என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவில் காவலாளிகள் கொலை வழக்கு - குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்த போலீசார்
- சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
- நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் வனப்பகுதியில் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பணியில் இருந்த காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இதில் தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவரிடம் நடந்த விசாரணையில் காவலாளிகளை கொன்று உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி (30) என்பவரும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறினார். அதனை கைப்பற்றுவதற்காக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கல்லணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக் டர் ரமேஷ் கண்ணா, நாகராஜின் வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






