என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மு.க.அழகிரியை இன்று நிருபர்கள் சந்தித்தனர்.

    அப்போது அவரிடம் பாராளுமன்ற தேர்தலில் உங்களது நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒருவாரம் கழித்து உங்களிடம் (நிருபர்களிடம்) நானே விரிவாக பேசுகிறேன் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் உங்களை சந்தித்து ஆதரவு கேட்பதாக கூறி உள்ளாரே? என்று மு.க.அழகிரியிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக அவர் என்னை சந்தித்தால் சந்திப்பேன். அதில் தவறில்லை என்று கூறினார்.

    தி.மு.க. வெற்றி குறித்து கேட்டபோது, இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன் என்றார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - திமுக கட்சிகள் 8 தொகுதிகளில் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகின்றன. #Election2019 #ADMK #DMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக-வும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. அந்த தொகுதிகள் விபரம் வருமாறு:-

    1. சேலம் 2. பொள்ளாச்சி 3. திருவண்ணாமலை 4. நீலகிரி (தனி) 5. திருநெல்வேலி 6. மயிலாடுதுறை 7.காஞ்சிபுரம் (தனி) 8. தென்சென்னை

    அதிமுக.வும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னமும், உதயசூரியன் சின்னமும் நேரடியாக 11 இடங்களில் களத்தில் மோதுகின்றன.

    பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அதிமுக இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறது. இங்கு திமுக போட்டியிடுகிறது.

    இரட்டை இலை 21 தொகுதிகளிலும், உதயசூரியன் 23 தொகுதிகளிலும் (விழுப்புரம்) போட்டியிடுகிறது.

    பாமக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே 6 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் வருமாறு:-

    மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர்.

    விழுப்புரம் (தனி) தொகுதியில் பா.ம.க. - விடுதலை சிறுத்தைகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும், தூத்துக்குடியில் திமுகவுடனும், ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக்குடனும், கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடனும் மோதுகிறது.

    தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் திமுகவுடனும் திருச்சி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் மோதுகிறது.

    தஞ்சாவூர் தொகுதியில் தமாகா-வுக்கும், திமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் திமுகவும், புதிய தமிழகமும் நேரடியாக மோதுகிறது.

    அதிமுக மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடனும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டுடனும் மோதுகிறது.

    காங்கிரஸ் - அதிமுக இடையே 5 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதன்விபரம்:-

    திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி,

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் (தனி), தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.

    ஈரோட்டில் அதிமுக-வுக்கும் மதிமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
    வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வாடிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு வராவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் மலர்விழி தலைமையில் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் இறங்கினர். வாடிப்பட்டி சந்தை பாலம் அருகே கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகைதீன்அப்பாஸ் (வயது39) ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 450 வைத்திருந்தார். அதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்தனர்.

    எலுமிச்சை வியாபாரியான நான் கோவையில் பணம் வசூல் செய்து வருகிறேன் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறியதை ஏற்கவில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

    திருமலை:

    திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

    போலவரம் அணை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடியும். போலவரம் அணை திட்டப்பணிகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்தத் திட்டத்தை முடித்து விரைவில் மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்படும். போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரம் அமைய எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். ஏழுமலையான் அருளால் தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் எங்களின் குலதெய்வம். நான் திருப்பதியில் படிக்கும்போதே அரசியலில் குதித்து விட்டேன். அன்று தொடங்கிய எனது அரசியல் பணி, இன்னும் தொடர்கிறது. நான் எப்போதும் ஏழுமலையானை நினைத்துத்தான் எந்தச் செயலையும் செய்வேன். ஏழுமலையானின் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும். வெடிகுண்டு வைத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதில் நான் ஏழுமலையானின் அருளால் உயிர் தப்பினேன். அவர், என்னை காப்பாற்றி விட்டார். எனினும் நான் ஆந்திராவின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டு வருகிறேன்.

    ஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது.

    மாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியிலும், 25 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty

    லக்னோ:

    உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தலா 38 தொகுதியில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியை அவர்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை.

