search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கட்சி தொடங்குவேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்
    X

    அரசியல் கட்சி தொடங்குவேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

    விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×