என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சுபநிகழ்ச்சி அழைப்பிதழ் வடிவில் பேனர்களை அச்சிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வருவாய்த்துறையினர் வைத்துள்ளனர்.
கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்.
அன்புடையீர் நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம், சித்திரை 5-ந் தேதி 18.4.2019 வியாழக்கிழமை சதுர்த்தசி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்.
தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களின் வாக்கினை பதிவு செய்யுமாறு அழைக்கின்றோம்.
தங்கள் அன்புள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) திருச்சி மாவட்டம், 144.மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய 25.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி.
அவ்வண்ணமே கோரும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார் மண்ணச்சநல்லூர். அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல் விவரங்களுக்கு எண்.1950-ஐ தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.
மண்ணச்சநல்லூர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த அழைப்பிதழ் வடிவிலான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான பேனரை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். #LSPolls #ElectionCommission
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை தேர்தல் களப்பணிகளுக்காக பயன்டுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க கூடாது.
அமைச்சர்கள் தங்கள் அலுவலக பார்வையிடலையும், தேர்தல் பணிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது. அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் தங்களது தேர்தல் பணிக்காக பயன் படுத்தக் கூடாது.
தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்தும் திடல்கள் போன்ற பொது இடங்கள் ஹெலிபேடு தளம் போன்றவைகளை ஆளும் கட்சியினர் மட்டும் பயன் படுத்த கூடாது. மற்ற கட்சியினரும் வேட்பாளர்களும் கேட்கும் போது அவர்களுக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லங்கள், மற்றும் பிற தங்கும் இடங்களை ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்துவது கூடாது. பிற கட்சிகளும், வேட்பாளர்களும், முறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால் எந்த ஒரு கட்சியும், வேட்பாளரும் அவற்றை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வடிவத்திலும் நிதி நல்கைகளையோ, வாக்குறுதிகளையோ வழங்க கூடாது.
எந்த ஒரு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டக் கூடாது. சாலை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த வாக்குறுதிகளை அளிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து அவரும் மோட்டார்சைக்கிள் ஓட்டியபடி பங்கேற்றார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோரும் பேரணியில் பங்கேற்று இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர்.
இப்பேரணிக்கு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி வாயிலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், டி.எஸ்.பி. பிரகாஷ், போலீசார் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். #LSPolls
தக்கலை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.
குளச்சல் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் ஞானம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்டு மேரி என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து கருவூலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டன் கோணம் பகுதியைச்சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதை தாசில்தார் ஷீலாவிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மேக்காமண்ட பத்தில் தாசன் என்பவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுக்கடை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சிகளையும் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், ஆரல்வாய்மொழி பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.
குறிப்பாக சுவர் விளம்பரம், கொடிக்கம்பங்கள் தொடர்பாகவே புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியும், பிரேமச்சந்திரன் கட்சிக்கு 1 தொகுதியும், மானி காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதை கண்டறியும் கூட்டம் நடந்து வந்தது.
கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க இப்போது பதவியில் இருக்கும் எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களில் சிலரும் முயற்சி மேற்கொண்டனர்.
வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.

இதுபற்றி உம்மன்சாண்டியிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார், என்று கூறினார்.
இதற்கிடையே கேரள காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்த முடிவுகள் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மாநில நிர்வாகிகள் இன்று பட்டியலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு ராகுல்காந்தியுடன் இறுதி ஆலோசனை நடக்கிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. #parliamentelection #congress #oommenchandy
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி பிரிவு சாலையில் சுரேஷ் குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தர்மபுரி அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 39), அவரது நண்பர் அன்பழகன் (40) என்பது தெரியவந்தது. பைனான்ஸ் நடத்தி வரும் பஞ்சாட்சரம் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், உரிய ஆவண் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் அறிவித்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்தை தடுக்கும் வகையில் அரூர் தொகுதியில் திப்பம்பட்டி கூட்ரோடு, ஆண்டியூர், அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று இருமத்தூர் அருகே பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, நாவலன், ரவிகுமார், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மினிடோர் வாகனத்தை சோதனை செய்ததில் சித்தன் கொட்டாயை சேர்ந்த கணேசன் (30) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 73 ஆயிரத்து 900 பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் பட்டுகூடு விற்பனை செய்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆர்.டி.ஒ. புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே கும்மளாபுரம் சோதனை சாவடியில், வாகன சோதனை அலுவலர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், காவலர் அனிதா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உலிவீரனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 950 பணம் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளியிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி. பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