    ஆனால் அமேதி, ரேபரேலியில் மட்டும் போட்டி இல்லை என்றும் அறிவித்தனர். இந்த தொகுதிகளில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவதால் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த வில்லை என்று தெரிவித்து இருந்தனர்.

    கடந்த மகளிர் தினத்தன்று அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள். கண்ணூஜ் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ், அசம்கார்க் வேட்பாளராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதே போல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நஜினா அல்லது அம்பேத்கர்னாகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

    ஆனால் தற்போது கட்சி தலைவர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    அவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் போட்டியிட வில்லை. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 11 பிரசார ஊர்வலங்கள் நடத்த மாயாவதி திட்டமிட்டு இருக்கிறார்.

    இதேபோல் அவர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 30 பிரசார ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். #Samajwadi #BahujanSamajParty

    திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. #Election2019
    திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது.

    சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Rahulgandhi #Kushboo

    சென்னை:

    திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார் குஷ்பு பெயரில் விருப்ப மனுவை கொடுத்தார்.

    இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே பேச்சு அடிபட்டது. தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தென் சென்னை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


    எனவே அவர் திருச்சி தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தினரும் கலந்து வாழ்கிறார்கள். முக்கியமாக குஷ்புவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதி. அவர் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் தீவிரமாக இருந்தார்கள். எனவே திருச்சி தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.

    ஆனால் இதுபற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திருச்சி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் போட்டியிட விரும்புகிறார்.

    இதுபற்றி குஷ்புவிடம் கேட்ட போது, நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் செய்ய வில்லை. ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். ஒரு வேளை நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் கட்டளைவிட்டால் போட்டியிடுவேன் என்றார். #Rahulgandhi  #Kushboo

    அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் விவரங்களை துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று அறிவித்தார். #Election2019 #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

    அதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

    1. சேலம், 2. நாமக்கல், 3. கிருஷண்கிரி, 4. ஈரோடு, 5. கரூர், 6. திருப்பூர், 7. பொள்ளாச்சி, 8. ஆரணி, 9. திருவண்ணாமலை, 10. சிதம்பரம், 11. பெரம்பலூர், 12. தேனி, 13. மதுரை, 14. நீலகிரி, 15. திருநெல்வேலி, 16. நாகை, 17. மைலாடுதுறை, 18. திருவள்ளூர், 19. காஞ்சீபுரம், 20. சென்னை தெற்கு.

    பாமக போட்டியிடும் தொகுதிகள்:-

    1. தர்மபுரி, 2. விழுப்புரம், 3. அரக்கோணம், 4. கடலூர், 5. மத்திய சென்னை, 6. திண்டுக்கல், 7. ஸ்ரீபெரும்புதூர்

    பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள்:-


    1. கன்னியாகுமரி, 2. சிவகங்கை, 3. கோவை, 4. ராமநாதபுரம், 5. தூத்துக்குடி




    தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:-

    1. கள்ளக்குறிச்சி, 2. திருச்சி, 3. சென்னை வடக்கு, 4. விருதுநகர்.

    என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரியிலும், தமாக தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதியதமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன.
    அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்டார். #AMMK
    2019 மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக  24 பாராளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டார்.

    மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்:-

    1. திருவள்ளூர்-  பொன்.ராஜா
    2. இசக்கி சுப்பையா - தென் சென்னை
    3. ஸ்ரீபெரும்பதூர் - ஜி தாம்பரம் நாராயணன்
    4. காஞ்சிபுரம் - முனுசாமி
    5. விழுப்புரம்- வானூர் என் கணபதி
    6. நாமக்கல்- பிபி சாமிநாதன்
    7. ஈரோடு - கேசி செந்தில் குமார்
    8. நெல்லை - ஞான அருள் மணி
    9. கரூர் - என் தங்கவேல்
    10. திருச்சி - சாருபாலா தொண்டைமான்
    11. பெரம்பலூர்- எம். ராஜசேஎக்ரன்
    12. சிதம்பரம்- ஏ.இளவரசன்
    13. மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன
    14. நாகப்பட்டினம்- செங்கொடி
    15. தஞ்சாவூர் - முருகேசன்
    16. சிவகங்கை- தேர்போகி வி பாண்டி
    17. மதுரை- டேவிட் அண்ணாதுரை
    18. ராமநாதபுரம்- வது.ந ஆனந்த்
    19. தென்காசி  - ஏஎஸ் பொன்னுதாய்
    20. திருநெல்வேலி- ஞான அருள் மணி
    21. நீலகிரி - எம். ராமசாமி
    22. திருப்பூர்- செல்வம்,
    23. கோவை - அப்பாதுரை
    24. பொள்ளாச்சி - முத்துக்குமார்
    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaElections2019 #ElectionCommission
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட்டது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் கமிஷன் விளக்கம் கோரி உள்ளது. பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்கம் கோரப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் பிரசாரங்களை கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் நடத்த அந்தந்த கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே தேர்தல் பிரசாரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது.

