என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழை எதிரொலி- சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை
- நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
- பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மலைப் பகுதியில் மழை பெய்து திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்ப தால், மழை பெய்யும் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேறிச் சென்று கோவிலில் வழிபடுவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஐப்பசி மாத சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனினும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பக்தர்கள் மலையேறிச் சென்று கோவிலில் வழிபட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