மேலும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க. தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் கூட மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். அப்போது தமிழக பிரச்சனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜி.எஸ்.டி பிரச்சனையும் தீரும்.
இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #Kanimozhi
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
கடந்தமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. திருவள்ளூர் (தனி)- காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன்.
2. கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லகுமார் அல்லது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
3. ஆரணி- முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அல்லது அவரது மகன் விஷ்ணு பிரசாத்.
4. கரூர்- ஜோதிமணி
5. திருச்சி- திருநாவுக்கரசர்
6. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
7. தேனி- ஜே.எம்.ஆரூண்
8. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
9.கன்னியாகுமரி- எச்.வசந்தகுமார், ரூபி மனோகரன், ராபர்ட் ப்ரூஸ்.
10. புதுச்சேரி- ஏ.வி.சுப்பிரமணியம் #LSPolls #Congress
சென்னை:
நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க. - தே.மு.தி.க. தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி. க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. என்றாலும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்று கொண்டதாக தெரிகிறது. வட சென்னையில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்திருந்தது.
ஆனால் தே.மு.தி.க. வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் வடசென்னையை விட்டு கொடுத்துள்ளது. தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நாளை அல்லது நாளை மறுநாள் 18-ந்தேதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து அறிவித்து விட்டதால் இன்னும் தாமதம் செய்யக்கூடாது என அ.தி. மு.க. முடிவு செய்து நாளை (17-ந்தேதி) அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விருப்பப்படி கொடுக்கப்பட்டதால் வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்துள்ளனர்.
வடசென்னையில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நிறுத்தப்படுகிறார்.

கள்ளக்குறிச்சியில் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன் அறிவிக்கப்படுகிறார்.
விருதுநகர் தொகுதியில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா சேட் அல்லது அழகர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா நிற்கவில்லை. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களம் இறங்குகிறார். #parliamentelection #dmdk #lksudhish
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
ராகுலின் இந்த பயணத் திட்டம் மிகவும் ரகசியமாக இருந்தது. ஒருநாள் முன்பு தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே தெரியவந்தது.
ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சில நாட்களாவே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கல்லூரி கல்வித்துறை அந்த துறையின் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவிகளிடம் கலந்துரையாடியதில் எந்த தவறும் இல்லை.

ராகுல் கேட்ட எந்த கேள்விக்கும் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட கோபம், மக்கள் மத்தியில் ராகுலுக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட வெறுப்பு, பயம் காரணமாக கல்லூரியை மிரட்டுகிறார்கள்.
பா.ஜனதா போல் நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டுவது கிடையாது. மக்கள் ராகுல் பக்கம் திரளுகிறார்கள். அதனால் ஏற்பட்ட பொறாமையால் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை முடிவு செய்துள்ளனர். யார்-யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து இரண்டொரு நாளில் அறிவிக்கும்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு பிரசாரம் பற்றி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Kushboo #Congress
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புராணங்களை விளக்கக்கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள் பிரகாரத்தில் வரையப்பட்டிருந்தது.
அதில் தாமரைப்பூக்கள் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என கருதிய ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதனை அழிக்குமாறு கோவில் செயல் அலுவலரிடம் கூறி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சுண்ணாம்பு கலவையால் தாமரை பூ சின்னத்தை அழித்தனர். அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தாமரை சின்னம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரக்கூடும் என கோவில் நிர்வாகத்திடம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவுரைதான் கூறியுள்ளார். கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனர். யாரும் கோவில் நிர்வாகத்திடம் வற்புறுத்தவில்லை. தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார். #LSPolls SrivilliputhurTemple






