search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி

    தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #nalinimurugan #rajivgandhi #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×