என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். #LSPolls #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் வேணுகோபாலும், தென் சென்னையில் ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும், நாமக்கல்லில் காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு என்ற ஜி.மணிமாறன், திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், நீலகிரி தியாகராஜன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கரூரில்  தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியும், சிதம்பரத்தில் பொ.சந்திரசேகர், மயிலாடுதுறையில் எஸ். ஆசைமணியும், நாகப்பட்டினம் ம.சரவணனும், மதுரையில் விவிஆர் ராஜனும், தேனியில் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். #LSPolls #ADMK
    18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

    பெரம்பூர் - ஆர்.டி.சேகர், சோளிங்கர் - அசோகன், சாத்தூர் - சீனிவாசன், விளாத்திக்குளம் - ஜெயகுமார், பரமக்குடி - சம்பத்குமார், திருப்போரூர் - செந்தில் என்ற இதயவர்மன், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை - சவுந்தரபாண்டியன், திருவாரூர்- பூண்டி கலைவாணன், ஆம்பூர் - விஸ்வநாதன், குடியாத்தம் - காத்தவராயன், ஓசூர் - சத்யா, பாப்பிரெட்டிப்பட்டி - மணி, ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன், பெரியகுளம் - கே.எஸ்.சரவணகுமார், தஞ்சாவூர் - நீலமேகம், அரூர் - கிருஷ்ணகுமார் மானாமதுரை - கரு காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், இடைத்தேர்தலை சந்திக்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளராக கே.வெங்கடேசன் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

    இதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.


    அதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LSPolls #DMK #MKStalin
    ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

    ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.

    தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துவல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.


    குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சந்திரமவுலி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத்தலைவருமான டகுபதி வெங்கடேஸ்வர ராவ் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புர்ச்சூர் சட்டசபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 43 பேருக்கு இந்தமுறை சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 தொகுதிகளும், சிறுபான்மையினத்தவர்களுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls
    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். #Congress

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.

    காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.

    இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.

    தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress

    அதிமுக தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.

    நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

    நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

    4 கட்டங்களாக நடைபெறும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கோரேய் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக காஜல் நாயக் என்ற திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளார். #BSPtransgendercandidate #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத்தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.



    நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என காஜல் நாயக் குறிப்பிட்டுள்ளார். #BSPtransgendercandidate  #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பிடிக்காததால் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் காங்கிரசில் இணைந்தார். #tamilmaanilacongress #congress #gkvasan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் பா.ஜனதாவும் இடம் பெற்று இருப்பதால் த.மா.கா. நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கே.கே.குருசாமி கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் நீக்கினார்.

    இதையடுத்து குருசாமி தனது ஆதரவாளர்கள் 150 பேருடன், பஸ்களில் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.பி. மாணிக்க தாகூர் செய்திருந்தார். #tamilmaanilacongress #congress #gkvasan

    தஞ்சையில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறார் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentelection

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணி என்பது ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடையும், தமிழக வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது மக்கள் நம்பிக்கை உடைய கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். வேட்பாளர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஆக இருப்பார்.

    எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். தஞ்சாவூர் தொகுதி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அதுபோக 38 தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்கள் கட்சி கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள்.

    த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.

    திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் கண்மூடித்தனமாக குறைகளையும் ஆட்சியாளர்கள் பற்றிய தவறான தகவலைக் கூறி வருகிறார்கள் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை அதிமுக சாமானியர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது முதல்வரும் துணை முதல்வரும் சாமானிய மக்களின் தலைவராக உள்ளனர்.

    காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் கண்டிக்கத்தக்கது மிகவும் வருந்தத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை சிலர் அரசியலாக்குவது மக்கள் நம்ப மாட்டார்கள் அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஏன் இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தற்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது நல்ல வி‌ஷயமாகும் என்னை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டும். என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #parliamentelection

    மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரியில் இருந்து பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகள் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
    மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பறக்கும் படையினர் அந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக கவரிங் நகைகள் இருந்தன. ஆனால், பறக்கும் படையினரால் அது கவரிங் நகைகள் என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை. தங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்பியது. அதற்குள் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் பறிமுதல் என்ற செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.

    இதற்கிடையில் பறக்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பெட்டி பெட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், கலெக்டர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் இருந்த பொருட்களை நகை மதீப்பிட்டாளர்களை வதை்து ஆய்வு செய்தார்.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே!!! என்பது தெரிய வந்தது. மேலும், கடையின் பழைய பொருட்களும் இருந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.
    காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஒடிசா எம்.எல்.ஏ. பிரகாஷ் சந்திரா பெஹேரா மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். #OdishaMLA #PrakashChandraBehera #MLAjoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கான தேதி நெருங்கிவரும் நிலையில் உள்கட்சியில் சீட் கிடைக்காத தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் சிலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ் சந்திரா பெஹேரா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.



    ’சுமார் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக நான் பணியாற்றி வந்துள்ளேன். ஆனால், அக்கட்சியின் மாநில தலைமை எனக்குரிய முக்கியத்துவத்தை தரவில்லை.

    சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு எனது தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் தலைமையின் மீது எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது. அதனால் நான் பாஜகவில் இணைந்து விட்டேன்’ என இன்று செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பிரகாஷ் சந்திரா பெஹேரா தெரிவித்தார். #OdishaMLA #PrakashChandraBehera #MLAjoinsBJP
    நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி.யாக இருக்கும் பீகார் மாநிலம், பாட்னா சாகிப் பாராளுமன்ற தொகுதியில் இந்தமுறை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. #ShatrughanSinha #ShatrughanSinhacontest #PatnaSahib
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகரும், பா.ஜனதாவில் இருக்கும் அதிருப்தியாளரும், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனினும், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அவருக்கு பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்னும் பேச்சு பரவலாக உள்ளது.



    இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யார் யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது தொடர்பாக இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடலாம் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே தொகுதியில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கே.சின்காவை நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சர்ச்சை தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்கா, (கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும்) ‘நிலைமை எவ்வாறாக இருந்தாலும் மீண்டும்  பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்’ என தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். #ShatrughanSinha  #ShatrughanSinhacontest #PatnaSahib
    ×