என் மலர்
வேலூர்
ஆற்காடு:
வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் மாட்டு வியாபாரி. இவரது மகன் தமிழரசன் (வயது 26). கூலி வேலை செய்து வந்தார். நேற்று இரவு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்தநிலையில் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் அருகே சர்வீஸ் சாலை ஓரத்தில் வெட்டு காயங்களுடன் தமிழரசன் இறந்துகிடந்தார். அருகே பீர் பாட்டில்கள் கிடந்தன.
டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தமிழரசன் தலை, மார்பு, கழுத்து என பல்வேறு இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அவரை வெட்டியுள்ளனர். தப்பிக்க ஓடியதால் விரட்டி வெட்டியுள்ளனர். இதனால் சாலை தடுப்புகள் மற்றும் பல இடங்களில் ரத்தம் கறை படிந்துள்ளது.
போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழசரன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுருட்டுக்கார தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தலையில் கல்லை போட்டு சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்தனர். இது சம்பந்தமாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் 2 அடி-தடி வழக்குகள் உள்ளன.
முன்விரோத தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும்போது குடிபோதையில் தகராறு ஏற்பட்டு வெட்டி சாய்க்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது நண்பர்கள் யார் என்பது குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் ஷிம்பா கொண்டு போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து சென்னை நோக்கி தனியார் ஆஸ்பத்திரி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் வரை சிறிது தூரம் ஓடி சென்றது.
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 24). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.
ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கல்லிச்சேரியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (24).இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் தொடர்ந்து கள்ள சாராயம் விற்று வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராமன் விக்னேஷ்சை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் ஜெயிலில் இருந்த விக்னேஷிடம் குண்டர் தடுப்பு சட்ட நகலை நேற்று மாலை போலீசார் வழங்கினர்.
அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் அரக்கோணம், அம்மனூர், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.ம.மு.க. சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியும், துரோக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வினரை தோற்கடியுங்கள்.
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் அ.ம.மு.க.வை ஆதரித்து வாக்களியுங்கள்.
அப்போதுதான், ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.
இதில் முன்னாள் எம்.பி. கோபால், வேலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் என்.ஜி.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #assemblyelection
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோகுலன், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் துரைமுருகன் தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-
நான் காட்பாடி சட்டமன்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் இறப்பதற்குள் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பு மருத்துவமனை கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் சேலத்தில் இதுபோன்ற மருத்துவமனை உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது காட்பாடி தொகுதிக்கு நான் தனியாருக்கு நிகரான நவீன மருத்துவமனையை கொண்டு வருவேன். மருத்துவமனையை கட்டி முடிப்பேன் இதுவே என் லட்சியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார், ஈஸ்வரப்பன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கிங்ஸ்டன் கல்வி குழும நிறுவனர் கதிர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கழக புரவலர் துரைசிங்காரம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, உள்பட மாவட்ட ஒன்றிய நகர உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி கருணாநிதி நன்றி கூறினார். #duraimurugan #dmk #mkstalin
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த பாலி கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்கரதாரி (வயது 60). என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.
இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 7-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #nalinimurugan #rajivgandhi
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது (விவிபேட்) குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதி அளவிலான பயிற்றுனர்கள் மற்றும் விளக்க அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில் 5 பணியாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 13 தொகுதிகளுக்கு 91 வாகனங்கள் இருத்தல் அவசியமாகும்.
மாதிரி வாக்குச்சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாய கூடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் இடங்களில் நடத்தக்கூடாது. பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு குறித்து ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் 130 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில், தேர்தல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) பாலாஜி (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.
மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வியிடம் புகார் அளித்தனர்.
போலீசார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வேலூர் ஜெயிலில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
இவரை குண்டாசில் கைது செய்ய வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து பாலாஜியை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். நேற்று மாலை வேலூர் ஜெயிலில் உள்ள பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரில் விஸ்வநாதன் நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் இன்று அரியூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பிரகாசம், வாணியம்பாடி நகர வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ராஜ்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், சிப்காட்-பனப்பாக்கம் திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த தியாகராஜன், வாணியம்பாடி அம்பலூருக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் கவுரிசங்கர், ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அரிதாஸ், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இந்துமதி, கலவைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் காந்தி, ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராகவும், குடியாத்தம் (கிழக்கு) வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த சிவசங்கரன், கணியம்பாடி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ரேவதி, வேலூர் கலெக்டர் அலுவலக ‘ஜி’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த இந்துமதி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் உள்பட மாவட்டம் முழுவதும் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ராமன் பிறப்பித்துள்ளார்.






