search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் -  சந்திரபாபு நாயுடு
    X

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் - சந்திரபாபு நாயுடு

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

    திருமலை:

    திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

    போலவரம் அணை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடியும். போலவரம் அணை திட்டப்பணிகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்தத் திட்டத்தை முடித்து விரைவில் மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்படும். போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரம் அமைய எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். ஏழுமலையான் அருளால் தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் எங்களின் குலதெய்வம். நான் திருப்பதியில் படிக்கும்போதே அரசியலில் குதித்து விட்டேன். அன்று தொடங்கிய எனது அரசியல் பணி, இன்னும் தொடர்கிறது. நான் எப்போதும் ஏழுமலையானை நினைத்துத்தான் எந்தச் செயலையும் செய்வேன். ஏழுமலையானின் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும். வெடிகுண்டு வைத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதில் நான் ஏழுமலையானின் அருளால் உயிர் தப்பினேன். அவர், என்னை காப்பாற்றி விட்டார். எனினும் நான் ஆந்திராவின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டு வருகிறேன்.

    ஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது.

    மாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியிலும், 25 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×