என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.
இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.

முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வில்லை.
இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.
தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். இதுபோல் விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.
திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரன், மனு கொடுத்தார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். இன்று மாலைவரை மனுக்கள் பெறப்பட்டன. #kushboo #elangovan #parliamentelection
திருச்சி:
திருச்சி கரூர் சாலை குட முருட்டி பாலம் சோதனை சாவடி அருகில் இன்று காலை திருச்சி தேர்தல் பறக்கும் படை ஏ பிரிவு அதிகாரிகள் தனி வட்டாட்சியர் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 1008 பித்தளை செம்புகள், 500க்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தது. அவை எங்கு எடுத்து செல்லப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் வந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செல்வதாகவும் கூறினர். மேலும் அந்த செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பித்தளை செம்புகள், சங்குகள் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 1008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முக வேலனிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராணி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தை சோதனையிட்டதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சிவா(32) என்பவர் 100 எண்ணிக்கையிலான வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
1. கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு)
2. கே.பி.ராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
3. ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)
4. அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)
5. இளங்கீரன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
6. கிருஷ்ணன் (ஏரிநீர் பாசன சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)
7. பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)
8. கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).
9. சரவணன் (இயற்கை வேளாண்மை சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)
10. வெங்கடபதி (தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)
11. விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)
12. நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
13. ராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)
14. ஜெனார்த்தன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
15. சுதர்சனம் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
16. சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்கம், ராமநாதபுரம்)
17. செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
18. அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
19. ராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை)
20. ரகுபதி (ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
21. சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
22. லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)
23. திருப்புலிவனம் திருவேங்கடம் (அனைத்து பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).
24. சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சர்க்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).
25. ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)
26. மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)
27. ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்). #LSPolls #DMK
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் தேர்தலை சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது.
தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், ஜாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அவர் வடக்கே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற அதே நேரத்தில் இந்தியாவின் தென் பகுதியாக விளங்குகிற தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று லட்சோபலட்சம் மக்களின் சார்பாகவும், மதச்சார்பற்ற சக்திகளின் சார்பாகவும் அவரை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக ராகுல்காந்தியை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #RahulGandhi #KSAlagiri #LSPolls
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்தன. இதற்கு முந்தைய பல சட்டசபை தேர்தல்களிலும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
கடந்த சட்டசபை தேர்தலிலும் அதேபோல தனியாக போட்டியிட்டதால் அது பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அங்கு பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது.
முன்னதாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிக்குமே பொது எதிரியாக பாரதிய ஜனதா உள்ளது. எனவே பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் அங்கு இப்போது கூட்டணி அமைத்துள்ளன.
கடந்த காலத்தில் கூட ஒரு தடவை சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. 1992-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை காரணம் காட்டி பாரதிய ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு 1993-ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ராமர் கோவில் பிரச்சனையால் பாரதிய ஜனதா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முலாயம் சிங் முதல்-மந்திரி ஆனார். ஆனால் 1995-ம் ஆண்டு அதாவது ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம் சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டது.
அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் மாயவதி தங்கி இருந்தார். அவரை சமாஜ்வாடி தொண்டர்கள் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது மாயாவதிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருபோதும் மாயாவதி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேரவே இல்லை. இரு கட்சிகளுமே நிரந்தர பகையாளி போல செயல்பட்டு வந்தன. அதே நேரத்தில் மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து 3 தடவை ஆட்சி அமைத்தார்.
ஆனால் இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். இதுவரை சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை ஆதரித்து மாயவதி வருகிற 19-ந்தேதி மைன்புரியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாடி கூட்டணி அமைத்ததை முலாயம்சிங் விரும்பவில்லை. இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டபோது, சமாஜ்வாடி கட்சியை விட பகுஜன் சமாஜ் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்றது. இது முலாயம்சிங்குக்கு அதிருப்தியை எற்படுத்தி இருந்தது. அதுபற்றி எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் முலாயம்சிங்குக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், முலாயம்சிங்குக்கு கட்சி தொண்டர்கள் உரிய கவுரவம் அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி போஸ்டர்களில் கன்சிராமுக்கு இணையாக முலாயம்சிங் படமும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாயாவதியும் அகிலேஷ் யாதவும் 11 இடங்களில் ஒன்றாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர் . #LSPolls #Mayawati #MulayamSingh
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 18 தொகுதி இடைத்தேர்தல் நேர்காணல் நடைபெற உள்ளது.
அதன் பிறகு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை பற்றியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.
சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami #OPS
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வெற்றி வாய்ப்பு உள்ள தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்மா, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இத்தகவலை பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளார்.

செல்வாக்கு மிக்க மாநில அமைச்சரான டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயர் வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. அவர் தேஜ்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகிய சர்மா, தேசிய கட்சியில் சேர உள்ளதாக கூறி உள்ளார். அவர் காங்கிரசில் சேர்ந்து தேஜ்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. #AssamBJPMP #RPSharma
தமிழ்நாட்டில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.
இதற்கு அவர் காங்கிரசின் சக்தி திட்டத்தின் மூலம் நவீன முறையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குரலில் உங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்பது போன்ற குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குரல் பதிவு சக்தி திட்டத்தில் இணைந்துள்ள அனைவரது போன்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதைக் கேட்டு உங்கள் தொகுதியில் இவரை வேட்பாளராக போடுங்கள் என்று தொண்டர்கள் பதிவு செய்யும் வேட்பாளர் பெயர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக பதிவாகிறது.

