என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்தது.
அ.தி.மு.க. வாக்கு வங்கியை அ.ம.மு.க. பிரித்து நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அ.ம.மு.க. வால் எந்த நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை இழுந்தனர்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் சாதிக்க வேண்டும் என்று அ.ம.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.
இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் வருகிற ஜூன் 1-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் முடிவுகள், ‘‘ஆப்ரேஷன் சக்சஸ் பட் பேசன்ட் டெட்’’ என்பது போல் உள்ளது. தி.மு.க.வின் வெற்றி, என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு தோல்வி.
கூட்டணியில் இருப்பவர்கள், கேபினேட் மந்திரி அந்தஸ்து பெற்று டெல்லி சென்றால் தான், திட்டங்களையும், தமிழ்நாட்டிற்கு வேண்டிய வற்றையும் உரிமையோடு கொண்டு வர வேண்டும்.
கடந்த முறை, அ.தி.மு.க., வில் 37 எம்.பி.க்கள், இருந்தும், போனார்கள், வந்தார்கள். கேபினேட்டில் இருந்தால்தான், எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது தி.மு.க., எதிர் அணியில் உள்ளது. இது எந்த வகையில் பலனளிக்கும் என்று தெரிய வில்லை.
இந்தியா முழுவதும் ஒரு அலை வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி மற்றும் கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடர்கிறது.
இந்தியாவின் அங்கம் தமிழகம். தனியாக பிரிந்தால், நிச்சயமாக தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் கூட்டணி சார்பில் எம்.பி., இல்லாவிட்டாலும், உரிமையோடு கேட்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இக்கூட்டணி நிச்சயம் தொடரும்.
தே.மு.தி.க.வின் மாநில கட்சிக்கான அந்தஸ்து பறிபோகாது. கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தால், கேபினேட் பதவிகளை வாங்கி, நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை மக்கள் தரவில்லை என்பது தான் எனது வேதனை.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் போகப் போக உங்களுக்கு தெரியவரும். தமிழகம் முழுவதும் நிறைய வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஜீரோ வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என்று தகவல்கள் வந்தன.
300 வாக்குசாவடிகளில் ஜீரோ வாக்குகள் பதிவானதாக எனக்கு தகவல் கிடைத்தது. எங்கள் முகவர்களே அங்கு இருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் 4 பேர் எங்கள் முகவர்கள் இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது இருக்க வேண்டும் அல்லவா? மக்களும், கட்சிக்காரர்களும் ஓட்டு போடாவிட்டாலும் பூத் ஏஜெண்டுகளின் ஓட்டுகள் எங்கே போனது? அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.
ஜீரோ வாக்குகள் பதிவானதாக இணையதளத்தில் போடப்பட்டிருப்பது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றீர்கள். அது தவிர்க்கப்பட்டிருக்கிறதா?
பதில்:- கழுத்தை நெரிக்கும் வகையில் சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். இந்த ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.
கேள்வி:- அ.ம.மு.க. தமிழகம் முழுக்க அதிக ஒட்டுகள் வாங்கவில்லையே ஏன்?
பதில்:- அதற்கான காரணம் சிலருக்கு இப்போதே தெரியும். ஒருவாக்குச்சாவடியில் ஜீரோ பதிவாகி இருப்பதால் ஏஜெண்டே ஓட்டு போடவில்லை என்று சொல்கிறீர்களா? இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.
கேள்வி:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் நம்பவில்லை என்று எடுத்துச் கொள்ளலாமா?
பதில்: இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.
பதில்:- ஓட்டு போட்டவர்கள் அனைவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
கேள்வி:- அ.ம.மு.க.வில் உள்ள அ.தி.மு.க. சிலீப்பர் செல்கள் ஆக்டிவேட் ஆகி விட்டார்களா?
பதில்: எங்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் ஓட்டு போடாத இடங்களில் சிலீப்பர் செல் என்று எடுத்துக்கொள்கிறீர்களா? எங்களது சிலீப்பர் செல்கள் ஓட்டெடுப்பின்போது வெளியே வருவார்கள்.
கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?
பதில்: யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம்.

அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. ஒரு ஓட்டில்தான் அவர்கள்.
கேள்வி: தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம். வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.
வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல விஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்.
கேள்வி:- ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறீர்களா? தேர்தல் ஆணைய முறைகேடுகளை பற்றி வழக்கு தொடர இருக்கிறீர்களா?
பதில்:- இரண்டும் ஒன்று தானே. அவர் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை பற்றித்தான் வழக்கு தொடர இருக்கிறேன்.
கே:- மத்தியில் காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?
ப:- தமிழகத்தில் அமைந்தது போல ஒரு கூட்டணி அமையாதது தான் முக்கிய காரணம். ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் மதச்சார்பற்ற கட்சிகள் மும்முரமாக வேலை செய்தது. அதுபோல் வட இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் எதிர்க் கட்சிகள் அறிவிக்காத காரணத்தால் தான் இந்த மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்ற 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆங்காங்கே வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு நிகழ்ந்திருப்பதாக சொன்னார்கள். அதைப் பற்றிய செய்திகள் முழுமையாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரும்.
கே:- முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடருமா?
ப:- காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று தான் முடிந்திருக்கிறது. காங்கிரஸ் ஏன் தோற்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காக 4 பேர் கொண்ட கமிட்டியை ராகுல் காந்தி அமைத்திருக்கிறார். இதுபற்றி எல்லா செய்திகளையும் சேகரித்து கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் ஏற்படும் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரும்.
கே:- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றிக்கு மோடி காரணம் என்று சொன்னீர்கள் அது ஏன் என்று தெரியுமா?
ப:- என்ன காரணம் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் மீது மோடிக்கு அவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் மீது இல்லாத காதல், பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத காதல், சி.பி.ராதா கிருஷ்ணன் மீது இல்லாத காதல், எச்.ராஜா மீது இல்லாத காதல், ஓ.பன்னீர் செல்வம் மகனின் மீது மட்டும் ஏன் மோடிக்கு அவ்வளவு காதல் என்று எனக்கு தெரியவில்லை. ஏதாவது விசேஷ சங்கதிகள் இருக்கிறதா என்று மோடியிடம் தான் அதைப்பற்றி கேட்க வேண்டும்.
தேனி தொகுதியில் இருக்கிற விவிபாட்டை முழுவதும் சரியாக எண்ண வேண்டும். நாங்கள் வழக்கு தொடரும் போது அதையும் சொல்வோம்.
கே:- அடுத்த தேர்தலிலாவது வாக்கு சீட்டு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?
ப:- அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே வாக்குப் பதிவு எந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதில்லை. எனவே அவர்கள் வாக்குச் சீட்டு முறைக்கு சென்று விட்டார்கள். நமது நாட்டை பொறுத்தவரை மோடியை போல ஒரு ஆளை வைத்துக் கொண்டு தேர்தல்கமிஷன் எடுபிடியாக இருக்கின்றது. உச்சநீதிமன்றம் எடுபிடியாக இருக்கின்றது. ரிசர்வ் வங்கி எடுபிடியாக இருக்கின்றது. எல்லாவித அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ள மோடிக்கு மின்னணு எந்திரங்கள் மிகவும் வசதியாக போய்விட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மேலிடத்தில் நாங்கள் சொல்வோம், வாக்குப் பதிவு எந்திரத்தை விட வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று மேலிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர்:
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.
நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
நாடுமுழுவதும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட பிடிக்க முடியாத பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது.
அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது தனது ராஜினாமா முடிவை கூறினார்.

ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஏற்க மறுத்து நிராகரித்தது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் ராகுலின் விலகலை விரும்ப வில்லை. இதனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பேச்சும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் பேசும்போது, ‘ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் தொண்டர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கூறினார். இதைக்கேட்டு ராகுல் காந்தி மனவருத்தம் அடைந்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதேபோல தலைவர்கள் பலரும் பேசும்போது, வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். எனவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.
மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது.
இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது.
சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்சபை எம்.பி. பதவியை பெறுகிறது.
234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.
இதன்மூலம் மேல்சபையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.
தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 மேல்சபை உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதாக தெரிகிறது. இதேபோல கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பி துரையும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதாக தெரிகிறது. அ.தி.மு.க. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்று தெரிவில்லை. தி.மு.க. தலைமை இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.









