என் மலர்
தேர்தல் செய்திகள்
கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:
கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.
ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.
கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?
ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.
தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?
ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்றவற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.
கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?
ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.
கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?
ப: நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.
முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.
கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?
ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் 5 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இது தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் மட்டுமின்றி தேசிய பா.ஜனதா தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் மோடி அரசுக்கு எதிரான அலை வீசியதால்தான் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று பொதுவான காரணம் கூறப்படுகிறது. என்றாலும் தமிழக பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் இந்த தடவை குறைந்து போனதை மேலிடத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
வாஜ்பாய் காலத்தில் அதாவது 1999-ம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 7.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அதன் பிறகு அந்த அளவுக்கு வாக்குகளை தமிழக பாரதிய ஜனதா பெறவில்லை. 2009-ம் ஆண்டு 2.3 சதவீதம் 2014-ம் ஆண்டு 5.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.
தற்போது 2019-ல் அது 3.7 சதவீதம் வாக்குகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதா சுமார் 2 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது.
தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சதவீத வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமித் ஷா அலுவலகம் நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையை தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது, “தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைந்தது ஏன்?” என்று விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழிசையிடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பா.ஜனதா ஆதரவாளர்கள் பலரிடமும் அமித் ஷா அலுவலகம் அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக பா.ஜனதாவில் மாற்றங்களை கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் இந்த தடவை 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் இலக்கு வைத்திருந்தனர். அதை கருத்தில் கொண்டே அவர்கள் காஞ்சிபுரம், திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, தேனி, ஈரோடு நகரங்களில் நடந்த பிரமாண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனாலும் தோல்வி ஏற்பட்டது ஏன்? என்பது புரியாமல் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழ் நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைய என்ன காரணம் என்று மேலிடத்துக்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த விளக்கத்தில், “தமிழக பா.ஜனதா தலைவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றவில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “தேர்தல் முடிவுகள் வெளியானதும், பா.ஜனதா மூத்த தலைவர் ராம்லால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தல் தோல்விக்காக கவலைப்பட வேண்டாம் என்றார். நாங்கள் மேற்கொண்ட தேர்தல் பணிகளை பாராட்டினார்” என்றார்.
தமிழக பா.ஜனதா மீது மேலிட தலைவர்கள் கோபமாக இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
பத்திரிகையில் பல தகவல்கள் வருகிறது. இதில் எந்த தகவலுமே உண்மை இல்லை. அதை மோடியே சொல்லி விட்டார். அதனால் என்னைப் பொறுத்தமட்டில் கட்சி எங்களோடு இருக்கிறது.
தமிழக பா.ஜனதா மீது பா.ஜனதா தலைமை கோபமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் கட்சிக்கு எங்களை பற்றியும் தெரியும். தமிழகத்தில் இருந்த களத்தை பற்றியும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் மாயாவதியும், அகிலேசும் காங்கிரசை தங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டாலே பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.
எனவே காங்கிரசை கண்டு கொள்ளாமல் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டனர். காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அணிகள் எதிர்பார்த்தபடி அங்கு வெற்றி அடையவில்லை.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. 10 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 5 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.
சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது படுதோல்வியாக கருதப்படுகிறது.
இந்த அணி மட்டும் காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் அங்கு தேர்தல் முடிவு மாறி இருக்கும் என்று இப்போது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மாநிலத்தில் 6.3 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதிக இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு 49.56 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு 38.62 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இந்த அணிக்கு 44.92 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் மேலும் பல தொகுதிகள் இந்த அணிக்கு வந்திருக்கும். அதை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகள் கோட்டைவிட்டு விட்டன.

காங்கிரஸ் ஓட்டை பிரித்ததால் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி ஓட்டுக்களையும் கூட்டினால் பாரதிய ஜனதாவை விட அதிகமாக உள்ளது.
ஆனால் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியை தடுத்திருக்க முடியும்.
பாரபங்கி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 ஓட்டுகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுச் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் வாங்கினார். இங்கு 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் அவை வெற்றி பெற்றிருக்கும்.
பதான் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணிக்கு 51 ஆயிரத்து 947 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இங்கும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.
பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷியாம சரன் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் 75 ஆயிரத்து 438 ஓட்டுக்கள் பெற்றார். இங்கும் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 16,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி பல தொகுதிகளில் இதே நிலை நிலவுகிறது.



புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.
பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.
அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.
ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.
இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.
மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.

மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.


சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெற வில்லை.
தமிழகத்தில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்று கருதிய பா.ஜனதா 5 தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியது.
தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியா குமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால் 5 பேரும் தோல்வியை தழுவினர்.
இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே மாநில தலைவரை மாற்ற பா.ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவர் பதவிகாலம் முடிந்த பிறகும் அவர் 2-வது முறையாகவும் மாநில தலைவராகவே பதவி வகித்து வந்தார். தற்போது அவரை மாற்ற முடிவு செய்துள்ள தேசிய தலைமை, புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. வானதி சீனிவாசன், சி.பி.ராதா கிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் அல்லாமல் போட்டியிட்ட போதே 5.48 சதவீத ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் 3.65 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தான் கவனத்தை செலுத்தியது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஆளும் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில்கூட கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளில் எங்கள் கூட்டணி கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பிறகும் ஒரு தொகுதிகள்கூட வெற்றி பெற முடியாதது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