தற்போது சக்தி திட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்துள்ள தொண்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-
திருவள்ளூர் பத்தாயிரத்து 64, கன்னியாகுமரி 38 ஆயிரத்து 298, ஆரணி 11 ஆயிரத்து 451, சிவகங்கை ஒன்பதாயிரத்து 979, கிருஷ்ணகிரி 5 ஆயிரத்து 564, தேனி 5 ஆயிரத்து 225, கரூர் நாலாயிரத்து 820, விருதுநகர் மூவாயிரத்து 603, திருச்சி 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 53.
இவர்கள் அனைவரிடமும் போன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. முதல் முறையாக இந்த புதிய முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜி.கே.வாசனின் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எந்த கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பது குறித்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
முதலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சந்தித்து பேசினார்கள். பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். என்றாலும் தொகுதிகளை முடிவு செய்வதில் எந்த சுமூக தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3-வது நாளாக அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நீடித்தது.
தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜனதா 3 கட்சிகளும் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டுகின்றன. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் இந்த 3 கட்சிகளும் மிக மிக தீவிரமாக உள்ளன. இதனால்தான் தொகுதிகளை பெறுவதில் சமரசம் ஏற்படாமல் உள்ளது.
தே.மு.தி.க.வுக்கு வட சென்னை தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வடசென்னைக்கு பதில் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி தொகுதி பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். அதுபோல கள்ளக்குறிச்சி தொகுதியை பெறுவதிலும் தே.மு.தி.க. -பா.ம.க. இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.
மேலும் ஆரணி தொகுதிக்கு பதில் நாமக்கல் தொகுதியை தாருங்கள் என்றும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. கேட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சிவகங்கை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளையும் பா.ஜனதா தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நீலகிரி தொகுதியை பா.ஜனதா விரும்பவில்லை. அதற்கு பதில் ராமநாதபுரம் தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளார்கள். அவர்கள் நீலகிரிக்கு பதில் ராமநாதபுரம் தொகுதியை கேட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்களிடமும் தேர்தலில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. இதுவும் தொகுதியை உறுதிப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், அரசகுமார் ஆகிய 4 பேரும் எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்று டெல்லி தலைவர்களை நெருக்கியபடி உள்ளனர்.
வானதி சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மூலமாக டிக்கெட்டை உறுதி செய்ய போராடியபடி இருந்தார். நயினார் நாகேந்திரன் மாநில தலைவர்கள் உதவியுடன் காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய இயலாதபடி அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர்கள் தங்களுக்கு வடசென்னை தொகுதி வேண்டாம் என்று கூறி வருகிறர்கள். அதற்கு பதில் திருவள்ளூர் தொகுதியை தாருங்கள் என்று அ.தி.மு.க.விடம் வலியுறுத்தியபடி உள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தையில்தான் தங்களது விருப்பம் நிறைவேறவில்லை. தொகுதி பங்கீட்டிலாவது தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.விலும் 20 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். சில தொகுதிகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பிடிவாதமாக விட்டுக் கொடுக்க மறுத்து வருகிறார்கள்.
தஞ்சை, வேலூர், தென்காசி, புதுச்சேரி ஆகிய 4 தொகுதிகள் மட்டுமே தற்போது பிரச்சினை இல்லாமல் முடிந்துள்ளது. மற்றபடி பா.ம.க.வின் 5 தொகுதிகளும், பாரதிய ஜனதாவின் 4 தொகுதிகளும், தே.மு.தி.க.வின் 2 தொகுதிகளும் உறுதியாகி விட்டன.
5 தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில்தான் சமரசம் ஏற்படாத நிலை காணப்படுகிறது. இன்று மாலைக்குள் இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டது” என்றார்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகிறார்கள். இன்று மாலைக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டால் இன்று இரவே யார்-யாருக்கு எந்த தொகுதி என்பதை அறிவிக்க அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இல்லையெனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்து விட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. கூட்டணி பேச்சு இழுபறியாக நீடித்ததுபோல் இல்லாமல் தொகுதி பங்கீட்டை திங்கட் கிழமைக்குள் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். நாளை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டை முடித்தால்தான் நல்லது என்ற நிர்ப்பந்தம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடித்தால்தான் அடுத்தக்கட்டமாக வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த முடியும். அ.தி.மு.க.வில் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தொகுதி எது-எது என்று தெரிந்து விட்டால் வேட்பாளர்களை அறிவித்து விடலாம் என்ற நிலையில் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.
அதுபோல பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க தயார் நிலையில் உள்ளன. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டால் வேட்பாளர்களும் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நாளை காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. அது முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் பாராளுமன்ற தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
எனவே அ.தி.மு.க. கூட்டணியில் நாளை முதல் விறுவிறுப்பான தேர்தல் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 11-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன. பா.ஜனதாவின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாக உள்ளன.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில் மோடி ஆலோசனையின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போதைய பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களுக்கு செய்த பணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் பா.ஜனதாவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP #NarendraModi
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElections #VijayakanthEPS
புதுடெல்லி:
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு மே மாதம் 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் முதலில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு வேட்பாளர்கள் பெயரையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் நிச்சயமாக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற இயலாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உணர்ந்தார். எனவே தனித்து போட்டியிட அவருக்கு தயக்கம் ஏற்பட்டது.

மீண்டும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று ஆலோசித்து வருகிறார். இதற்காக அவர் சக்தி செயலி மூலம் டெல்லியில் உள்ள சுமார் 52 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லது என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மி தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.
இதற்கிடையே காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடவும் ஒரு தொகுதியை பொது வேட்பாளருக்கு கொடுக்கலாம் என்றும் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த மாத இறுதி வரை டெல்லியில் வேட்பாளர்களை அறிவிக்க அவகாசம் உள்ளது. எனவே இரு கட்சி தலைவர்களும் நிதானமாக முயற்சித்து வருகிறார்கள். #congress #aap #parliamentelection






