search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "no caste no religion"

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் சாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். #KamalHaasan #NoCasteNoReligion
    சென்னை:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன் பேட்டையை சேர்ந்தவர் சினேகா. வழக்கறிஞரான இவர் ‘சாதி, மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை போராடி பெற்று இருக்கிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார். பல்வேறு விசாரணைக்கு பின்னர் அவருக்கு திருப்பத்தூர் சார்-ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்கினார்.

    இது குறித்து சினேகா கூறும்போது, “பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கையின் போது என்ன சாதி என்று கேட்டனர். அப்போது எனக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பெற்றோர் கூறினர்.

    பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி, மதம் குறிப்பிட்டதில்லை. இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கும். எனது சகோதரிகள் இருவரின் பிறப்பு சான்றிதழ், பள்ளி- கல்லூரி சான்றிதழ்களிலும் இந்தியர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கும்” என்றார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி ஒரு சான்றிதழ் வாங்கி இருப்பதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதி சான்றிதழ் இருப்பதை போல சாதி,மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இந்த சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில், சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்கிறாய்’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து சினேகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.



    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வழக்கறிஞர் சினேகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். ‘தமிழ் மகள் சினேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா... புதுயுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம்பிடிப்போர்க்கு இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே. நிச்சயம் நமதே’’ என்று கமல்ஹாசன் ‘டுவீட்’ செய்துள்ளார். #KamalHaasan #NoCasteNoReligion
    திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் 10 ஆண்டுகளாக போராடி சாதி, மதம் அற்றவர் என அரசிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். #Tirupatturwoman #NoCasteNoReligion
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ரெட்டைமலை சீனிவாசன்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபராஜா. திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சினேகா (வயது 34). இவர்களுக்கு ஆதிரைநஸ்ரீன், ஆதிலாஐரீன், ஆரிபாஜெசி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    சினேகா வழக்கறிஞராக உள்ளார். இவரது பெற்றோர் ஆனந்தகிருஷ்ணன் - மணிமொழி தம்பதியினரும் வழக்கறிஞர்கள் தான். இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு சினேகாவை தவிர மும்தாஜ் சூரியா, ஜெனிபர் என 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் தங்களது மகள்கள் 3 பேரையும் பள்ளியில் சேர்க்கும்போதே சாதி, மதம் இல்லை என சேர்த்தனர். அதன்பிறகு மேற்படிக்கு செல்லும் போது, எல்லா இடங்களிலும் சாதி சான்றிதழ்கள் இவர்களிடம் கேட்கப்பட்டது.

    இருப்பினும் அவர்கள் தங்களது கொள்கையில் இருந்து மாறாமல் தொடர்ந்து சாதி, மதம் இல்லை என உறுதியுடன் இருந்து, தங்களது மேற்படிப்புகளை படித்து வந்தனர்.

     கணவர், குழந்தைகளுடன் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர் சினேகா.

    இந்த நிலையில் வழக்கறிஞர் சினேகா சாதி அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி, மதம் அற்றவர் என எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு சாதி சான்று கேட்டு எப்படி விண்ணப்பம் செய்வார்களோ? அதேபோன்று சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மூலமாக முயற்சியை மேற்கொண்டார்.

    சான்றிதழை படத்தில் காணலாம்.

    அதன்பலனாக சினேகாவுக்கு கடந்த வாரம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சாதி, மதம் அற்றவர் என சான்று அளிக்கப்பட்டது. இதுபோன்று சாதி, மதம் அற்றவர் என முதல் சான்று பெற்றவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சினேகா கூறியதாவது:-

    ஆனந்தகிருஷ்ணன் மணிமொழி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் மூத்த மகள் நான்.

    1-ம் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர். இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம். பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை.

    என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் ஆகிய 2 பேரும் அவ்வாறே வளர்ந்தனர். என் திருமணமும் சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடந்தது.

    ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்க்கிறோம். சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம். சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

    நீண்ட முயற்சியில் என்ன சாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். 10 ஆண்டுகளாக இதற்காக போராடினேன்.

    எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன். லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும். சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்சிக்கான வலுவான விதை.


    இவ்வாறு அவர் கூறினார். #Tirupatturwoman #NoCasteNoReligion
    ×