என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
    • திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.

    * பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.

    * மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

    * திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    * அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

    * மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.

    * மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

    * திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

    • மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த வருடம் மே மாதம் 5-ந் தேதி எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தை 10 பேர் மற்றும் மரக்காணம் சம்புவெளி செல்லம் தெரு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபோல் 52 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    விஷசாரயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களது குடும்பத்தின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மதுவால் அவர்களது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு திருமாவளவன் எம்.பி. நிதி உதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுக்கடைகளை மூடுவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பாக சில அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை தோழமையோடு முன்வைக்கிறோம். விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல.

    மரக்காணத்தில் மீன் மார்க்கெட் மற்றும் மீன்பிடி துறைமுகம், தூண்டில் முள் வளைவு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.

    மேலும் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மரக்காணம் பேரூராட்சி சார்பில் இடம் வழங்கப்பட்டால் விழுப்புரம் எம்.பி. நிதியில் இருந்து மீன் மார்க்கெட் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடத்தக்கூடிய மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை. நாங்கள் இதை அரசியலோடு அணுகவில்லை. 100 விழுக்காடு அரசியல் கடந்து ஒரு சமூக பண்பாட்டு பிரச்சினையாக இதை பார்க்கிறோம்.

    இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இது நாட்டு நலனோடு மக்கள் நலனோடு தொடர்புடைய ஒரு பிரச்சனை.

    இதில் கூட்டணி கணக்குகளை போட வேண்டாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

    தி.மு.க.வும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ள கட்சி தான். அ.தி.மு.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிற கட்சிதான். இடதுசாரிகளுக்கும் இதிலே 100 விழுக்காடு உடன்பாடு உண்டு.

    பா.ம.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மட்டும் அல்ல எல்லோருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு இருக்கிற போது நாம் ஏன் அனைவரும் ஒருங்கிணைந்து அரசியல் அடையாளங்களை கடந்து கட்சி அடையாளங்களை கடந்து பேசக்கூடாது. குரல் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் முன்வைக்கிறோம் .

    கள்ளச்சாராயத்தை விற்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
    • குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்பர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்? எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

    குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

    த.வெ.க நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி, வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால், 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். மீதி வருபவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

    கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

    நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

    மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் மூடப்பட வேண்டும்.

    மின் ஒயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடாமல் தவிர்ப்பது நல்லது.

    மாநாடு மேடையின் அளவு என்ன ? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.

    விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மாநாடு முழுவதும், பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

    போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.

    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது.
    • கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இக் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடை பெற்றது. இதையடுத்து இரவு 11.30 மணிக்கு உற்சவர் அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு.

    விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 14ம் தேதி விர அவகாசம் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்களாக சேர்க்கப்பட்டு இதுவரை 51 சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இதனால் கூடுதல் சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாட்டு மேடை எவ்வளவு நீளம், அகலத்தில் அமைக்கப்படுகிறது. எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள் அவர்களுக்கு இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது. 85 ஏக்கர் நிலம் குத்தகை பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை டி.எஸ்.பி. சுரேஷ் விக்கிரவாண்டி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

    மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
    • கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.



    தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.

    ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.

    தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
    • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

    இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
    • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.

    முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.

    அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

    சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

    அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.

    தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    • குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவகரையை சேர்ந்தவர் கஸ்பர். இவரது மகள் அலானா(வயது6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

    அலானா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து வானூர் போலீசாருக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி அலானா உடலை மீட்டனர்.

    இது குறித்து வானூர் இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. கல் எடுத்து பின் அதனை மூடாமல் விட்டு சென்றதால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் பலர் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நள்ளிரவு நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    கடலூர் மாவட்டம் ராசாபாளையத்தை சேர்ந்தவர் கணேசன்( வயது 31 ).இவர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழி எண் 4-ல் பணியில் இருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றுக்கு சுங்கவரி செலுத்துவதற்காக பணியில் இருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோர் கார்டிரைவரிடம் சுங்கவரியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அதே மார்க்கத்தில் ஒரு லாரி காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, மேலும் அதே திசையில் வந்த முட்டை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துசுங்கச்சாவடி வழி எண் 4-ல் வரி செலுத்த நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் நின்று கொண்டிருந்த லாரி, காரின் மீது மோதி அங்கு வரி வசூல் செய்து கொண்டு இருந்த கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துக் குமாரை (வயது29) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணி செய்யாமல் வெளியில் நின்று பணி செய்வதால் இச்சம்பவம் நடந்ததாகவும், சுங்கச்சாவடியில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் என்று அங்கு பணி செய்யும் மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விபத்தில் பலியான கணேசனுக்கு அஞ்சலை தேவி என்ற மனைவியும் ஹரிஷ் என்ற மகனும் ரித்திஷா என்ற மகளும் உள்ளனர். சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×