும் வீட்டினுள் இருந்தபடி உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது. இவர் இன்றும் எளிய வாழ்வை வாழ்வதாக பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

"இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் பிரான்சிஸ் நீகான்னு... UFC fighter...
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரர்...
இந்த விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் அவர் பணத்தை சம்பாதித்து விட்டார்...
அவரை காண பல விஐபிக்கள் மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் காத்துக்கொண்டு உள்ளன...
ஆனால் அவர் சிறு வயதில் சரியாக சாப்பிடக்கூட முடியாத அளவில் ஏழ்மையில் இருந்தவர்...
இப்போதும் அவரது சொந்த நாட்டுக்கு கேமரூன் செல்லும்போது தனது பழைய வாழ்க்கை எப்படியோ அப்படியே வாழ்ந்து வருகிறார்...
அவர் சொல்லும் ஒரே வார்த்தை எவ்வளவு எனக்கு பணம் வந்தாலும் என் அம்மாவுக்கு நான் மகன்தான்...
அதை மாற்ற முடியாது..."
என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Happy Mother’s Day to this wonderful woman who has been through hell to raise a stubborn kid like me, and sacrificed everything to see us happy. #MothersDay ❤️ pic.twitter.com/4lMUeR0k3N
— Francis Ngannou (@francis_ngannou) May 10, 2020
இது குறித்த இணைய தேடல்களில் பிரான்சிஸ் நிகானு உண்மையில் தனது நாட்டில் ஏழ்மையான வாழ்வை வாழ்வது தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு அன்னையர் தினத்தன்று பிரான்சிஸ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த பதிவு இணையத்தில் கிடைத்தது.
அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல் உண்மை தான். ஆனால், இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் நடிகர் சல்மான்கானை தடுத்த அதிகாரி குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் டைகர் 3 படப்பிடிப்புக்காக ரஷியா செல்ல சில தினங்களுக்கு முன் மும்பை விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு பகுதியில் அதிகாரிகளின் சோதனைக்கு நிற்காமல் உள்ளே நுழைய முயன்றார்.
அவரை சி.ஐ.எஸ்.எப். இளம் அதிகாரி தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனைகளை முடித்து உள்ளே வரும்படி அறிவுறுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பிரபல நடிகர் சல்மான்கான் என்பதை கண்டுகொள்ளாமல் கடமையை செய்ததாக அந்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் சல்மான்கானை தடுத்த அதிகாரி மீது சி.ஐ.எஸ்.எப். நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்து விட்டதாக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இது குறித்த இணைய தேடல்களில் வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் சி.ஐ.எஸ்.எப். அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல் பொய்யானது. உண்மையில் அந்த அதிகாரிக்கு கடமையை சிறப்பாக செய்ததற்கு வெகுமதி அளிக்கப்பட்டது'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மது விற்பனையை இப்படி செய்யலாம் என ரத்தன் டாடா கூறியதாக வைரலாகும் கருத்து பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் மது விற்பனை செய்யும் போது ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும் என கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த கருத்தை ரத்தன் டாடா தெரிவித்தாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"மது விற்பனையை ஆதார் மூலம் விற்பனை செய்ய வேண்டும் மது வாங்குபவர்களுக்கு அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்" எனும் கருத்தை ரத்தன் டாடா கூறியதாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதுகுறித்த இணைய தேடல்களில், ரத்தன் டாடாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என தெரியவந்தது. மேலும் டாடா நிறுவனம் சார்பிலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இது குறித்த கருத்தை ரத்தன் டாடா கூறியிருப்பின், அதுபற்றிய செய்திகளும் வெளியாகி இருக்கும்.
எனினும், இவ்வாறு எந்த செய்தி தொகுப்பும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள கருத்தை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
காபூல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது அந்நாட்டு ராணுவ வீரர் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியது முதல் காபூல் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆப்கனில் வசித்து வந்தவர்கள், குடும்பத்தோடு அந்நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரிகார்டுகளை கடக்க வெளிநாட்டு ராணுவ வீரர்கள் உதவி செய்யும் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ராணுவ வீரர் கையில் குழந்தையுடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது அமெரிக்க நாட்டு ராணுவ வீரர் என்றும் அவர் ஆப்கன் குழந்தையை காப்பாற்றியதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரர் பிரிட்டன் படையை சேர்ந்தவர் என தெரியவந்தது. காபூல் விமான நிலையத்தின் நிலவரம் பற்றிய செய்தி தொகுப்பை தனியார் செய்தி நிறுவனம் உருவாக்கியது. விமான நிலையத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரல் புகைப்படம் எடுக்கப்பட்டது. முதலில் குழந்தை அதன்பின் குழந்தையின் தாய் பேரிகார்டை கடந்து வந்துள்ளார்.
குழந்தையை ராணுவ வீரர் பத்திரமாக மீட்டதாகவும், குழந்தையின் தாய் அவராகவே பேரிகார்டை கடந்து வந்தார் எனவும் புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வைரல் புகைப்படத்தில் இருப்பது அமெரிக்க நாட்டு ராணுவ வீரர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.






