என் மலர்
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இதுவரை விடுதலை கிடைக்காததால் முருகன் கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கணவருக்கு ஆதரவாக நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
சிறை விதிகளை அவர்கள் மீறியதால், பார்வையாளர்களை சந்திப்பது உள்பட சிறை சலுகைகள் அவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர் உண்ணாவிரதம் அவர்களை சோர்வடையச் செய்தது. டாக்டர்கள், ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தனர். அவ்வப்போது ஜெயில் அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நளினியை சந்திக்க அவரது தாயார் பத்மா வேலூர் சிறைக்கு வந்தார். நளினி, முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் நளினியை அவர் சந்திக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதையடுத்து நேற்று மாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, முருகன் மற்றும் நளினியிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். சிறைக்குள் உள்ள கோவில் பூட்டை சோதனை என்ற பெயரில் காவலர்கள் உடைக்கக்கூடாது என்ற முருகனின் கோரிக்கையையும், பரோல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நளினியின் கோரிக்கையையும் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் முருகன் உண்ணாவிரதத்தை இளநீர் அருந்தி கைவிட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்தித்து வருகின்றனர். உண்ணாவிரதத்தை நேற்று கைவிட்ட நிலையில் இன்று நளினி, முருகன் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது தற்காலிக நிறுத்தம் மீண்டும் அவர்கள் சந்திப்பு நடைபெறும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறை விதிகளை மீறி முருகன்-நளினியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் நளினியின் தாய் பத்மா (80). இன்று நளினியை சந்திக்க வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு வந்தார். அப்போது ஜெயில் அதிகாரிகள் நளினியை சந்திக்க தடை இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறினர்.
ஜெயில் அதிகாரிகள் நளினியை பார்க்க அனுமதிக்காததால் பத்மா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் முருகனை பார்க்கவும் ஜெயிலுக்கு சென்ற அவர் அங்கும் அனுமதியில்லாததால் திரும்பி சென்றார்.
அரக்கோணம் தாலுகா, மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன்கள் லோகநாதன், பாலகிருஷ்ணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார்.
இதனால் லோகநாதன், பாலகிருஷ்ணன் இருவரும் ராமலிங்கம் பெயரில் உள்ள சொத்துக்களின் பட்டாவை பெயர் மாற்றம் செய்துதர கோரி மோசூர் கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது திவாகர் பட்டா பெயர் மாற்றம் செய்துதர வேண்டுமானால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் தருவதாக லோகநாதன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன் இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரை தொடர்பு கொண்டு பணம் கொடுக்க எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை அலுவலகத்தில் வந்து கொடுத்து விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திவாகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இன்று காலை அதே போல் சங்கர் பார்கவியை பைக்கில் அழைத்து சென்றார். பள்ளிகொண்டா அருகே உள்ள ஐதர்புரம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது நிலை தடுமாறிய பார்கவி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி பார்கவி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதயம் சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கும் கிட்னி, கண்கள், ஆகியவை சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கினர்.
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சித்ரா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ரெட்டைமலை சீனிவாசன்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபராஜா. திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சினேகா (வயது 34). இவர்களுக்கு ஆதிரைநஸ்ரீன், ஆதிலாஐரீன், ஆரிபாஜெசி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
சினேகா வழக்கறிஞராக உள்ளார். இவரது பெற்றோர் ஆனந்தகிருஷ்ணன் - மணிமொழி தம்பதியினரும் வழக்கறிஞர்கள் தான். இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு சினேகாவை தவிர மும்தாஜ் சூரியா, ஜெனிபர் என 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் தங்களது மகள்கள் 3 பேரையும் பள்ளியில் சேர்க்கும்போதே சாதி, மதம் இல்லை என சேர்த்தனர். அதன்பிறகு மேற்படிக்கு செல்லும் போது, எல்லா இடங்களிலும் சாதி சான்றிதழ்கள் இவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கறிஞர் சினேகா சாதி அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி, மதம் அற்றவர் என எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்.

அதன்பலனாக சினேகாவுக்கு கடந்த வாரம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சாதி, மதம் அற்றவர் என சான்று அளிக்கப்பட்டது. இதுபோன்று சாதி, மதம் அற்றவர் என முதல் சான்று பெற்றவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சினேகா கூறியதாவது:-
ஆனந்தகிருஷ்ணன் மணிமொழி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் மூத்த மகள் நான்.
1-ம் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர். இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம். பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை.
என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் ஆகிய 2 பேரும் அவ்வாறே வளர்ந்தனர். என் திருமணமும் சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடந்தது.
ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்க்கிறோம். சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம். சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.
நீண்ட முயற்சியில் என்ன சாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். 10 ஆண்டுகளாக இதற்காக போராடினேன்.
எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன். லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும். சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்சிக்கான வலுவான விதை.
இவ்வாறு அவர் கூறினார். #Tirupatturwoman #NoCasteNoReligion

இந்த யாகத்தில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்தனர். இந்த ஹோமத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைபேரின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் அகல கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த யாகத்தில் உத்திரமேரூர் அருகில் உள்ள சதாசிவ பிரம்மேந்திர ஆசிரமத்தின் மாதாஜி அன்னபூரணி அம்மா கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் வருகிற 09.03.2019 சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க பிரகாரம் ராகு-கேது பெயர்ச்சி யாகம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காதலர் தினத்தை முன்னிட்டு நாளை 14-ந் தேதி வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள் மற்றும் உணவகங்களில் காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்புகளானது பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ValentinesDay
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அருகே உள்ள டி.வீரப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன், ஆசிரியர். இவரது மகன் சத்தியமூர்த்தி, ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1.4.2016 அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு சத்தியமூர்த்தி மொபட்டில் புறப்பட்டார். அப்போது குடியானகுப்பத்தை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் முருகன் மற்றும் ஒரு சிறுவன், சத்தியமூர்த்தியின் மொபட்டை மறித்து நிறுத்தினர். பின்னர் சத்தியமூர்த்தியிடம் மொபட்டை பறிக்க முயன்றனர்.
ஆனால் சத்தியமூர்த்தி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் சத்தியமூர்த்தியை அடித்து உதைத்து, கொலை செய்து அருகில் உள்ள ஏரியில் பிணத்தை தூக்கி வீசினார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரா.ரமேஷ் ஆஜரானார். நேற்று நீதிபதி டி.இந்திராணி வழக்கை விசாரித்து, முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.
இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-
வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.
ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.