    எனவே இந்த புகாருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷிடம் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அவரது விளக்கத்துக்கு பிறகு அதில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

    தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனைகளில் 15-ந் தேதி வரை, ரூ.4.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 15-ந் தேதி ஒரு நாளில் மட்டும் ரூ.73.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.28 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.93.62 லட்சமும் பறிமுதல் ஆகி உள்ளது.

    ‘சிவிஜில்’ என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்வது, புகார்கள் அளிப்பது போன்றவற்றுக்காக 297 புகார்கள் பெறப்பட்டன. இந்த செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

    சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தால் ‘சிவிஜில்’ செயலியில் புகார் செய்யலாம். அந்த வகையில் 38 புகார்கள் பெறப்பட்டு அவை சரிசெய்யப்பட்டன. 81 விளம்பரங்கள் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கைவிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட 8 லட்சம் விண்ணப்பங்களில் 66 சதவீத விண்ணப்பங்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள 2.75 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

    புகார் அளிப்பதற்கான 1950 என்ற கட்டணமில்லாத போன் எண்ணுக்கு இதுவரை 44 ஆயிரத்து 240 அழைப்புகள் பெறப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுடன் தலைமைச் செயலகத்தில் 18-ந் தேதி (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.

    எனது தலைமையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமைகள், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அம்சங்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அங்குள்ள போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய தகவல் வந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேர்தல் நடத்தை விதிகள் மீறுபவர்கள் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு வீடியோ மூலம் பொதுமக்கள் புகார்கள் அளித்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார். #LSPolls
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 5 நாட்களில் மொத்தம் ரூ.4 கோடியை 86 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 73 லட்சம் ரூபாய் அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றி பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். இதற்காக தனி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த செயலி பற்றி அறிந்ததும் ஏராளமான பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை வீடியோவில் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 297 பேர் வீடியோ மூலம் தேர்தல் புகார்களை அளித்துள்ளனர்.

    அந்த புகார்களில் 38 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 81 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை தைரியமாக வீடியோ மூலம் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

    பொதுமக்களுக்கு உதவும் வகையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள 1950 என்ற உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண் மூலம் வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

    நேற்று வரை 48 ஆயிரத்து 155 பேர் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுள்ளனர். இந்த உதவி எண் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் தேர்தலை முன்னிட்டு சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் தேடப்பட்டு வந்தார்கள்.

    அவர்களில் 5,694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள கல்லூரியில் பங்கேற்ற கூட்டம் பற்றி பாரதிய ஜனதா புகார் அளித்துள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமி‌ஷனரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் பதில் அளித்ததும் அதுபற்றி தெரிவிக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.டி.,எஸ்.சி. பிரிவினர் ரூ.12,500 செலுத்த வேண்டும்.

    சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி செலான் மற்றும் ரொக்கப் பணமாக டெபாசிட் செலுத்தலாம். காசோலை ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls
    தமிழகத்தில் 18 தொகுதியுடன் 3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தது. #DMK #TNByPoll #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்தது.



    இந்த நிலையில் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து 2 வாரத்தில் தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் 18 தொகுதியுடன் 3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தது. திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் மனுவை அளித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடரப்பட்ட வழக்குக்கு விரைந்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனை கேட்டுக் கொண்டதாகவும், அதனை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததாகவும் திருச்சி சிவா தெரிவித்தார். #DMK #TNByPoll #ElectionCommission
    ×