என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழையால் 5 நாட்கள் தடை - சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த அமாவாசை பூஜை
    X

    தொடர் மழையால் 5 நாட்கள் தடை - சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த அமாவாசை பூஜை

    • தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணிக்குள் திரும்பி வர வேண்டும், இரவில் தங்கு வதற்கு அனுமதி இல்லை.

    கடந்த சில தினங்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 17-ந்தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோவிலுக்கு மலை ஏறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

    தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 18-ந்தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம், நேற்று தீபாவளி திருநாள், இன்று ஐப்பசி மாத அமாவாசை திருநாள் வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சில பக்தர்கள் மட்டும் அனுமதி உண்டா எனக் கேட்டனர். ஆனால் வனத்துறையினர் அனுமதி வழங்காததால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று அதிகாலையில் இருந்து சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையிலும் தண்ணீர் கூடுதலாக வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் இன்றி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    Next Story
    ×