என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மலைப் பகுதியில் மழை பெய்து திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்ப தால், மழை பெய்யும் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேறிச் சென்று கோவிலில் வழிபடுவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.

    இந்நிலையில், ஐப்பசி மாத சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனினும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பக்தர்கள் மலையேறிச் சென்று கோவிலில் வழிபட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார்.
    • விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியப்பட்டி பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த இருவர் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா ஆர்டர் செய்த நிலையில் சால்னா ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென சால்னா குழம்பில் ஏதோ மிதப்பது போல தெரியவர பரோட்டா சாப்பிட்டவர்கள் அதனை எடுத்து பார்த்த போது வெட்டுக்கிளி பூச்சியொன்று குழம்பில் செத்து மிதந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் காண்பித்து நடந்ததை கூறிய போது வழக்கம் போல ஓட்டல் ஊழியர்கள் பாத்திரங்களை மூடாத காரணத்தால் ஒன்றிரண்டு பூச்சி விழுந்திருக்கலாம் எனவும் அது ஒன்றும் செய்யாது எனவும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

    இதற்காக இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார். எனினும், இருவரும் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேய ஒவ்வாமை ஏற்பட்டு இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.ரெட்டியாபட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் சம்பவம் குறித்து வந்த புகாரையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற திருச்சுழி உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொண்டதில் சுகாதார குறைபாடு மற்றும் உணவு தயாரிப்பில் அலட்சியம் காரணமாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையென தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து இயங்கிய உணவகத்தை உடனடியாக மூட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வடக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதி கன மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அந்த வகையில் வத்திராயிருப்பை அடுத்த பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. 47.56 அடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் நேற்று வரை 18 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் இருந்தது.

    நேற்று பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்து தற்போது 24 அடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 212 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அந்த பகுதியில் மட்டும் நேற்று 26 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

    இதேபோல் கோவிலாறு அணை பகுதியில் 37.8 மி.மீட்டரும், வத்திராயிருப்பில் 12 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தீபாவளியை ஒட்டி, பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார்.
    • கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம்.

    * அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன்.

    * நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
    • நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.

    * நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

    * கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.

    * உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார்.
    • நண்பராக நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்க்கின்ற விஷயம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டும் அல்ல, அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.

    தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன். கூட்டணியில் இருந்து நான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டி கிரா மத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகி சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து பற்றி குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
    • திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என காரியாபட்டியில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

    இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சேர்மனின் சகோதரர் ஓட்டி சென்ற காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து அவர்களை அ.தி.மு.க.வினர் விரட்டி அடித்துள்ளனர்.

    முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு.
    • ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    சிவகாசி:

    சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அ.தி.மு.க. குறித்து பேசியது சிறுபிள்ளைத்தனமானது. எடப்பாடி பழனிசாமி தினசரி மாநாடு நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவரைப் போல பேசியுள்ளார். தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு. தேர்தலில் அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்க வாய்ப்பில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை கண்டு தி.மு.க.வே கண்டு அஞ்சும்போது ஒன்றரை வயதுள்ள தொட் டில் குழந்தையாக இருக்கின்ற விஜய்யும் அவரது கட்சியும் அ.தி.மு.க. குறித்து பேசுவது கேலிக்குரியது.

    வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.வெ.க.வுக்கு இடையேதான் போட்டி என்று அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். களத்தில் நிற்க முடியாது. இவரைப் போன்று பலரை பார்த்து விட்டோம். அ.தி.மு.க.வை சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் காணாமல் போய் உள்ளார்கள் என்பதற்கு தமிழக அரசியல் வரலாறு உள்ளது.

    ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. அவரது பேச்சில் கருத்துக்களும் இல்லை, மக்களை கவரக்கூடிய எதிர்கால திட்டங்களும் இல்லை. தமிழக அரசியலில் துருவ நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு உள்ளார். எங்களுடைய கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    மதுரை:

    த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×